யாதுமவன்

யாதுமவன்
~~~~~~~~~~~
ஆறு கரை தாண்டிடாமல்
அணையாகிக் காத்திருப்பான்
நீர்தேக்கி வைத்திருப்பான்
நிறைவாகத் தாகம் தணிப்பான்.

அடை மழைக்கும் சுடர்தனக்கும்
அணைத்துயிர்கள் காத்திடவே
சகதியாகி வீட்டிற்கு
சமதரையும் சுவராவான்

அறுசுவை சமைத்திறக்க சட்டியாகி
அது ஏற எரியுமொரு அடுப்பாவான்
பக்குவமாய்த் தணல் தனிப்பான்
பானையாகிக் குளிர்விப்பான்.

விதைக்கருவை அடைகாத்து
விரும்பியுண்ணப் பழம் தருவான்
வெட்டுப்பட்டால் மழலைக்கு
விரல்தடவும் மருந்தாவான்.

குழந்தைகளும் கொலுவைக்க
குட்டி சட்டி பானையாவான்
அலங்கார வீடுகளில்
அழகுமிகு பொம்மைகளாவான்.

அத்தனையும் ஆனபின்னே
ஆதரித்துக் கைதருவான்
அதனாலே நமக்கென்ன
அவன் வெறும் மண்தானே...

...மீ.மணிகண்டன்
#மணிமீ
08-22-2018
Photo By M Manikandan

எழுதியவர் : மீ.மணிகண்டன் (2-Sep-18, 11:46 am)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 586

மேலே