ஆசிரியர் மாயம்
......ஆசிரியர் மாயம்.....
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நும் கரங்கள் எதுவும் கொடுக்கவில்லை
எம் கரங்கள் எதுவும் எடுக்கவில்லை
பரிமாற்றம் எதுவும் நிகழாமல்
படிக்கச் செய்த மாயமென்ன ?
கொடுக்கக் குறையா கல்வியும்
அள்ளக் குறையா அறிவையும்
உயர்வை கொடுக்கும் ஒழுக்கமும்
ஒருங்கே கிடைத்த மாயமென்ன
கரும்பலகையில் எழுதி கணப்பொழுதில்
கச்சிதமாக அழித்த பின்னும்
மனதில் வந்து பதிவதற்கு
மாயம் ஏதும் செய்தீரோ
விதைகளை நீங்கள் விதைத்துவிட்டு
விளைச்சலை எமக்கே விட்டுத் தரும்
உயர்ந்த உள்ளம் உமக்கன்றி
உலகில் இங்கே யார்க்குண்டு
வகுப்பறை விட்டு போனபின்னும்
எம் செவிகளில் ஒலிப்பது நும்குரலே
பதிவே இல்லா என் மனதில்--இந்த
பதிவு ஏற்பட்ட மாயமென்ன ?
சுமந்த புத்தகம் எல்லாமே
சும்மா வீசி விட்ட பின்னும்
திறக்க முடியா மனதிற்குள்--அறிவை
பிறக்கச் செய்த மாயமென்ன ?
அறிவில் சிறந்த மூளைகளை
அறுவை செய்து எடுத்தேதான்
அடுத்த தலைமுறைக்கு பொருத்தும் வரை
ஆசிரியர் செய்யும் மாயம் மட்டும்
அகில உலகிற்கும் தேவைதானே
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹