கொடாஅது வைத்தீட்டி னார்இழப்பர் - நாலடியார் 10
நேரிசை வெண்பா
உடாஅதும் உண்ணாதும் தம்உடம்பு செற்றும்
கெடாஅத நல்லறமும் செய்யார் - கொடாஅது
வைத்தீட்டி னார்இழப்பர், வான்தோய் மலைநாட!
உய்த்தீட்டும் தேனீக் கரி. 10
- நாலடியார்
பொருளுரை:
வானத்தைப் பொருந்துகின்ற மலைநாட்டுத் தலைவனே!
நல்ல ஆடைகள் உடுக்காமலும், உணவுகள் உண்ணாமலும் தம் உடம்பு கெட்டுப் போனாலும் அழியாத சிறந்த புண்ணியம் செய்யாமலும், வறியவர்க்குக் கொடாமலும் பொருளைத் தொகுத்து வைத்தவர்கள் அதனை இழந்து விடுவர்;
பல பூக்களிலிருந்து கொண்டுபோய்த் தொகுத்து வைக்கும் தேனீக்களே அதற்குச் சான்று ஆகும்.
கருத்து:
அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர், ஒரு காலத்தில் தேனீயைப் போல அப்பொருளை இழந்து விடுவர்.
விளக்கம்:
கள்ளர் பகைவர் முதலியோரால் கட்டாயம் இழந்து விடுவர் என்பது கருத்து;
அதனால்தான், கட்டாயம் ஒரு காலத்தில் தான் தொகுக்குந் தேனை இழந்துவிடுந் தேனீ உவமையாயிற்று.
துறவோரைப் போல அங்ஙனம் வருத்திக் கொண்டாலும் அவர்போல் அறச்செயலேனுஞ் செய்கின்றனரோ என்றால் அதுவுமின்று என்பதற்குக். ‘கெடாதநல் அறமுஞ்செய்யார்' என்று அதன்பிற் கூறினார்.
மலைநாட என்று ஓர் ஆண்மகனை முன்னிலைப் படுத்திக் கூறும் முறைமையில் இச் செய்யுள் அமைந்தது.
இறுக்க நினைவினாற், பகை முதலியன உண்டாதல் பொருளைக் காக்கும் அறிவு மடம் படுதல் முதலாயின உண்டாதலின் அவை பொருளை இழத்தற்குக் காரணங்களாகும்.