போற்றப்படாத இதிகாசம் -பாலா---------------------------------------------------- டாக்டர் குரியன் வர்கீஸ், வெண்மைப்புரட்சி
அந்த இம்சை நீண்ட நாள் நீடிக்கவில்லை. ஆனால், இன்னும் நினைவிருக்கிறது. சிறு வயதில், குளிர்கால அதிகாலையில், பெற்றோரால் எழுப்பப்பட்டு, தோட்டத்திற்கு வெளியே தார் ரோட்டில், போர்வையைப் போர்த்திக் கொண்டு, மேற்கே பார்த்துக் காத்திருக்கும் வேலை எனக்கு. குளிர் காலத்தில், எங்களிடம் பால் வாங்கிப் போகும் பால்காரர், தார் ரோட்டில் இருந்து எங்கள் தோட்டச் சாலையில் இறங்காமலேயே, தப்பி ஓடிவிடுவார்.. வீட்டில் பால் தங்கி, தயிரும் மோருமாய்ச் சீரழியும். எனவே அவரைத் தடுத்தாட்கொள்ளும் வேலை எனக்கு. ஆனால், கொஞ்ச நாளில் இது நின்று விட்டது.
எங்கள் ஊர், தளவாய்ப்பேட்டையில், பால் சொசைட்டி என்று ஒன்று ஆரம்பிக்கப் பட்டது. அதிகாலை நான்கு மணிக்குக் கறக்கப் படும் பாலை, சாவகாசமாக ஆறு மணிக்கு என் தகப்பனார், சைக்கிள் கேரியரில் கட்டிக் கொண்டுபோய்க் கொடுத்து வருவார். கொஞ்சம் பாலை ஒரு கண்ணாடி ட்யூப்பில் எடுத்து அதன் கொழுப்பை அளக்கும் கருவி சொசைட்டியில் இருக்கும். கொடுக்கும் பாலின் அளவுக்கும், கொழுப்பின் அளவுக்கும் சேர்த்து, பால் விலை கணக்கிடப்படும். வாரம் ஒரு முறை, திங்கள் கிழமை, பால் பணம் பட்டுவாடா செய்யப் படும். அதன் பின், செவ்வாய்ச் சந்தையில் செலவு செய்ய, அம்மாவின் மணி பர்ஸில் பணம் தாராளமாய்ப் புழங்கத் துவங்கியது. வாழ்க்கையில் நம்மைச் சந்திக்கும் எல்லா நல்லது கெட்டதுகளையும் போல், இதையும் ஏன் என்று ஆராயாமல் வளர்ந்தேன்.. படித்தேன்.
இளங்கலை வேளாண்மை இறுதியாண்டு படிக்கையில், மேலே என்ன படிப்பது என்ற கேள்விக்குப் பல பதில்கள் இருந்தன. மேலாண்மை அதில் ஒன்று. சுஜாதாவின் ‘பிரிவோம், சந்திப்போம்’ புத்தகமும், மணிரத்தினத்தின், ‘மௌனராகமும்’ அந்த ஆசையைத் தூண்டிவிட்டன.. மேலாண்மை படித்தால், தில்லியில் வேலையும், ரேவதி போலொரு மனைவியும், காரும் வீடும் என்றால், ஏன் மேலாண்மை படிக்க ஆசை வராது?
முக்கி முக்கி மேலாண் படிப்புக்கான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளத் துவங்கினோம். ஐ.ஐ.எம்களுக்கான தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் IRMA என்னும் ஊரக மேலாண் கழகத்தில் படிக்க அனுமதி கிடைத்தது. படித்தால் தேசிய பால்வள நிறுவனத்தில் வேலை நிச்சயம் என்று எவரோ சொல்ல, ஆனந்துக்குப் பயணித்தேன். மாலை ஏழு மணிக்கு IRMA வின் வாசலை அடைந்ததும், காவலர் என்னிடம் ஒரு கடிதம் கொடுத்தார். அது இர்மாவின் நிர்வாக அதிகாரி சோமன் நாயர் எனக்கு எழுதிய கடிதம். 9 மணிக்குள் நீங்கள் வந்தால், உங்களுக்கு மெஸ்ஸில் உணவு இருக்கும். தாமதமாகியிருந்தால், நீங்கள் வந்த ஆட்டோவிலேயே ஊருக்குள் சென்று உணவருந்தி வரவும் என்று. இளங்கலை வேளாண்மையின் போது ஹாஸ்டல் என்று சொல்லப் படும் கொட்டிலில், ஐந்தறிவாய் வாழ்ந்து வந்த எனக்கு ஒரு பெரும் இன்ப அதிர்ச்சி. மெஸ்ஸில் ஒரு அருமையான சாப்பாட்டிற்குப் பிறகு, சோடியம் விளக்குகளின் வெளிச்சத்தில் இர்மாவைச் சுற்றத் துவங்கினேன். அழகாக வடிவமைக்கப் பட்டிருந்த புல்வெளிகளும், சிறு குன்றுகளும், amphi theater ம் என ஒரு கனவு போல் இருந்தது.
அடுத்த வாரத்தில் ஒரு நாள், புதியவர்களுக்கான ஒரு அறிமுக உரையை தேசிய பால் வள வாரியத்தின் தலைவர் டாக்டர்.குரியன் நிகழ்த்தப் போகிறார் என்று அறிக்கை வந்தது. அந்த மாலை, ஒரு சிறு ப்ரீமியர் காரில் வந்திறங்கினார் அவர். பழுத்த பரங்கிப் பழம் போல பாக்கியம் ராமசாமியின் சீதாப் பாட்டியின் நிறத்தில்.. குள்ளமாக.. தாடைக்குக் கீழ், தவளை போல் தொங்கிய தாடையுடன்.
வணக்கங்கள் முடிந்து, அவர் உரை துவங்கியது. அதை ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி என்றுதான் சொல்லவேண்டும். ராமன் வில்லை எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டனர் என்பது போல், அவர் பேசி முடித்த போதுதான் தன்நினைவு வந்தது. அவ்வளவு சுருதி சுத்தமான ஒரு ஆங்கில உரையை நேரில் கேட்பது அதுவே முதல் முறை. சுதந்திரப் போராட்டத்தில் துவங்கி, வல்லப் பாய் படேல், திரிபுவன் தாஸ் படேல், லால் பகதூர் சாஸ்திரி என அமுலின் வாழ்க்கையினூடே எங்களை அழைத்துச் சென்றார். வெற்று அரசியல் வாதிகளை நார் நாராகக் கிழித்துத் தொங்க விட்டார். பன்னாட்டு நிறுவனங்களின் லாப நோக்கைச் சாடினார். சுயநல அரசு அதிகாரிகளை அல்பங்கள் என்று தூக்கி எறிந்தார். அமுல் கிராமக் கூட்டுறவு பால் சொசைட்டியில் பால் ஊற்ற நின்று கொண்டிருக்கும் வரிசையைப் பாருங்கள்.. ஒருவர் பின் ஒருவர் நிற்கும் வரிசையில், மேல் ஜாதி யார்? கீழ் ஜாதி யார்??. அமுல் காந்தியின் கனவு என்று முழங்கி, ஒரு தேர்ந்த நாடகக்காரனைப் போல், அரங்கில் அமைதியைத் தவழ விட்டார்.
உடல் புல்லரித்துக் கண்களில் நீர் வழிந்தது.கைதட்டல் அடங்கிய பின்னர் இர்மாவைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அஹமதாபாத் இந்திய மேலாண்மைக் கழகத்தில் தலைவராக இருந்த போது, தேசிய பால்வள வாரியம் துவங்க, தன்னுடன் வர அந்நிறுவனத்தில் பயின்ற மாணவர்களை அழைத்த போது, குறைவான சம்பளம் காரணமாக யாரும் வரவில்லை என்றும், அன்றே, கூட்டுறவு நிறுவனங்களுக்கென ஒரு மேலாண் கழகம் உருவாக்கத் தான் உறுதி பூண்டதாகவும். அஹமதாபாத் மேலாண் கழக நிறுவன இயக்குநர் ரவி மத்தாயின் துணை கொண்டு, சுவிட்ஜர்லாந்து அரசின் உதவியோடு, இர்மாவை நிறுவினார். 60 ஏக்கர் நிலப் பரப்பில் அமைந்திருக்கும் இர்மா, கேடா மாவட்டத்தின் பாலைவனச் சோலை. இர்மாவைப் பற்றிப் பேசும் போது, தன் குழந்தை பெருமை பேசும் தகப்பனின் பெருமிதம் அவர் முகத்தில்.
என் வகுப்பில் இருந்த ஒரே பெண்ணைப் பார்த்துச் சொன்னார் – ‘பெண்ணே, உன் ஹாஸ்டல் அறையின் பால்கனியில் நின்று பார்.. ஓ ரோமியோ.. எங்கே இருக்கிறாய்’ என்று கூவ ஆசை வரும் என்று. அது உண்மையும் கூட. பாரதத்தின் மிகச் சிறந்த கேம்பஸ்களில் ஒன்று இர்மா. அஹமதாபாத் இந்திய மேலாண் கழகக் கட்டிடத்தை விட வசதியானது. இந்த நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்த மாநில முதல்வர் கேட்டார், ‘ஊரக மேலாண் கழகத்துக்கு ஏன் இவ்வளவு வசதியான ஒரு கேம்பஸ்?’ என்று. அதற்கு அவர் சொன்னாராம், ‘Mr.Chief minister, I don’t rear kings in piggeries’ என்று.உரை முடிந்த பின், pied piper பின்னால் செல்லும் எலிகள் போல அவரைச் சூழ்ந்து கொண்டு, மடத்தனமாக ஏதேதோ உளறினோம். அவர் எல்லாவற்றையும் துடைத்துத் தூக்கி எறிந்து விட்டுப் போனார்.
அடுத்த நாள், ஊரக மேலாண்மைப் படிப்பின் அறிமுகப்படலத்தின் ஒரு பகுதியாக, அமுல் நிறுவனம், 1948ல், வீடு கிடைக்காமல் குரியன் தங்கியிருந்த கார் ஷெட், சபர்மதி ஆசிரமம், அங்குள்ள கோசாலை என்று ஒரு சிற்றுலா.. அதற்குள் டாக்டர் குரியன், அங்கிள் கு என மாறிப் போனார். முந்தைய பேட்ச் மாணவர்களின் ஜோக்குகளும் சேர்ந்து கொண்டது.
இர்மா அறிமுகத்தின் இன்னொரு பகுதியாக, ஒரு அமுல் கிராமத்தில் ஒரு வாரம் தங்குதல். கிராம மக்களின் அன்பிற்கும், உபசரிப்புக்கும் கேட்கவா வேண்டும்? தினமும் காலையில், ஊர் பால் கூட்டுறவு சங்கத்தத்தில் சில மணி நேர வேலை. பால் ஊற்றி விட்டு, அதே பாத்திரத்தில் சிலர் மாட்டுத் தீவனமும் வாங்கிப் போனார்கள். பின்னர் அருகிலிருந்த திரிபுவன் தாஸ் ஃபவுண்டேஷனில் சிறிது நேரம் தங்கல். அது, அமுல் கிராமங்களில், மகளிர் மற்றும் மகப்பேறு நலத் திட்டங்களை மேற்கொண்டு வருமொரு நிறுவனம். குழந்தை பிறந்தவுடன், அதற்குப் போட வேண்டிய தடுப்பூசிகள் நாட்கள் அடங்கிய, குழந்தைகள் அட்டை. ஒவ்வொரு குழந்தையும், அதன் நல விவரங்களும் அடங்கிய ஒரு முழுமையான அறிக்கை கொண்ட அட்டை. பின்பு, இந்தியாவில் நிறைவேற்றப் பட்ட பல ஊரக மகளிர் நலத் திட்டங்களுக்கு அது ஒரு பெரும் முன்மாதிரி. மதிய உணவுக்கு ஏதேனும் விவசாயியின் வீடு. வாரம் ஒரு முறை, பாலுக்கான காசை வாங்கி வரும் பெண்கள் கையில் இருந்து, அந்தக் காசு எப்படி வீட்டின் பயன்பாட்டிற்குப் போகிறது என்பதை நேரில் பார்த்த பின் தான், தளவாய்ப்பேட்டை சொஸைட்டி வந்து என் அம்மாவின் மணி பர்ஸில் சேர்ந்த பணத்தின் பின்னணி புரிந்தது. என் குளிர் காலக் காலைகள் போர்வைக்குள் மீண்ட சரித்திரமும்.
ஒரு வார கிராம வாசத்திற்குப் பின், மீண்டும் இர்மா.. ஒரு மாலை, இர்மாவின், குளிரூட்டப் பட்ட, சிறந்த ஒலி, ஒளி அமைப்பு செய்யப் பட்ட, மிக அற்புதமான அரங்கில், டாக்டர் குரியனும், ஷ்யாம் பெனகலும் எழுதி, ஷ்யாம் பெனகல் இயக்கிய, ‘மந்தன்’ திரைப்படம் திரையிடும் விழா. ‘500 thousand farmers of Gujarat present’ என்னும் துவக்க ஸ்லைட் ஒரு உணர்வெழுச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்றது. பத்து லட்சம் செலவில் தயாரிக்கப் பட்ட அந்தப் படம், 5 லட்சம் விவசாயிகளிடமிருந்து, தலைக்கு இரண்டு ரூபாய் வீதம் பெறப் பட்டுத் தயாரிக்கப் பட்டது. கிட்டத் தட்ட டாக்டர்.குரியனின் சரிதம் அது. கிரீஷ் கர்னாட், நஸிருதீன் ஷா, அனந்த் நாக், ஸ்மீதா பாட்டில், அம்ரீஷ் பூரி முதலியோர் நடித்திருந்தார்கள். 1977 ஆம் ஆண்டின் சிறந்த இந்திப் படமாக அது தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த திரைக்கதைக்காக விஜய் தெண்டுல்கருக்கும், சரோத்தர் பூமியில் ஓடும் பாலாறு என்னும் பொருளில் வரும் பாடிய பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருது ப்ரீத்தி சாகருக்கும் கிடைத்தது. அவ்வாண்டின், இந்தியாவின் ஆஸ்கர் என்ட்ரியாகவும் அது அனுப்பப் பட்டது. “won’t this guy do any thing less than great?” என்று வியந்தான் என் வகுப்பு நண்பன்.
பின்னர், இர்மாவின், அதிக அழுத்த பாடத்திட்டங்களுக்குப் பின்னால் ஓடத் துவங்கினோம், டாக்டர் குரியனைத் தாற்காலிகமாக மறந்துவிட்டு. ஒரு ஆறு மாதங்கள் கழித்து, அரசு அதிகாரிகளுக்கான (இந்தியா ஆட்சிப் பணியாளர்கள் – ஐ.ஏ.எஸ்) ஒரு பயிற்சி முகாம் இர்மாவில் நடந்தது. அதன் இறுதியில், டாக்டர் குரியனின் உரையும், விருந்தும் ஏற்பாடாகியிருந்தது. கிட்டத் தட்ட ஒரு 1 ½ மணி நேரம் பேசினார். வெண்மைப் புரட்சியின் சாதனைகள் பற்றி. எப்படி இந்தியாவின் பால் உற்பத்தி, கூட்டுறவு சங்கங்களால் மேலெடுத்துச் செல்லப் படுகிறது என. அதில், அரசு அதிகாரிகளின் பங்கு (இம்சை) என்ன என்பது பற்றியும். சண்டமாருதம் தான்.
முடிந்த உடன், கேள்வி பதில்கள் துவங்கின.’வெண்மைப் புரட்சி ஒரு பெரும் தோல்வி’ என்று பத்திரிகைகள் சொல்கின்றனவே அதைப் பற்றி உங்கள் கருத்தென்ன? என்று ஒரு இ.ஆ.ப எழுந்து கேட்டார். “யாரிடம் பேசுகிறாய் என்பது தெரிந்துதான் பேசுகிறாயா? ஒரு சிங்கத்திடம். எலியிடம் அல்ல” என்று கர்ச்சித்து விட்டு, அந்த குற்றச் சாட்டைப் பற்றி விலாவாரியாகப் பேசினார். வெண்மைப் புரட்சிக்கு முன்பும் பின்பும் சில மாநில கிராமங்களின் பொருளாதார நிலை பற்றிய புள்ளி விவரங்களை எடுத்துக் காட்டி நீண்டதொரு உரை ஆற்றினார். ’ஐம்பதுகளில் 17 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி இன்று 60 மில்லியன் டன். பேசுவதற்கு முன்பு சரியான விவரங்கள் தெரிந்து கொண்டு பேசு. நான் சொல்லும் புள்ளி விவரங்களை, உன் மாநிலம் சென்ற பின் சரியா என்று நீயே சென்று பார்த்து விட்டு பின் என்னிடம் வா. ஆங்கிலத்தில் எவன் எழுதினாலும் கேள்வி கேட்காமல் நம்பி விடுவதா?’ என்று முழங்கி விட்டு அமர்ந்தார்.
அதன் பின் எந்த இ.ஆ.பவுக்கும் கேள்வி கேட்கும் துணிவு வரவில்லை. விருந்து துவங்கியது. ‘அருமையான உரை சார்’ என்றேன் ஒரு ஓரமாக சூப் குடித்துக் கொண்டிருந்த நிறுவன இயக்குநர் துஷார் ஷாவிடம் சென்று. ‘இந்த வயதிலும் தன் உரைகளை, 2-3 முறை ஒத்திகை பார்த்துக் கொண்டு, பின் தான் பேச வருகிறார். பர்ஃபெக்ஷனிஸ்ட்’ என்றார் அவர்.ஆனாலும், இ.ஆ.ப கேட்ட அந்தக் கேள்வி உறுத்திக் கொண்டே இருந்தது. சீனியர்களிடம் கேட்டு, வெண்மைப் புரட்சியைப் பற்றி எழுதிய அந்த ஆளைப் பிடித்தோம். க்ளாட் ஆல்வாரிஸ் என்னும் அவர் கோவாவைச் சேர்ந்த ஒரு சூழியல் செயல்பாட்டாளர். இல்லஸ்ட்ரேட் வீக்லி அவரைத் தூக்கிப் பிடித்திருந்தது.
இர்மாவின் குளிரூட்டப் பட்ட நூலகத்தில், ‘Operation Flood’ என்னும் தேசிய பால்வள நிறுவனத்துக்கெதிராக க்ளாட் ஆல்வாரிஸால் எழுதப் பட்ட, ‘Operation white lie’ கட்டுரைகளைத் தேடிக் கண்டு பிடித்தோம். கிராமங்களில் உற்பத்தியாகும் பால், நகரங்களுக்குச் செல்கிறது. அதனால், கிராமக் குழந்தைகளுக்குக் கிடைக்க வேண்டிய ஊட்டச் சத்து கிடைக்காமல், கிராமங்கள் பாதிக்கப் படுகின்றன என்கிற ரீதியில் புள்ளி விவரங்களோடு இருந்தது அந்தக் கட்டுரை. தியரிட்டிகலாக, உண்மை போல் தோன்றும் இக்கட்டுரை பொய்யெனப் புரிந்து கொள்ள என் போன்ற கிராமத்தானுக்கு, அதிக மூளையும் நேரமும் தேவைப் படவில்லை.
அமுல் வெறும் பால் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு நிறுவனமல்ல. அது மூன்றடுக்குகள் கொண்ட ஒரு சமூக அமைப்பு. அதன் அஸ்திவாரத்தில் கிராம கூட்டுறவு சங்கங்கள். அதில் உறுப்பினர்களாக இருக்கும் பால் உற்பத்தியாளர்கள். அவர்களிடம் இருந்து பெறப்படும் பால், சில மணி நேரங்களில் குளிரூட்டும் நிலையம் அடைந்து, குளிரூட்டப் பட்டு, அங்கிருந்து பதப்படுத்தும் ஆலையை அடைந்து, பதப்படுத்தப் பட்டு, அடுத்த நாள் காலை, பாக்கெட்டுகளாக, மழை வெயில் பாராமல் நுகர்வோர் வாசல் வந்தடைகிறது. முதலில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு அடிப்படை விலை வழங்கப் படுகிறது. அமுல் நிறுவனம் அதை, பல்வேறு பொருட்களாக மாற்றி, அவற்றை, அதன் அடிப்படை விலையில் இருந்து ஒரு குறிப்பிட்ட சத அதிகமாக விலை வைத்து விற்கிறது. வருட இறுதியில், செலவுகள் போக மீந்தும் பணம் ‘உபரி’ என்று கணக்கிடப் பட்டு, மீண்டும் கிராம பால் உற்பத்தி சங்கங்களுக்குத் திருப்பிக் கொடுக்கப் படுகிறது. விவசாயிகளின் பால் சப்ளைக்கேற்ப, அந்த உபரி, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப் படுகிறது. மொத்தத்தில், அமுலின் உரிமையாளர்கள் விவசாயிகளே.
அமுலின் முதல் அடுக்கில், கிராம பால் உற்பத்தியாளர் சங்கங்கள். இரண்டாம் அடுக்கில், பாலைப் பதனம் செய்யும் வட்டார அமைப்புகள். மூன்றாம் அடுக்கில், வட்டார அமைப்புகளிடம் இருந்து பெற்று, பால் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள். மூன்று அடுக்குகளுக்கும் அவர்களுக்கே உரித்தான வேலைகள். அதே சமயத்தில், அவை மூன்றுமே சீராக இணைக்கப் பட்டுள்ளன.
1940 களில் மும்பை பால் ப்ளானுக்காக, ஆனந்தில் இருந்து பால் கொள்முதல் செய்யத் துவங்கியது தனியார் நிறுவனம் ஒன்று. ஆனால், விரைவில் பால் உற்பத்தி அதிகரிக்கவே, விவசாயிகளிடம் பால் மிகுந்து போனது. அவர்கள் ஒன்று சேர்ந்து, சர்தார் வல்லப் பாய் படேலிடம் சென்று முறையிட்டனர். அவர் உடனே தன் சீடர்களான மொரார்ஜி தேசாய் மற்றும் திரிபுவன் தாஸ் படேலிடம், ’இவர்களை ஒன்றிணைத்து, ஏதேனும் செய்து கொடு’ என்று ஆணையிட்டார். அதை சிரமேற்கொண்டு, அவர்கள் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஒன்று துவங்கி, பால் கொள் முதல் செய்து, மும்பை அனுப்பத் துவங்கினர். கொஞ்ச நாளில், திரிபுவன் தாஸ் படேல் இதை முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டு நடத்தினார். ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்பதே சுருங்கி அமுல் என்றானது.
ஆனால், பாலின் தரம், தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறுபட்டு, மிக சிரமங்களுக்கு உள்ளானது அமுல். அப்போது, அருகே அரசாங்க பால் க்ரீம் நிலையம் ஒன்று இருந்தது. அதில் வெளிநாட்டுக்கும் அரசு செலவில் படிக்கப் போய்த், திரும்ப வந்த ஒரு மலையாள வாலிபர் வேலையில் இருந்தார். அவருக்கு அங்கே சும்மாயிருக்கும் வேலை. அரசு செலவில் படிக்கச் சென்றதனால், மூன்றாண்டுகள் ஒரு அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றொரு ஒப்பந்தம் இருந்தது. பெரும்பாலும் சைவ உணவுப் பழக்கம் உள்ள குஜ்ராத்தில் மாட்டுக் கறி சாப்பிடும் மலையாளக் கிறித்துவருக்கு வாடகை வீடு கிடைப்பது முதல் பல சங்கடங்கள் இருந்தன. வார இறுதிகளில், விடுமுறை நாட்களில் மும்பைக்கு ரயில் பிடித்துச் சென்று, தாஜ் ஹோட்டலில் தங்கி, வயிறார உண்டு, ஊர் சுற்றிச் செல்வார். எப்போதடா மூன்றாண்டுகள் முடியும் என்று காத்திருந்த காலத்தில் ஒரு நாள், அருகில் இருந்த விவசாயிகளின் கூட்டுறவுப் பால்பண்ணை நடத்தி வந்த திரிபுவன் தாஸ் படேல் அவரைச் சந்திக்க அழைத்தார்.
அவரும் திரிபுவன் தாஸ் படேலும், கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு நேரத்தில் சந்தித்தனர். தட்ப வெப்ப நிலை காரணமாக, பால் கெட்டுப் போகும் தன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கேட்டார் படேல். ப்ளேட் பாஸ்ட்யூரைஸர் என்னும் இயந்திரத்தைப் பரிந்துரைத்து, அந்தப் பிரச்சினையைத் தீர்த்தார் குரியன். பின்பு பேசிக் கொண்டிருக்கையில், தனது ஒப்பந்தம் முடிவதாகவும், விரைவில், ஆனந்தை விட்டுச் செல்வதாகவும் சொன்னார் குரியன். தன் உடமைகளை பேக் பண்ணி வைத்துவிட்டிருந்தார் அப்போது. “ஆனந்துக்கு நீங்கள் தேவை, இருங்கள்” என்று அவரை இருக்கச் சொன்னார் படேல். அன்று தனது பயணத்திட்டத்தைக் கைவிட்டவர், இறுதி வரை ஆனந்தை விட்டு வெளியேறவில்லை.குரியன் என்னும் தொழில்நுட்ப வல்லமையும், மேலாண் திறனும் கொண்ட மாமனிதரின் மேலாண்மையில், மெல்ல மெல்ல, அமுல் ஒரு பெரும் நிறுவனமாகியது.
அமுலின் வெற்றிக்குப் பின்னால், சில முக்கிய காரணிகள் – Game Changers இருந்தன.
1. மிகவும் திறன் கொண்ட, மிகக் குறைந்த செலவில் அமைந்த Supply Chain:
விவசாயிகளின் உற்பத்தி, அவர்களின் ஒன்றிணைந்த ஒரு அமைப்பினால், கையாளப் பட்டு, குறைந்த செலவில் நுகர்வோரை அடையும் படி வடைவமைக்கப் பட்ட ஒரு தொழில் மாதிரி அது. வழக்கமாக, விவசாயிகளிடம் இருந்து, பொருளைக் கொள்முதல் செய்யும் தரகர்கள், அதை ஒரு தயாரிப்பு நிறுவனத்திடம் விற்றுப் போவர். இடைத்தரகர் கமிஷன், தயாரிப்பாளர் லாபம் எல்லாம் போக ஒரு குறைந்த மதிப்பே விவசாயியைச் சென்றடையும். ஆனால், அமுல் மாடலில், அவர்களின் அமைப்பே தரகரின் வேலையையும், தயாரிப்பாளரின் வேலையையும் மேற்கொள்வதால், இரட்டை லாபம் மிச்சம். மேலும், உற்பத்தி மிகச் சீராக நுகர்வோரைச் சென்றடைவதால், உற்பத்தியாளர்களின் உற்பத்தி தேங்குவதில்லை. உற்பத்தி விற்காமல் தேங்கினால், அதில் பணம் முடங்கி, ஏழை விவசாயிகள் தம் தினசரித் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் பாதிக்கப் படுவர்.
அதிகாலை, மாட்டின் மடி விட்டுக் கிளம்பும் பால், சில மணி நேரங்களில், அருகில் உள்ள குளிரூட்டப் படும் நிலையத்தை அடைந்து, குளிரூட்டப் பட்டு, பதனப்படுத்தப் படும் ஆலையை அடைந்து, பதப் படுத்தப் பட்டு, அடுத்த நாள் அதிகாலையில் நுகர்வோர் வீட்டு வாசலில் பாக்கெட்டுகளாய்த் தொங்கும். தினசரி, பாரதத்தின் பட்டி தொட்டியெங்கும் உள்ள 1 ½ கோடி விவசாயிகளிடமிருந்து, பால் கொள்முதல் செய்யப் பட்டு, மண் ரோடு / கல் ரோடுகளைத் தாண்டி, ஒரு நகரத்தை அடுத்த நாள் தவறாமல் அடையும் Supply Chain ஐ என்ன வென்று சொல்லலாம்?? உலகத் தரம்?????.
அமுல் இந்த மாடலை 1940லிருந்து வெற்றிகரமாகச் செயல் படுத்தி வருகிறது, தார்சாலைகளும், நெடுஞ்சாலைகளும் இல்லாத காலத்திலிருந்து. இன்று, இந்தியப் பொருளாதாரம் சந்திக்கும் முக்கியப் பிரச்சினைகள் என்ன என்று தொழிலதிபர்கள் / பொருளாதார வல்லுநர்களைக் கேளுங்கள்.. இந்தியாவின் கட்டமைப்பு மோசம் என்று சொல்வார்கள்.. சாலைகள் சரியில்லை.. துறைமுகங்கள் சரியில்லை என்று. Bull shit.
2. சரியான தொழில் நுட்பம்
அதிக மழையும் வெப்பமும் இருக்கும் சூழலில் உள்ளது நம் நாடு. இங்கே பால் போன்ற, microially sensitive பொருட்களை சாதாரணச் சூழலில் எடுத்துச் கையாள முடியாது. சொல்லப் போனால், நமது மாடுகள் வளர்க்கப் படும் சூழல், பால் கறக்கும் பாத்திரங்கள் எல்லாவற்றிலுமே நுண்ணுயிர்ச் சுமை, குளிர்ப் பிரதேசங்களை விட, பலப் பல மடங்கு அதிகம். எனவே கறந்த பால் சில மணி நேரங்களில் பதப் படுத்தப் படாவிட்டால், கெட்டு விடும். இந்தப் பதப் படுத்துதலில் மூன்று கட்டங்கள் உண்டு.
முதல் கட்டத்தில், பாலில் உள்ள நுண்ணியிர்கள் பாஸ்ட்யூரைஸிங் மூலம் அழிக்கப் படுதல். இரண்டாவது, பாலை சந்தைகளுக்குக் கொண்டு செல்ல, குளிரூட்டப் பட்ட பாலின் குளிர்ச்சியைப் பாதுகாத்துக் கொண்டு செல்லும் கொள்கலன்கள். மூன்றாவது, அதிகக் கொழுப்பு உள்ள பாலில் இருந்து, கொழுப்பை அகற்றி, அதிலிருந்து வெண்ணெய், நெய் போன்றவற்றைச் செய்வது.
முதலில், இயந்திரங்களை இறக்குமதி செய்த அமுல், பின்னர் தானே வடிவமைக்கவும் துவங்கியது. அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதை உண்டு.
தென்மேற்குப் பருவக் காற்றால் மழை பெறும் பாரதத்தில், விவசாயம் ஜூன் மாதத்துக்குப் பின் தான் துவங்குகிறது. மாடுகளுக்குப் பசுந்தீவனம் கிடைக்கத் துவங்கும் நேரம் அது. எனவே, பால் உற்பத்தியும் அதிகரிக்கத் துவங்கி, குளிர் காலத்தில் மிக அதிகமாகப் பால் கிடைக்கும். ஆனால், கோடை காலத்தில் தீவனம் குறைந்து, பால் உற்பத்தியும் குறையும். ஆனால், நுகர்வோர் தேவை வருடம் முழுவதும் சீராக இருக்கும்.
இதை எப்படிச் சமாளிப்பது?? அதிகமாகப் பால் கிடைக்கும் போது, அதை பால் பவுடராக மாற்றி வைத்துக் கொண்டு, பற்றாக்குறைக் காலங்களில், அதை மீண்டும் பாலாக மாற்றிக் கொள்வதுதான் வழி. இதற்கு ஸ்ப்ரே ட்ரையிங் என்றொரு முறை உண்டு. அந்த இயந்திரங்கள், அப்போது, ஐரோப்பாவில் தயாரிக்கப் பட்டு வந்தன. அவற்றில், கொழுப்பு குறைவான மாட்டுப் பாலை மட்டுமே பதப் படுத்த முடிந்தது. ஆனால், இந்தியாவில் எருமைப் பால்தான் அதிகம். எருமைப் பாலை பவுடராக்கும்படி, இயந்திரத்தை மாற்றிக் கொடுக்கும்படி அமுல் விடுத்த வேண்டுகோள், நக்கலாக மறுக்கப் பட்டது. மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் தொழில்நுட்பம் பயின்று தன்னுடன் வேலை செய்ய வந்த டாலயாவிடம் அந்தச் சவாலைக் கொடுத்தார். வெற்றிகரமாக அந்தச் சவால் முறியடிக்கப் பட்டது. குளிர்காலத்தில் கிடைக்கும் எல்லாப் பாலும் கொள்முதல் செய்யப் பட்டு, பவுடராக மாற்றப் பட்டது. வடகிழக்கில் எப்போதுமே பால் பற்றாக்குறை. பவுடராக மாற்றப் பட்ட பாலுக்கு வடகிழக்கு ஒரு பெரும் சந்தையாக உருவெடுத்தது. ஆனால், பவுடர் பால் விலை அதிகமாக இருந்ததால், ஏழை நுகர்வோருக்கு, அது பெரும் பாரமாக இருந்தது. எனவே, அமுல் மிகக் குறைந்த செலவில், ரயில் மூலம் பாலைக் கொண்டு செல்ல கொள்கலன்கள் வடிவமைத்தனர்.
மொத்தத்தில், தொழிலுக்கு என்ன தேவையோ, அந்த தொழில்நுட்பங்களை அமுலே உருவாக்கிக் கொண்டது. குரியன் போன்ற தொழிநுட்பமும், பொது நலனும் இணைந்த ஆளுமையில்லாமல், இது சாத்தியமாகியிருக்க வாய்ப்பே இல்லை. இது பெருமளவில் அன்னியச் செலாவணியை மிச்சம் செய்தது மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்கும் வழி வகுத்தது.
3. உற்பத்தியாளர்களின் நலன்:
அமுல் முழுக்க முழுக்க பால் உற்பத்தியாளர்களின் தொழில் அமைப்பு. அவர்களின் தேவைகளுக்கேற்ப, தொழில் முறைகள் அமைக்கப் பட்டன. பால் உற்பத்தியில் ஈடுபடும் பெரும்பாலானோர் சிறு மற்றும் குறு விவசாயிகள். ஓன்றிரண்டு கால்நடைகளை வைத்திருப்போரே அதிகம். அவர்களின் மிக முக்கியப் பிரச்சினைகள் என்ன?
பணம்: சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் பணம் புழக்காட்டம் வருடம் இருமுறை தான். முதலில் கரீஃப் என்று சொல்லப் படும் தென்மேற்குப் பருவக்காற்று மகசூலில் வரும் வருமானம். பின் இரண்டாவது போகமான ரபியின் வருமானம். மற்ற நேரங்களில் பணப் புழக்காட்டம் மிகக் குறைவு. அவர்களால், கால்நடைகளுக்குத் தேவையான சத்தான தீவனத்தை வாங்கக் காசு இருக்காது. எனவே, கொள்முதல் செய்த பாலுக்கு, வாரா வாரம் பணம் பட்டுவாடா செய்யப் பட்டது. பால் சொசைட்டியிலேயே, கால்நடைத்தீவனமும் விற்கப் பட்டது. மிக ஏழை விவசாயிகள், தினசரி பாலை ஊற்றி விட்டு, அன்றைக்குத் தேவையான தீவனத்தை வாங்கிச் செல்லும் வசதியும் செய்யப் பட்டது. வாரக் கடைசியில், தீவனம் வாங்கியது போக, மீதப் பணம் பட்டுவாடா செய்யப் பட்டது.
கால்நடை நலம்: மனிதர்களுக்கே சரியான மருத்துவ வசதி இல்லாத காலத்தில் கால்நடைகளுக்கெங்கே?? ஆனால், கால்நடைகளின் உடல் நலமும், அவை சரியான நேரத்தில் கருத்தரித்தலும் பால் உற்பத்திக்கு மிக முக்கியம். அமுல், கால்நடை நலத்தைப் பேண, மருத்துவர்களை, கிராமங்களுக்கே கொண்டு வந்தது. செயற்கை முறைக் கருத்தரித்தல், கலப்பினக் கால்நடைகளை உருவாக்கி பால் உற்பத்தியைப் பெருக்குதல் போன்றவற்றை அமுல், தன் தொழிலின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதி அதில் ஈடுபட்டது.
மகளிர்: விவசாய வீட்டில், பெரும்பாலும், பெண்கள் தான் கால்நடைகளைக் கவனித்துக் கொள்வார்கள். பால் கறப்பது, மேய்ப்பது போன்ற பல வேலைகளிலும் மிக முக்கிய பங்கு வகிப்பது அவர்களே. எனவே, அவர்களின் உடல் நலன் மிக முக்கியமானது. அதில் மிக முக்கியமானது, அவர்களின் மகப்பேற்றுக் காலம். சரியான உணவு, தடுப்பூசிகள் முக்கியம். அவர்கள் உடல் நலம் சரியில்லாமல் போனாலோ, குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாது போனாலோ, அது பால் உற்பத்தியை நேரடியாகப் பாதிக்கும் என்றுணர்ந்து, அமுல், திரிபுவன் தாஸ் ஃபவுண்டேஷன் என்னும் ஒன்றை உருவாக்கி, அதிலும் கவனம் செலுத்தியது.
4. நுகர்வோர் மற்றும் பொதுநலன்:
பெரும்பாலும் தொழிலின் முக்கியமான குறிக்கோள் லாபம் சம்பாதிப்பது என்றே கருத்து உள்ளது. ஆனால், பழம்பெரும் மேலாண் அறிஞரான பீட்டர் ட்ரக்கர் அது தவறு என்கிறார். நுகர்வோரின் தேவையை அறிந்து கொண்டு, அதை மிகச் சிறப்பாக பூர்த்தி செய்வதே ஒரு நிறுவனத்தின் குறிக்கோளாக இருக்க முடியும் என்கிறார். அப்போது லாபம்? – அது அந்த நிறுவனம் மிக நலமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதன் அடையாளம் மட்டுமே என்கிறார். தர வரிசையில் வைக்கும் போது, முதலில் வருவது நுகர்வோர் நலனே. லாபம் அதற்குப் பின் தான். நுகர்வோரைக் குறித்து காந்தியும் இதேதான் சொல்கிறார்.
அமுல் தனது தொழிலை ஒரு சமூகக் கடமையாகவும் செய்கிறது. அதன் முதல் குறிக்கோள் நுகர்வோருக்கு பால் சப்ளை செய்வதே. பால் தட்டுப்பாட்டு காலங்களில், அமுல், சீஸ், சாக்லேட் போன்ற விலை உயர்ந்த பொருட்கள் தயாரிப்பதை குறைத்துக் கொண்டு, பால் சப்ளை மட்டுமே செய்கிறது. வெறும் பால் சப்ளையில் லாபம் குறைவு என்றாலும்.
அமுல் மற்றும் அதன் சந்தைப் படுத்தும் நிறுவன ஊழியர்களின் சம்பளம் மிகக் குறைவு. ஏனெனில், அவர்கள் வெறும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் ஊழியர்கள் என்பதால். அமுலின் தலைவரின் சம்பளம், தனியார் துறையின் பொது மேலாளரை விட மிகக் குறைவுதான்.
மேற்சொன்ன காரணங்களால், அமுல் பொருட்களின் விலை, தனியார் துறையை விடக் குறைவு. அதே சமயம், அமுல் இந்தியாவின் மிக நம்பகமான ப்ராண்ட். அவர்களே குறைந்த விலையில் பொருட்களை விற்கும் போது, வேறெவரும், அதை விட மிக அதிகமான விலையில் தங்கள் பொருட்களை விற்க முடியாது.
1965 ஆம் ஆண்டில் ஒரு நாள் அமுல் பற்றிக் கேள்விப் பட்ட பிரதமர், லால் பகதூர் ஸாஸ்திரி, ஆனந்த் வந்து, ஒரு நாள் இரவு, ஒரு கிராம மக்களோடு தங்கியிருந்து, அமுல் பற்றித் தெரிந்து கொண்டார். அடுத்த நாள், டாக்டர் குரியனை அழைத்து, அமுல் மாடலை நாடெங்கிலும் பரப்பச் சொன்னார். தேசிய பால் வள வாரியம் என்னுமொரு நிறுவனம் ஆனந்தைத் தலைமையிடமாகக் கொண்டு நிறுவப்பட்டது. குரியன் அதன் நிறுவனத் தலைவராக நியமிக்கப் பட்டார்.
1970 ஆம் ஆண்டு, பால் உற்பத்தியை மிக அதிகமாகப் பெருக்க வேண்டும் என்பதற்காக – Operation Flood-1 என்னுமொரு திட்டம் தீட்டப் பட்டது. பத்தாண்டுகளில், இந்தியாவின் முக்கிய பால் உற்பத்தித் தலங்களை, நாட்டின் நான்கு மிக முக்கிய நகரங்களோடு இணைக்கும் திட்டம்.
இந்தக் காலத்தில் 20 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, 50 மில்லியன் டன்னாக உயர்ந்தது. பின்னர், Operation Flood-2 துவங்கப் பட்டது. 18 ஆக இருந்த, பால் உற்பத்தித் தலங்கள் 186 ஆக அதிகரிக்கப் பட்டன. 42 லட்சம் கிராமப் பால் உற்பத்தியாளர்கள், 43000 கூட்டுறவு சங்கங்களால் இணைக்கப் பட்டு, 290 நகரங்களில், பால் வினியோகம் ஆரம்பிக்கப் பட்டது. பின்னர், Operation Flood-3, 1985ல் துவங்கப் பட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கான சேவைகள் பெருமளவில் அதிகரிக்கப் பட்டன. கால்நடை மருத்துவ உதவி, செயற்கை முறை கருவூட்டல் இவையிரண்டும் கிராமங்கள் தோறும் விவசாயிகளைச் சென்றடைந்தன. வெண்மைப் புரட்சியின் துவக்கத்தில் 20 மில்லியன் டன்னாக இருந்த பால் உற்பத்தி, Operation Flood -3 ன் இறுதியில் 68 மில்லியன் டன்னைத் தாண்டி உலகின் மிகப் பெரும் உற்பத்தியாளாரான அமெரிக்காவைத் தொட்டது.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் – இந்தச் சாதனைக்காக, இந்திய அரசிடம் இருந்து ஒரு பைசா அவர் பெறவில்லை. பால் உற்பத்தி மிக அதிகரித்து, மீந்த பட்டர் ஆயிலை, ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, கடலில் கொட்ட இருந்தார்கள். அதை இலவசமாகப் பெற்று, இந்தியாவில் விற்பனை செய்து, அதில் வந்த பணத்தில் துவங்கினார் டாக்டர்.குரியன். அது மட்டுமில்லாமல், 35 ஆண்டுகளாக, தேசிய பால் வள வாரியத்தில் பணி புரிந்ததற்காக, அவர் சம்பளம் ஏதும் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் பால் உற்பத்திச் சாதனை, குரியன் நாட்டுக்கு அளித்த பரிசு.
ஒரு அரசுத் திட்டமாக இருந்தும், அவர் தனது தேவைகளுக்காக, தில்லி செல்லத் தேவையே இருந்ததில்லை. ஆனால், சில லைசென்ஸ்களுக்காகச் செல்ல வேண்டியிருந்த காலத்தில், தில்லி பாபுக்கள் (இ.ஆ.ப) நடந்து கொண்ட விதம் அவரை வெறுப்படைய வைத்திருந்தது. தன் சாக்லேட் ஆலைக்கான அனுமதி பெறத் திட்டக் கமிஷன் சென்றிருந்த போது, அனுமதி வழங்க மறுத்த திட்டக் கமிஷன் கமிசார்கள் சொன்னது, ‘அதனால், உள்ளூர் இனிப்பு வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள்’. ‘ஒரு மாட்டைப் பிடித்துப் பால்கறக்கத் தெரியாத நீ என்ன எனக்கு அறிவுரை சொல்வது?’ என்று எகிறி, தனக்கு வேண்டிய அனுமதி பெற்றுச் சென்றார். தில்லியின் அதிகார வர்க்கம் அவரை மிக ஆசையாக வெறுத்து வந்தது.
90களின் இறுதியில், தில்லியில் என்னோடு மிக அன்போடு பழகிய, ஒரு பொருளாதார நிபுணர் (இவர் பின்பு, பிரதம மந்திரியின் வேளாண் ஆலோசகராகவும் பணியாற்றினார்), க்ளாட் ஆல்வாரிஸ் எழுதிய வெண்மைப் பொய்யின் ஆதரவாளர். இவரின் வாதம் என்னவெனில், எதற்கு, தேசிய பால்வள நிறுவனக் கட்டிடம் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறது என்பதேயாகும். தேசிய பால்வள நிறுவனத்தின் கட்டமைப்பு, பாலைவனத்தில் கட்டப் பட்ட பயன்படா மாளிகைகள் என்று வர்ணித்தார்.
வெண்மைப் புரட்சி பெரு விவசாயிகளுக்கு மட்டுமே பயன் பட்ட ஒரு திட்டமென்றார். நான் ஒரு சிறு விவசாயியின் மகன் – எங்களிடம் இருந்தது வெறும் 2 ½ ஏக்கர் மட்டுமே. தளவாய்ப்பேட்டையின் மிகப் பெரும் விவசாயியிடம் இருந்தது 11 ஏக்கர் நிலமே என்று நான் சொன்னதை அவர் நம்பவே தயாரில்லை. அது மட்டுமில்லாமல் எதற்கு, தேசிய பால்வள நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆனந்தில் இருக்கிறது? சென்று வர எவ்வளவு சிரமமாக இருக்கிறது தெரியுமா?? என்றார்.. அப்போது நான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தில் ஒரு உரையாற்ற ஆறாயிரம் ரூபாய் கேட்டார். அதையும், காசோலையாக இல்லாமல், பணமாகத் தந்துவிடும்படி சொன்னார். அவர் போன்ற ஏழைப் பொருளாதார ஆலோசகர்களுக்கு 30 சதம் வரி கட்டுபடியாகதென்று. அதன் பின், அவருடன் வாதம் செய்யும் அவசியம் இருக்கவில்லை.
இர்மாவில் இருந்த காலத்தில், எங்கள் வாழ்வே அவரைச் சுற்றி வந்தது. அங்கிள் கு ஜோக்குகள்.. அவரின் சீடர்களான டாக்டர்.அம்ரீதா படேல், டாக்டர் அனேஜா பற்றிய அரசியல் கதைகள். 80 களில் தேசிய பால்வள நிறுவனம் துவங்க இருந்த எண்ணெய் வித்துக்கள் திட்டம் என.. மத்திய அரசின் அத்தனை உயரதிகாரிகளையும் அருகில் இருந்து பார்க்கும், அவர்கள் திட்டங்களைப் பற்றிய கேள்விகளைக் கேட்கவும் வந்த வாய்ப்புகள் இன்று ஒரு கனவு போலத் தோன்றுகின்றன.
முதலாமாண்டு இறுதியில் எங்கள் சீனியர்களின் பட்டமளிப்பு விழா வந்தது. இர்மாவின் பட்டமளிப்பு விழா ஒரு திட்டமளிப்பு விழா என்றே சொல்ல வேண்டும். டாக்டர் குரியனின் செல்வாக்கினால், பிரதமர்களும், குடியரசுத் தலைவர்களும், திட்டக் கமிஷன் தலைவர்களும் கலந்துகொள்ளும் அளவுக்கு ஒரு முக்கியமான விழா. அந்த விழாவின் அணிவகுப்பு மூன்று முறை மிகக் கவனமாக ஒத்திகை பார்க்கப் படும். பட்டம் வாங்குவோர் மேடையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது வரை மிகக் கவனமாகத் திட்டமிடப் படும். மூன்றாவது ஒத்திகை டாக்டர் குரியனின் மேற்பார்வையில் நடைபெறும். பட்டமளிப்பு விழாவில் பங்கு பெற அமுல் உரிமையாளர்களான, பால் உற்பத்தியாளர்கள் வருவார்கள். பட்டமளிப்பு அரங்கில் அவர்கள், மேல் மாடியில், தங்கள் பாரம்பரியத் தலைப்பாகை மற்றும் வெள்ளுடையில் வந்தமரும் காட்சியைக் காணாத கண்ணென்ன கண்ணே!!
அனைவரும் அமர்ந்ததும், மந்தன் படத்தில் இடம் பெற்ற, சரோத்தர் மண்ணில் பாயும் பாலாறு பாடலும், ஒரு பிரார்த்தனைப் பாடலும் பாடப் பெறும். பின்னர், பட்டதாரிகள், குர்த்தா பைஜாமாவில் வந்து வணங்கிப் பட்டங்களைப் பெற்றுப் போவார்கள். இவ்வாறு துல்லியமாகத் திட்டமிடப் பட்டு ஒத்திகை பார்த்த ஒரு நிகழ்வை எதன் பொருட்டும் அவர் மாற்றிக் கொண்டதில்லை. எனது பட்டமளிப்பு விழாவுக்கு வரவேண்டிய அப்போது மத்திய அரசின் மிக முக்கியப் பொறுப்பில் இருந்த அந்த கர்நாடக அரசியல் தலைவர், கடைசி நேரத்தில், பட்டமளிப்பு விழா நேரத்தை மாற்றச் சொன்னார். அப்போது, குரியன் மூன்றாவது ஒத்திகையில் எங்கள் முன் இருந்தார். செய்தி சொல்லப் பட்டதும், பரங்கிப் பழம் பப்பாளிப் பழமானது. ‘I won’t allow any *** ** * ***** to **** ** my plan’ என்று குன்றேறி நின்ற அவரின் வெகுளி எரிமலைக் குழம்பாய்ப் பீரிட்டது. அந்தத் அரசியல் தலைவரை, ஒரு தனி விமானத்தில் அழைத்து வந்து, குறித்த நேரத்தில் விழாவை நடத்தினார்.
பட்டமளிப்பு விழா முடிந்த அன்று மாலை ஒரு தேநீர் விருந்து நடைபெறும். பட்டமளிப்பு விழாவுக்காக என் அப்பா வந்திருந்தார். கிட்டத் தட்ட 10 அடி தொலைவில் டாக்டர்.குரியன். அவரிடம் சென்று, ‘இவர் என் தந்தை. கோபிச் செட்டி பாளையம் அருகில் உள்ள தளவாய்ப்பேட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்’ என்று அறிமுகம் செய்ய ஆசைப்பட்டேன். அவருக்கு அது ஒரு பழம் நினைவைக் கொண்டு வரும் என்ற ஆசையில். அவர் கோபிச் செட்டிபாளையத்தில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர். பின்னர் கிண்டி பொறியியற் கல்லூரி அதன் பின் அமெரிக்காவில் அணு இயற்பியலில் டாக்டர் பட்டம். ஆனால், தயக்கமும் பயமும் ஆசையை அழுத்தி விட்டிருந்தன.
91 ஆம் ஆண்டு, இந்தியாவைப் புரட்டிப் போட்ட ஒரு ஆண்டு. அந்நியச் செலாவணிச் சிக்கலில் சிக்கிய பாரதத்தைக் காப்பாற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன. லைசென்ஸ் ராஜ்ஜியத்தை ஓரிரவில் ஒழித்தார் அன்றைய நிதியமைச்சர் டாக்டர்.மன்மோகன் சிங். அதில் பாலும் அடங்கும். ஆனால், டாக்டர் குரியன் அதை எதிர்த்தார். கூட்டுறவு பால் சங்கங்கள் விவசாயிகளின் நிறுவனங்கள். அவற்றால், தனியார் துறையுடன் போட்டி போட இயலாது என்று. அது மட்டுமில்லாமல், தனியார் துறை வந்தால், லாபம் மட்டுமே குறிக்கோளாகி, அத்தியாவசியப் பொருளான பாலின் விலை ஏறி விடும், விவசாயிகளிடம் இருந்து நேரடிக் கொள்முதல் கைவிடப் பட்டு, இடைத்தரகர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள் என்னும் வாதங்களை முன்வைத்தார். அவரின் வாதங்கள் ஏற்கப் பட்டு, பால் துறையில் மட்டும் மீண்டும் லைசென்ஸ் முறை கொண்டு வரப் பட்டது. நிதியமைச்சராகும் முன்பு, இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய மன்மோகன் சிங்குக்கு, குரியனின் சாதனை மீது பெரும் மதிப்பு இருந்ததும் ஒரு பெருங்காரணம். (அவர் மகள் தமன் சிங் ஒரு இர்மா பட்டதாரி!)
90 களில், தாராள மயமாக்கல் ஒரு பெரும் மதமாகவும், சர்வ ரோக நிவாரணியாகவும் கொண்டாடப் பட்டது. எல்லா லைசென்ஸ்களையும் ஒழித்தாலே இந்தியா முன்னேறி விடும் என்னும் மூட நம்பிக்கை மழைக்கால வெள்ளம் போல நுரைத்தோடியது. அதற்கு எதிர்வினையாற்றியவர்கள் பழமைவாதிகளாகவும், செல்லாக்காசுகளாகவும் சித்தரிக்கப் பட்டனர். குரியனும் அதற்கு விதிவிலக்கில்லை. அவருக்கு வயதாகிவிட்டது. அவர் பெரும் சாதனையாளர்தான்.. எனினும், அவர் விலகி இளம் தலைமுறைக்கு வழிவிட வேண்டும் என்னும் ஓசைகள் கேட்கத் துவங்கின.
லைசென்ஸ் முறை வேளாண்மையைப் பாதிக்கும் சில துறைகளில் இருந்தது. உரம், கரும்பு, பால், பூச்சி மருந்து முதலையவற்றில். இதில் கரும்பும், பாலும் கொஞ்சம் வித்தியாசமனவை. அவற்றுள் விவசாயிகளின் நேரடிப் பங்களிப்பு இருந்தது. கரும்பு ஆலை லைசென்ஸ் மத்திய அரசு கையில் இருந்தது. கரும்பு விளையும் வேளாண் பகுதிகளைப் பிரித்து, ஒரு குறைந்த பட்ச கரும்பு விளையக் கூடிய ஒரு வட்டாரத்தை, மத்திய அரசு ஒரு தொழில் முனைவோருக்கு அளித்து, அவருக்கு கரும்பு ஆலையை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமம் வழங்கும். அந்த வட்டாரத்தில் வேறெவரும் விவசாயிகளிடம் இருந்து கரும்பை வாங்க முடியாது.
வருடத்தில் சில மாதங்கள் கரும்பு ஆலைகள் இயங்கி, சர்க்கரை உற்பத்தி செய்து, அவற்றை, ஆலைகள் தமது கிடங்குகளில் வைத்து விடுவார்கள். விற்க முடியாது. விற்க, அரசின் அனுமதி தேவை. மத்திய அரசு, மாதா மாதம் ஒவ்வொரு ஆலையும் எவ்வளவு விற்க வேண்டும் என்று ஒரு ஆர்டர் கொடுப்பார்கள். அதில் ஒரு சதவீதம் ரேஷனுக்குக் கொடுத்துவிட வேண்டும். இம்முறையினால், வெளி மார்க்கெட்டில் சர்க்கரை விலை கட்டுப் படுத்தப் பட்டது. விலை வீழ்ந்த காலங்களில், விற்கும் அளவைக் குறைத்தும், ஏறிய காலங்களில், விற்பனை அளவை அதிகரித்தும் அரசு மேலாண்மை செய்து வந்தது. இதனால், ஆலைகள் ஒரு சர்க்கரை வட்டத்துக்குள் மாட்டிக் கொண்டன (sugar cycle). ஓவ்வொரு 4-5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, கரும்பு உற்பத்தி அதிகமாகி, அவர்கள் பணம் முடங்கி, விலை குறைந்து அவர்கள் லாபம் பாதிக்கப் படும்.
அடுத்த ஆண்டு, அவர்கள் விவசாயிகளிடம் இருந்து சரியாகக் கொள்முதல் செய்ய மாட்டார்கள். இங்கும் அரசு தலையிட்டு, விவசாயிகளுக்கு என்ன கொள்முதல் விலை தரவேண்டும் என்று நிரணயிக்கும். சர்க்கரை விலை வைக்கும் அரசுத்துறைக்கு நல்ல இரண்டாம் வருமானம் உண்டு. விற்கும் விலையில், கிலோவுக்கு இவ்வளவு என்று ஆலை முதலாளிகளும் தனியே வாங்கிக் கொள்வார்கள். அவர்களிடம் இருந்து ஒரு பங்கை அரசியல்வாதிகள் பிடுங்கிக் கொள்வார்கள். கொள்முதல் விலை குறைந்தால், விவசாயிகள் கொடி பிடிப்பார்கள். அவர்கள் செல்வாக்கு 4 மாநிலங்களில் உண்டு. என்வே, அரசியல் வாதிகள் விவசாயிகளுக்கு நல்ல விலையும் பேசி வாங்கித் தருவார்கள். அதே சமயம் சர்க்கரை விலை அதிகரித்தால், அரசாங்கள் ஆடும் – எனவே அரசியல்வாதிகள் அதையும் கவனமாகக் கையாண்டார்கள்.
மொத்தத்தில், ஊழல் மலிந்த, அதே சமயம் அத்தொழிலின் ஐந்து முக்கிய பங்குதாரர்களுக்கும் (அரசு, அரசியல்வாதி, தொழில் அதிபர்கள், விவசாயிகள், நுகர்வோர்), அதிக நட்டமில்லாமல் நடந்து வந்தது. இந்தியா உலகின் மிகப் பெரும் சர்க்கரை உற்பத்தியாளர். தென்னிந்தியாவின் கரும்பு உற்பத்தித் திறன் உலகில் ஒரு சாதனை.
கரும்பு வாங்கும் விலையையும், சர்க்கரை விற்கும் விலையயும், சர்க்கரை விற்பனை அளவையும் அரசே நிர்ணயிப்பது தகாது என்று சுதந்திரச் சந்தைப் (free market) பூசாரிகள் குரலெழுப்பினர். அரசும் பணிந்து, சர்க்கரை விதிகளைத் தளர்த்தினர். முதலில், விற்பனை விதிகள் தளர்ந்தன. சர்க்கரை, பொருட்சந்தையில் ஊக வணிகம் செய்யவும் அனுமதித்தனர். சர்க்கரைப் பொருளாதாரத்தை விடப் பல மடங்கு ஊக வணிகம். விளைவு, நாட்டின் சர்க்கரை ஆலைகளில் இருந்த சர்க்கரை அனைத்தும் சந்தைக்கு வந்தன. 15 ரூபாய் இருந்த சர்க்கரை 11 ரூபாய்க்கு வந்தது. பொருளாதார பலமில்லாத ஆலைகள் அவற்றைக் குறைந்த விலையில் விற்று நொடித்தனர். அவற்றைப் பெரும் சுறாக்கள் கவ்வின. சர்க்கரை ஆலையை விட, அதன் ஏஜெண்டுகள் பெரும் ஆட்களாக உருவாகினர். இரண்டே ஆண்டுகளில், இந்தியாவின் சர்க்கரைப் பொருளாதாரத்தின் அஸ்திவாரம் ஆடியது. தொழிலதிபர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், விவசாயிகளுக்கும் முதல் அடி. மீண்டும் சர்க்கரை லைசென்ஸ் நடைமுறைக்கு வந்தது. இன்று ஓரளவுக்கு சர்க்கரைப் பொருளாதாரம் கட்டுப் பாட்டுக்குள் உள்ளது.
நல்ல வேளையாக, பாலில் இது நிகழும் முன்பே தடுக்கப் பட்டது. அதற்கு, குரியனின் நேர்மையும், பால் உற்பத்தியில் நடத்தப் பட்ட சாதனையும், அதனால் எழை விவசாயிகள் நேரிடையாகப் பெரும் அளவில் பயனடைந்திருந்ததுமே காரணம். இன்றும் நாடெங்கிலும் தொழில் முனைவோரும் பால் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும், பாலின் கொள்முதல் விலையை, கூட்டுறவு சங்கங்களும், அவற்றை ஆதரிக்கும் அரசுகளுமே தீர்மானிப்பதால், பாலின் விலை ஒரு கட்டுக்குள் இருக்கிறது. வெறும் பாலில் மட்டுமே வியாபாரம் செய்தால் கட்டுபடியாகாதென்று தனியார் துறையினர் தயிர், வெண்ணெய், பால்கட்டி, முதலியவற்றில் கவனம் செலுத்துகின்றனர்.
இப்படி, தான் நம்பிய ஒரு கொள்கைக்காகப் போராடி வென்ற குரியன், தன் வாரிசைச் சரியாகத் தேர்ந்தெடுக்க வில்லை என்னும் ஒரு ஆதங்கம் பால் துறையில் இருக்கும் அனைவருக்கும் இருந்தது. அவரின் கீழ், இரண்டு மேலாண் இயக்குநர்கள் இருந்தனர். ஒருவர் டாக்டர்.அனேஜா இன்னொருவர் அம்ரீதா படேல். இதில் அனேஜா, ஒரு hands on knowledge இருந்த ஒரு பால் துறை நிபுணர். ஆனால், அம்ரிதா படேல், விற்பனை மற்றும் பொதுத் தொடர்புகளில் பரிச்சயம் உள்ளவர். மேலும் அவர், முன்னால் நிதியமைச்சர் ஹெச்.எம்.படேலின் மகள். நல்ல அரசியல் தொடர்புகள் உள்ளவர். அந்த சஸ்பென்ஸ் நீடித்து, இறுதியில் குரியன் அம்ரிதா படேலைத் தேர்ந்தெடுத்தார்.
அவருக்குப் பிரச்சினைகள் அங்கிருந்து துவங்கின. அம்ரிதா படேலின் நோக்கம் வேறாக இருந்தது. கூட்டுறவுத் துறையை அவர் கார்ப்பரேட் ஆக்கும் செய்யும் நோக்கத்தோடு, சில நடவடிக்கைகளை எடுத்தார். தில்லி மதர் டெய்ரிக்கு தனியார் துறையில் இருந்து மிக அதிக சம்பளத்தில் ஒரு C.E.O வை நியமித்தார். அமுல் நிறுவனத்தலைவரை விட பலமடங்கு சம்பளம். மொத்தக் கூட்டுறவுத் துறையும், மிதமான சம்பளம், லாப நோக்கின்மை முதலியவற்றால், மிக வளமாக ஓடிக்கொண்டிருந்தது. மிக முக்கியமாக, அமுல் நிறுவனங்களின் அடிப்படை, மக்களாட்சியாகும். உற்பத்தியாளர்களால், மேலாளர்கள் நியமிக்கப் பட்டு, நடத்தப் படும் ஒரு இயக்கம். மெத்தப் படித்த மேதாவிகளால், குளிர்பதன அறைகளுக்குள் நடத்தப் படும் ஒன்றல்ல. அதன் அடிப்படையிலேயெ தவறு செய்தால் என்னாகும் என்ற கவலை எல்லோரையும் வாட்டியது. இர்மாவின் வழியும் டாக்டர் குரியனின் பாதையில் இருந்து கொஞ்சம் விலகத் துவங்கியது. மிக மோசமாக விளையாடப் பட்ட அந்தச் சதுரங்க விளையாட்டில், அவர் வயதின் காரணமாகவும், மாறிய பொருளாதாரச் சூழல்கள் மற்றும் அரசியலின் காரணமாகவும் வெளியேற நேர்ந்தது
அவரை 2008ல் நானும், இன்னொரு இர்மா பட்டதாரியான என் மனைவியும், மற்றும் சில நண்பர்களும் அவரது 85 ஆவது பிறந்த நாளின் போது, சென்னையில் அவர் மகள் நிர்மலா அவர்கள் வீட்டில் பார்த்தோம். அப்போதுதான், குஜராத் அரசியல்வாதிகளின் தலையீட்டில் வெறுத்து, அமுலின் தலைவர் பதவியைத் துறந்திருந்தார். அரசியல் அல்பங்கள் அவருக்குக் கொடுக்கப் பட்டிருந்த ஒரு பழைய அம்பாஸடர் காரை பிடுங்கிக் கொண்டு விட்டிருந்தன. ஆனால், பிறந்த நாள் கேக் வெட்டிய அவர் மிக உற்சாகமாக இருந்தார். ஒரிசாவில் இன்னும் ஒரு இர்மா துவங்கப் போகிறேன் என்று பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நாட்கள் கழித்துப் பார்க்கும் ஒரு ஆர்வத்தோடு அவரைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அவரின் கனவுகள் இனிமேல் நடக்குமா என்ற சந்தேகத்தோடு. ஆனால், அவரை எதுவும் பாதிக்காது என்றே தோன்றியது.
ஒரு சகாப்தம் முடிந்துவிட்டதா என்று ஒரு கேள்வி மனதுள் எழுகிறது. இல்லையென்றே பதிலும் எழுகிறது. 11 கோடி வருமானத்தைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கும் அமுல் நிறுவனம், அவ்வளவு எளிதில் வீழ்ந்து விடுமா என்ன?? இன்றும் அதன் தலைமை, அமுலுக்குப் பின்னால் இருக்கும் ஒரு பாரம்பரியத்தை உணர்ந்த ஒன்று. இன்றைய சேர்மன் சோதி, 28 வருடமாக அங்கேயே பணியாற்றி வருபவர். குரியனின் கனவை மேலெடுத்துச் செல்லும் வல்லமை கொண்டவர். அவரின் கீழ், பல காலமாகப் பணியாற்றி வரும் இர்மா பட்டதாரிகளும் அவருக்குப் பக்கபலமாக இருப்பார்கள். ஆனால், தேசிய பால் வள நிறுவனம் இருக்குமா என்று சந்தேகம்தான். என் வேலை, பால் வியாபாரமல்ல. விவசாயிகளுக்கு, அவர்கள் வாழ்வைக் கொடுப்பது என்பது குரியனின் கொள்கை. My job is to empower them என்பார். ஆனால், தேசிய பால் வள வாரியம், அதை வெறும் பாலாகக் குறுக்கிக் கொண்டு விடக் கூடும்.
இறுதியில், தன் வழிவந்தவர்களாலேயே வெளியேற்றப் பட்டு, எந்த மாநிலத்தின் கடை மக்களின், சமூகப் பொருளாதார நிலையை உயர்த்தினாரோ, அந்த மக்களின் அரசியல் பிரதிநிதிகளால் அசிங்கப் படுத்தப் பட்டு, தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் இம்மாமனிதர் ஒரு தோல்வியா? சுதந்திரம் பெற்ற பின் காந்தி ஒரு சுமையாகிப் போனது போல், இவரும் ஆகிவிட்டாரா?
குரியன் அமுல், தேசிய பால்வள வாரியம், தேசிய கூட்டுறவு ஒன்றியம், தேசிய பால் இயந்திர உற்பத்திக் கழகம் என்று 30 நிறுவனங்களை தம் வாழ் நாளில் உருவாக்கினார். நேருவைப் போல அவர் ஒரு institution builder. அவரை மேலோட்டமாகப் பார்ப்பவர்கள் அவர் ஒரு சர்வாதிகாரி என்று சொல்வார்கள். அது வெளியில், மற்றவர்களுக்காக அவர் உருவாக்கிக் கொண்ட ஒரு மேல் பூச்சு. அற்பங்களை அகங்காரத்தால் எதிர் கொள்கிறேன் என்று ஜெயகாந்தன் சொன்னதைப் போல.
உண்மையில், தன் கீழ் பணிபுரிந்தவர்களுக்கு, சில அடிப்படை விழுமியங்களை அளித்து விட்டு, முழுப் பொறுப்பையும் அவர்கள் கையில் கொடுத்து விடுவார். ஆனால், அவர்கள் செய்த வேலைகளை, review செய்யும் போது, மிகக் கூர்ந்து கவனிப்பார். ஒவ்வொரு சிறு பிழையையும், பரிபூர்ணமில்லாத வேலையையும் மிகக் கடுமையாக விமரிசிப்பார். அதில் வெளிப்படும் எள்ளல், அற்பங்களை மிகக் காயப்படுத்தி விடும். ஆனால், உண்மையான மனிதர்களை மேம்படுத்தவே செய்யும். இர்மாவில், எல்லோராலும் போற்றப் படும் பேராசிரியர் ஃபன்ஸால்கர் இதற்கு நல்ல உதாரணம். லேசர் முனை போன்ற கூரிய மூளை கொண்டவர் அவர். வகுப்பறையில் அவரின் மேலாண்மை அலசல்களை, மாணவர்கள் வாய் பிளந்து பார்ப்பார்கள். அவரை, குரியன், சில கான்ஃப்ரன்ஸ்களில், புரட்டி எடுத்திருக்கிறார். ‘அவர் வைரத்தைப் பட்டை தீட்டும் கலைஞன்’ என்பார் ஃபன்ஸால்கர்.
32 ஆண்டுகளில், இர்மாவில் இருந்து பல சமூகப் போராளிகள் உருவாகி உள்ளார்கள். திருவனந்தபுரத்தின், தென்னிந்திய மீனவர் கூட்டுறவுச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் விவேகானந்தன், ராஜஸ்தான் உதய்ப்பூரின் சேவா மந்திரின் தலைவி நீலிமா கேதான், அஸ்ஸாமில் ஊரகப் பணியாற்றி, தீவிரவாதிகளால் கடத்திக் கொல்லப் பட்ட சஞ்சய் கோஷ், அமுல் நிறுவனத் தலைவர் சோதி முதலியோர் மிக முக்கியமான தலைவர்கள். அவர்கள் தாண்டி, மிகச் சிறந்த களப்பணியாளர்களாக, மறைந்த கூடலூர் மனோகரன், மதுரை நரேந்தர் காண்டே, அமுல் ராஜன் என்று பெரிதாக நீளும் பட்டியல் உண்டு.
இர்மாவில் படித்து, ஊரக மேலாண் துறையை விட்டுப் பிரகாசிப்பவர்களும் உண்டு. ஐ.டி.ஸியின் துணைத் தலைவர் ஷிவக்குமார், வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் எடிட்டர் நர்ஸி ரெட்டி, ரிலையன்ஸ் பால் நிறுவனத் தலைவர் ஹர்சேவ் சிங் என்று இன்னொரு பட்டியல் அது. துவக்க கால இர்மாவில் பாரதத்தின் மிகச் சிறந்த பேராசிரியர்கள் பணி புரிந்திருக்கிறார்கள். பேராசிரியர் ஸ்ரீனிவாசன், ராஜகோபாலன், துஷார் ஷா, ஃபன்ஸால்கர் என்று மிக மரியாதைக்குரிய பட்டியல் அது. துஷார், உலகின் மிகச் சிறந்த நீர் மேலாண் நிபுணர்களில் ஒருவர். ஃபன்ஸால்கர் டாட்டா குழுமத்தில் இன்று ஆலோசகர். ஸ்ரீனிவாசன் பெங்களூர் மேலாண் கழகத்தின் மூத்த பேராசிரியர்.
விளம்பரத் துறையிலும், குரியன் ஒரு தனிமுத்திரையைப் பதித்தார். வாரா வாரம் வரும் அமுல் ஹோர்ட்டிங்குகளில், கார்ட்டூன் மூலம் அன்றைய நாட்டு நடப்புகள் விமரிசிக்கப் படும். அதன் முன் வரைவை ஒரு முறை பார்த்து, அதை உருவாக்கிய விளம்பர நிறுவனத்துக்கு அனுமதியளித்த டாக்டர் குரியன் பின் அதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்ட போதும், தன் முடிவை மாற்றிக் கொள்ள வில்லை. ஒரு முறை கூட அந்த விளம்பர நிறுவனத்துக்கு யோசனை சொன்னதில்லை. அவர்களுக்கு அவர்கள் வேலையை எவ்வாறு சிறப்பாகச் செய்வதென்று தெரியும் என்பதே அவர் நிலை. இன்று இந்தியாவின் தலைசிறந்த விளம்பர கேம்பேயின் அந்த வாரந்தர ஹோர்டிங் என்பது அத்துறை நிபுணர்களும் அனைவருமே ஒத்துக் கொள்ளும் விஷயம்.
இவ்வளவு ஒரு பெரும் பங்களிப்பு அவருக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்று பார்த்தால் குறைவு என்றுதான் சொல்லவேண்டும். பத்ம விபூஷன், மகசேசே மற்றும் உலக உணவுப் பரிசு போன்றவை. ஆனால், இம்மாபெரும் சாதனைக்குக் கிடைக்க வேண்டிய நோபல் பரிசோ, பாரத ரத்னாவோ கிடைக்கவில்லை என்பது ஒரு பெரும் சரித்திரச் சோகம்தான். முகத்தில் கரியைப் பூசிக் கொண்டிருக்கும், இஸ்ரோ ராக்கெட் விடுவதைப் பார்க்க நேரம் இருக்கும் பிரதமருக்கு, நேரில் சென்று ஒரு அஞ்சலி செலுத்தக் கூட நேரமில்லை.. பாவம். குரியன் மரித்த நாளில், ஆனந்தின் அருகில் உள்ள நதியாதில் ஒரு பால் பண்ணையைத் திறந்து வைக்க வந்த மாநில முதல்வருக்கும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த நேரமில்லை. லட்சிய வாதத்தின் இறுதி அப்போஸ்தலரும் மரித்துவிட்டார் என்றே தோன்றுகிறது.
ஒரு தலைவராக, தன்னலம் கருதாத மேலாளராக, institution builder ஆக, பொது நல ஊழியராக என்று எந்த நோக்கில் பார்த்தாலும், இந்தியப் பொது வாழ்வின் ஈடு இணையற்ற ஒரு மனிதராக குரியன் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறார்.
அரவிந்தரின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ‘One man’s perfection can still save the world’. குரியனின் பங்களிப்பு உலகைக் காத்தது என்று சொல்ல முடியாது. ஆனால் 10 கோடிக்கும் மேலான மக்களை வறுமையில் இருந்து காப்பாற்றியிருக்கிறது என்று நிச்சயம் சொல்லலாம். ஜெய் ஹிந்த்!
ஜெ
மின்னஞ்சல்
செப்டம்பர் 14, 2012