தாடிக்கு மரியாதை
என்ன அண்ணே திடீர்னு தாடி வளக்க ஆரம்பிச்சிட்ட?
காதலுக்கு மரியாதைன்னு படம் எடுத்தாங்க. இப்பெல்லாம் தாடிக்குத்தான்டா மரியாதை.
என்ன அண்ணே சொல்லற?
நீ தொலைக் காட்சித் தொடர் பாக்கிறதில்லையா? தாடி உள்ள இளைஞர்களுக்குத்தான் வாய்ப்புத் தர்றாங்க. அதுக்கு என்னடா அர்த்தம்.
தாடிக்கு மரியாதைனு அர்த்தம்.
இதிலிருந்து என்ன புரியுது?
தாடி உள்ள இளைஞர்களத்தான், இளைஞர்களும், மக்களும் குறிப்பாப் பெண்களும் ஏத்துக்கறாங்க.
சரி உந் தாடி வளர்ப்பப் பத்திச் சொல்லு அண்ணே. மக்களில் பெரும்பாலோர் தாடி உள்ளவங்களத்தான் ஏத்துக்கறாங்க.
சரி. நீ புதுசா அரசியல் கட்சி ஆரம்பிச்சிருக்கற. அதுக்குப் பேரு தநமுக (தமிழர் நலம் முன்னேற்றக் கட்சி)ன்னு பேரு வச்சிருக்க. வேலை வெட்டி இல்லாத பசங்கள ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி அந்த ஊரில் மக்கள் அதிகம் கூடும் எடங்கள்ல 'தநமுக வில் 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இன்றே இணைவீர்! புதிய தமிழகத்தை உருவாக்குவோம்"னு சுவரொட்டிகள ஒட்டச் சொல்லற. நம்ம கட்சில இதுவரைக்கும் ஐயாயிரம் பேர்தான் சேர்ந்திருக்காங்க. எதுக்கு இந்தப் பொய்ப் பிரச்சாரம்.
தம்பி, ஒரு அரசியல் கட்சியின் வெற்றி மக்கள் நம்பும்படியாகப் பொய்களைச் சொல்லி விளம்பரப்படுத்தணும். நிருபர்கள் சந்திப்பில முட்டாள்த்தனமா பேசணும். தரக்குறைவாப் பேசணும். அப்பத்தான் ஊடகங்கள் எல்லாத்திலயும் நம்ம கட்சியப்பத்தி பரபரப்பான செய்தியப் போடுவாங்க. என்னக் கைது பண்ணுன்னா அதிலயும் இலவச விளம்பரம் கிடைக்கும். தேர்தல் நேரத்தில நிறைவேற்ற முடியாத ஆனால் மக்களை முட்டாள்களாக்கி அவர்கள் நம்பற மாதிரி வாக்குறுதிகளை அள்ளி வீசணும்
அதெல்லாம் சரி தான் அண்ணே. உந் தாடி...
அதுவா. சொல்லறேன். 95% பெண்கள் தொலைக் காட்சித் தொடர்களப் பாக்கறாங்க. அவுங்க வாக்கும் இளைஞர்கள் அனைவரின் வாக்கும் சிந்தாம சிதறாம நமக்குத்தான் கெடைக்கும். அது போதும்டா நம்ம கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க. அதுக்குத்தான்டா இந்த இளந்தாடி.
அண்ணே, நீ பெரிய சாணக்கியரா இருக்கிற. உனக்குப் பிரதமர் ஆகற தகுதியே இருக்குதண்ணே.
டேய் நம்மோட முதல் இலக்கு முதல்வர் பதவி. அடுத்த இலக்குத்தான் பிரதமர் பதவி.
வாழ்த்துக்கள் அண்ணே.