காடு - --------------------நாவல் -----------------நூல் -விமர்சனம்
காடு ஒரு பெருங்கனவின் முடிவில்லாக் கற்பனையின் நீட்சி.
எழுபத்தியொரு வயது கொண்ட முதியவர், தன்னுடைய பதினெட்டு வயதில் தான் கண்ட மிளா ஒன்றையும், அழியாமல் பதிந்து போன அதன் கால்த்தடம் கொண்டு தன் மனதின் அடியாழத்தில் பெருகிக் கொண்டிருக்கும் இளம்பிராயத்தையும் நினைவுகூறத் தொடங்குகிறார். கிரிதரன் எனும் முதியவரிடம் இருந்து ஆரம்பமாகிறது காடென்னும் பேரனுபவம். தன் வாழ்வின் மிகமுக்கிய தருணங்களைக் கொடுத்த, இளமையின் தேடல் தொடங்கிய பேச்சிமலைப் பகுதிகளுக்கு பயணிப்பதன் மூலம் தன்னுள் எழும் நினைவுகளாக நகர்கிறது கதை. தன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் வெவ்வேறு விதமான மனிதர்களை எதிர்கொள்ள நேரும் ஒருவன், அதன் மூலம் என்ன மாதிரியான மனப்பிறழ்வுகளுக்கு உள்ளாகிறான் அதன்பின்னான தருணங்களை எவ்வாறு எதிர்கொள்கிறான்? என்பதை காடு மற்றும் மனிதர்களின் துணைகொண்டு எவ்வளவு அழுத்தமாகவும் சுவாரசியமாகவும் கூற முடியுமோ அத்தனை சுவாரசியமாக எழுதி இருக்கிறார் ஜெயமோகன். காடு எனும் பெரும்களம் நம்முன் விரிய ஆரம்பிப்பதும் இங்கிருந்துதான்.
காடு நாவலில் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய ஓர் அம்சம் அதன் வடிவம். பகடையின் உத்தரவிற்கு ஏற்ப முன்னும் பின்னும் நகரும் சோழியைப்போல கதையானது கிரியின் வெவ்வேறு காலகட்டங்களை நோக்கிப் பாய்கிறது. கிரி என்றில்லை கிரியுடன் தொடர்ந்து வரும் பல்வேறு கிளைக் கதாப்பாத்திரங்களும் இதேபோல் தங்கள் பின்புலத்தை ஏதேனும் ஒரு புள்ளியில் தொடங்குகிறார்கள். ஒருபுள்ளியில் தொடங்கி வளரும் கதை ஏதோ ஓரிடத்தில் தன்னிறைவு அடைகிறது. இந்நிகழ்வு ஏதேனும் ஒரு கதாப்பாத்திரத்திற்கு நிகழ்கிறது என்றால் பரவாயில்லை. நாவலில் இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒருபுள்ளியில் தன்னிறைவு அடைகிறார்கள் என்பதுதான் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டிய அம்சம். அவர்களுக்கான முக்கியத்துவமும் அதன் தேவையும் கதை முழுக்கவே இருக்கிறது. இதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும்.
காஞ்சிரம் மரத்தில் அரையப்பட்ட வனநீலியின் பச்சைநிறக் கண்கள் கிரிதரனின் வாழ்க்கை முழுவதும் வருவதைப் போல, தன் நிலத்தை அபகரிக்க நினைத்தவனின் மாட்டிற்கு கந்தகம் வைத்த கிரியின் அம்மாவை 'அவ கந்தகம்லா' எனக் கேலிபேசும் கிசுகிசுக்களைப் போல, ரெசாலத்தின் தேவாங்கைப் போல, தேவாங்கு ஏற்படுத்திய திருப்பத்தைப் போல, எப்போதும் ஒரே பாதையில், எடுத்து வைக்கும் காலடி கூட மாறாமல் நீர் அருந்த வரும் மிளா போல, அய்யரின் சிவஞான சிவபோதம் போல, மேனனின் மனைவியைப் போல நாவல் முழுக்க பல கிளைக்கதைகளின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. இந்த அத்தனைக் கிளைகளும் சேர்ந்து கிரி எனும் ஒரு பெரிய மரத்தை உருவாக்குகின்றன. அந்த மரமே தன்னுள் பல்கிப்பெருகி காடாகி வளர்கிறது. காட்டின் நீலியான மலயனின் மகளை கரம் பிடிக்க ஆவேசம் கொள்கிறது. குட்டப்பனின் ஆறுதல் தேடி நித்தமும் அலைகிறது. ஒரு காட்டாறு போல கிடைத்த வழிகளில் எல்லாம் கிளைபரப்பி மீண்டும் ஒரு புள்ளியில் ஒன்றாக இணைந்து மாபெரும் அருவியாக நிலம் நோக்கிப் பாய்வதைப் போல கிரியும் அவனுடைய கதையும் அவனுக்கான கதைகளுமாக நிறைகிறது நாவல்.
தன் அக்காவின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் மருமகனும் தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால், தான் எடுத்தும் நடத்தும் சிவில் காண்ட்ராக்ட் தொழிலை கவனித்துக் கொள்வதற்காக கிரிதரனை தன்னுடன் காட்டிற்குள் அழைத்துவருகிறார் அவன் மாமா சதாசிவம். அம்மாவையும் மாமாவையும் மீறி எதுவும் செய்ய இயலாது என்ற காரணத்தால் எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல் காட்டிற்குள் நுழைகிறான் கிரி. காடும் காடு சார்ந்த சூழலும் அவனுக்குள் ஒருவித தனிமையை ஏற்படுத்துகிறது. தனிமையில் இருந்து விடுதலை அடைவதற்காகத் தன் தேடலை காடு நோக்கி செலுத்துகிறான் கிரி. காடு அவனுக்குள் நிகழ்த்தும் உணர்வெழுச்சிகள் அவன் எதிர்பார்க்காத விதத்தில் நகர்கின்றன. இருந்தும் காடு குறித்தான அவன் தேடலும் ஆர்வமும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கான காரணமும் அவனிடம் இல்லாமல் இல்லை.
தனக்கு முன் அடர்ந்து பரவி நீளும் காட்டினுள் நுழைந்து வழிதவறி, கிடைத்ததை உண்டு, பாம்பு, காட்டுப்பன்றிகளுக்குப் பயந்து பின் எங்குமே உணவு கிடைக்காமல் பித்துநிலைக்குச் சென்று என காடு கொடுக்கும் அந்த முதல் அனுபவமே கிரிக்கு அத்தனை மிரட்டலாக அமைகிறது. காட்டில் திசை தப்பிப்போனவனின் அந்த ஒருநாள் எப்படி இருக்கும் என்பதற்கான மிகச்சிறந்த காட்சி அது. வழிதவறி தப்பிப்பிழைக்க வழியில்லாமல் அலைபவன், மிளாவின் துணைகொண்டு தன் குடிசையை கண்டடைந்த அந்த தருணத்தில், தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் அந்த நேரத்தில்தான் தெரியவருகிறது இத்தனை நேரமும் பசியிலும் பயத்திலும் தலைதெறிக்க ஓடிவந்த காட்டு வழியில், தன் காலுக்குக் கீழ் இருந்தவை மொத்தமும் மரவள்ளிக் கிழங்கு என. கிட்டத்தட்ட கிரியின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் இப்படித்தான் இருக்கிறது. தன் அனுமதி இல்லாமலேயே ஏதேனும் ஒன்றில் அகப்பட்டுப் பின் தப்பிக்க வழி தேடி பித்துப்பிடித்து, பித்துநிலையில் இருந்து மீள நினைக்கும் போது தவறு எங்கே என புரியும். இதுதான் கிரி.
தன் வாழ்க்கை முழுக்க கிரிக்கென இருந்த இரண்டே இரண்டு ஆறுதல்கள் ஒன்று குட்டப்பன் இன்னொன்று தன் மூத்த மகன். அதுவும் தன் மூத்தமகன் தன் மனைவி வேணியைப் போல் இல்லாமல் தன்னைப் போல இருக்கிறான் என்ற மன நிம்மதியாகக் கூட இருக்கலாம்.
ஒருவேளை இந்த நாவலை வடம் பிடித்தாற்போல ஒரே நேர்கோட்டில் எழுதி இருந்தால் நாவல் மொத்தமும் அபத்தமாகி இருக்கக் கூடும். அல்லது கிரியின் கழிவிரக்கம் மொத்தமும் நம்மீது சுமத்தபட்டிருக்கும். நீலியின் அழகையும் வேணியின் அவசியத்தையும் மெருகூட்டிச்சொல்வதே, முன்னும் பின்னும் நகர்ந்தபடி இருக்கும் இந்தக் கதையின் கதைகூறும் முறைதான். நீலி எதனுடனும் ஒப்பிட முடியாத சந்தனக்காட்டு மலைத்தேன் என்றால் வேணி அத்தனை துன்பங்களையும் ஒட்டுமொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து 'தேவடியாளப் போறதுக்குக் கூட வழியில்லையே' எனப் புலம்பும் ஒரு பாவாத்மா.
கிரியின் வாழ்க்கையில் நீலிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறும் ஒரு கதாப்பாத்திரம் என்றால் அது குட்டப்பன். கதை ஒருமாதிரி அழுத்தமாகச் செல்லும்போதெல்லாம் ஆபத்பாந்தனாக வருவது குட்டப்பனே. நமக்கும்கூட சரிந்து விழும்போதெல்லாம் கைகொடுத்து தூக்கிவிடவும், தோளில் தட்டிக்கொடுக்கவும் குட்டப்பன் என்ற ஒருவனின் தேவை இருக்கத்தான் செய்கிறது.
குட்டப்பன் செய்நேர்த்தி மன்னன். அவன் எது செய்தாலும் அது அத்தனை நேர்த்தியாக அமைகிறது. சமையல் செய்தாலும், பீடி பற்ற வைத்தாலும், வெறிகொண்ட மிருகத்தை மனிதர்களை பணிய வைத்தாலும், ஏன் காலில் இருக்கும் நகத்தைச் சுத்தம் செய்தாலும் கூட அதில் ஒரு நேர்த்தி இருக்கிறது. அதுதான் குட்டப்பன். நீலியைக் காணாது தவிக்கும் போது குட்டப்பன் கூறும் ஆறுதலும், படியளக்கும் முதலாளி என்றபோதிலும் கிரியின் மீது கைவைப்பது பிடிக்காது திருப்பி அடிக்கும் போதிலும் சரி, சினேகம்மையைப் புணரும் நிர்வாணத்திலும் சரி குட்டப்பன் ஒரு தெளிந்த நீரோடையாகவே இருக்கிறான். குட்டபனுக்கும் குரிசுவிற்கும் இடையே வரும் வாய்த்தகறாறுகளை ஜெயமோகன் மிகவும் ரசித்து எழுதியிருப்பார் என நினைக்கிறன். குட்டப்பனே ரசனையின் உச்சம் தான். அதன்பின்தான் நீலியும் மற்றவர்களும்.
கதையில் சற்றே எரிச்சலூட்டும் கதாப்பாத்திரம் என்றால் அது எஞ்சினியர் அய்யர் ஒருவரே. நீலியைக் கண்டு மயங்கி அவள் மென்னுடல் பற்றி விவரிக்கும் போது 'எய்யா சாமி நீ வாய மூடுறியா இல்ல உன் வாயிலக் குத்தவா' எனக் கேட்கத் தோன்றும் தருணத்தில் ஒன்று நாம் கிரியாக மாறியிருப்போம் இல்லை நமக்கே தெரியாமல் நீலியைக் காதலிக்க ஆரம்பித்திருப்போம்.
ஆதியில் மனிதன் படைக்கப்படாத காலத்தில் பெருங்காடு ஒன்று இருந்தது. அங்கே மனிதனைத் தவிர சகல ஜீவராசிகளும் ஜீவித்திருக்க யாதொரு தடையும் இல்லாத காலம் அது. இயற்கையே தன்னை அழித்துக்கொள்ள நினைத்தால் மட்டுமே பேரழிவு ஏற்பட்ட காலம். அதுவரையிலும் காடு தன் போக்கில் இயங்கிக் கொண்டிருந்தது. என்றைக்கு மனிதன் தன் எல்லைகளை, தன் தேவைகளைப் பெருக்க ஆரம்பித்தானோ அந்தக் கனத்தில் இருந்து சேர்ந்தே உருவான ஒன்றுதான் காடழிப்பு. இந்த நாவலில் காடழிப்பு பற்றி மிகத்தீவிரமாக பதிவு செய்யப்படவில்லை என்றாலும் தன்னால் இயன்ற இடங்களில் எல்லாம் அதனை பதிவு செய்யவும் தவறவில்லை ஜெயமோகன்.
காடு, உணர்ச்சிக் கொந்தளிப்பில் கிளர்ந்தெழும் தருணம் என்றால் அந்த ஆனி மாசத்து மழையின் போதுதான். கீரக்காதனில் இருந்து ஒட்டுமொத்த மலைவாழ் ஜீவராசிகளும் வஞ்சிக்கப்படும் ஓர் இடம். இயற்கையின் கொந்தளிப்பிற்கு முன் நீ ஒன்றுமே இல்லை என மீண்டும் மீண்டும் கூறும் ஒரு இடம். மழையில் மலையில் படரும் அந்த விஷக்காய்ச்ச்சலும், அதன் மூலம் பாதிக்கப்படும் ஒட்டுமொத்த மலையும் என நாம் அறிந்துகொள்ள ஒரு பேரனுபவமே அதில் இருக்கிறது. குட்டப்பன், ரெசாலம், தேவாங்கு, சினேகம்மை, எடத்துவா மேரி, குரிசு என காட்டிற்குள் கிரி சந்திக்கும் மனிதர்களும் மிக முக்கியமானவர்கள்.
காடு என்றில்லை, நிலத்தின் மீதும் கிரி எதிர்கொள்ளும் மனிதர்கள் மிக முக்கியமானவர்கள். மனிதத்துக்கம் என கம்பராமாயணம் குறித்துக் குறிப்பிடும் ஜெயமோகன் இந்த நாவல் முழுவதும் படம் பிடித்திருப்பது கிரி எனும் மனிதனின் மனிதத்துக்கத்தைத் தான். நாவல் முழுக்க எளிய மனிதர்களும் அவர்தம் செயல்களுமே நிரம்பி இருக்கின்றன. குன்றேறிய பெருமாள் தன் மாமாவிடம் வாங்காமல் போன அந்தப்பணமும், தனக்கு வாழ்க்கை காட்டிய தன் மாமாவின் பாவமும் தான் கிரி.
ஒருபெரும் படைப்பை விமர்சனம் என்ற கட்டுக்குள் அடைக்கவே முடியாது. ஒரு பேரனுபவத்தை வார்த்தையாக்குதல் என்பது அதைச் சிதைப்பதற்குச் சமானமானது. காடென்பது எப்படி அனுபவித்துத் திளைக்க வேண்டிய ஒரு விஷயமோ அதேபோலத்தான் இந்நாவலும். இங்கே கூறியிருப்பது ஒரு துளி. ஒரு தளிர். தளிரின் ஒரு சிறு பகுதி. காடென்னும் பேரனுபவம் புத்தகத்தில் இருக்கிறது. தவறாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.
நன்றி
நாடோடி சீனு