திராவிடம் என்ற சொல் நமக்கு எதிரானதுஅல்ல

திராவிடம் என்றால் அது ஒரு கேடுகெட்ட வார்த்தையாகவும், அதற்கும் தமிழர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாத சொல்லாக இங்கே சில பேரறிவாளிகள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

திராவிடம் என்பது மதமோ, சாதியோ, அல்லது அது நமக்கு அப்பாற்பட்ட வார்த்தையோ அல்ல, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு இன்நான்கு நிலத்தையும், நிலத்தவரையும், அதாவது தென் இந்தியர்களையும் தென் இந்தியாவையும் ஒற்றை சொல்லில் குறிப்பிடுவதுதான் திராவிடம் திராவிடர் என்பது, இதை புரிந்துகொள்ள இயலாதவர்களும், இந்து பாசிச பாசறையில் பாடம் கற்றுக்கொண்டு இருப்பவர்களும் திராவிடத்தின்மீது தவறான கருத்துக்களையே திணித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

திராவிடம் பேசும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம், அதற்க்காக திராவிடம் பேசுவதோ, திராவிடம் என்ற சொல்லை உச்சரிப்பதோ அசிங்கம் என்று கருதுவது அறிவிலித்தனத்தின் உச்சம் என்றே அடித்து கூறுவேன்.

ஒரு இனக்குழுவாக உருவாகி பல இனக்குழுக்களாக பிரிந்து உலகெங்கும் படர்ந்தவர்கள் தமிழர்கள் என்றும், தமிழ் சொற்கள் உலகின் பல மொழிகளிலும் கலந்து இருப்பதாகவும் பல ஆராய்ச்சி கூறுகள் குறிப்பிடுகின்றன. ஆத்திக புராணங்களில் கூட உலக ஐம்பத்தாறு தேசங்களில் திராவிட தேசம் என்று ஒன்று குறிப்பிடப்படுகிறது. கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ் இந்நான்கினையும் இணைத்த்து வட இந்திய இந்துத்துவா பாசிச சக்திகளுக்கு எதிராக தென் இந்திய சக்திகளை ஒன்று திரட்டவே பெரியார் அண்ணா போன்ற பழைய சிந்தனைவாதிகள் திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினார்கள், மற்ற மூன்று மாநிலத்தவரும் திராவிடம் என்ற குடையின்கீழ் இணையாமல் போனது வேறு வரலாறு.

திராவிடம் என்ற சொல்லை முதன் முதலில் குறிப்பிட்டவர் குமரில பட்டர் என்பவர் ஆவார், திரை என்றால் அலை, விடம் என்பது இடம் என்பதை குறிக்கும், திரையிடம் என்பது காலப்போக்கில் திராவிடம் என்பாதாக மருவி இருக்கலாம் என்பது எனது தனிப்பட்ட ஆராய்ச்சியின் முடிவு, கடலும் கடல் அலைகளும் சூழ்ந்த ஒரு நிலப்பரப்பையே திரையிடம் என்று அக்காலத்தில் கூறுவார்கள், அப்படி கூறப்பட்ட நிலப்பரப்புதான் இன்று கடலுக்குள் மூழ்கி இருக்கும் தமிழர்களின் குமரிக்கண்டம் என்பதாகும், ( திரைகடல் = அலைகடல் ) அலைகடல் சூழ்ந்த ஒரு நிபரப்பில் தோன்றிய இனம் திராவிட இனம்.

18 ஆம் நூற்றாண்டுக்கு முன்புவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகள் சமஷ்கிருத மொழொயில் இருந்து உருவானதாக பல அறிஞர்கள் கருதினார்கள், இதற்கு காரணம் சமஷ்கிருத மொழி தென் இந்திய மொழிகளில் அதிக அளவிலான ஊடுருவலே ஆகும்.

பதினெட்டாம் நூற்றாண்டிற்கு பிறகான காலங்களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம் இவைகள் தனி ஒரு மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும், இவைகளே தென் இந்திய மொழிகள் எனவும் பிரான்சிஸ் எல்லீஸ் என்பவர் தனது ஆராய்ச்சியின் மூலம் முன்தான் முதலில் குறிப்பிட்டார்.

அதன் பிறகு ஹோக்கன் , மார்க்ஸ் முல்லர் போன்ற மொழியியல் அறிஞர்கள் மால்தோ, தோடா, கோண்டி போன்ற மொழிகளும் தமிழ்மொழி குடும்பத்தை சார்ந்தவை என்றும் இவைகள் ஆரிய மொழிகளில் இருந்து மாறுபட்டவை என்றும் குறிப்பிட்டார்கள்.

1856 ல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும் தமிழ் மொழியே தென் இந்திய மொழிகளுக்கு வேர் என்றும் கால்டுவெல் என்ற அறிஞர் குறிப்பிட்டார்.

தென் திராவிட மொழிகள் 9 என்றும், நடு திராவிட மொழிகள் 12 என்றும், வட திராவிட மொழிகள் 3 என்றும் ஆக மொத்தம் திராவிட மொழிகள் 24 என்று ஆராய்ச்சி அறிஞர்கள் குறிப்பிட்டு இருந்தார்கள், ஆனால் தற்பொழுது எருக்கலா, தங்கா, குறும்பா, சோழிகா ஆகிய நான்கு மொழிகளும் திராவிட மொழி குடும்பத்தை சார்ந்தவை என்று தற்கால ஆய்வில் தெரிய வந்துள்ளது, எனவே திராவிட மொழிக்குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை அல்லது தமிழ் மொழிக்குடும்பங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆகா உயர்ந்து இருக்கிறது.

இப்படி இருக்கையில் திராவிடம் என்பதை வெறும் அரசியலாக மட்டுமே பார்த்து பேசுவது முறையாகாது, அன்றைய அரசியல்வாதிகளும் அறிஞர்களும் திராவிடம் அறிந்து திராவிடம் பேசினார்கள், இன்றைய அறிவாளிகள் திராவிடமும் அறியாமல் ஆரியமும் அறியாமல் எதை எதையோ குதறி துப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

தென் இந்தியாவையும், ஈழத்தையும் இணைக்கும் சொல் திராவிடம், தென் இந்தியாவின் நான்கு மாநிலங்களையும் இணைக்கும் சொல் திராவிடம், தென் இந்தியாவை தனியொரு நாடாக கருதத் தோன்றினால் அது திராவிட தேசமாக இருக்கும் என்று பெரியார் அண்ணா போன்றவர்கள் கருதி இருக்கலாம், எது எப்படியோ ஆனால் திராவிடம் என்ற வார்த்தை அருவருக்கத்தக்க வார்த்தை அல்ல .

திராவிடம் என்பதை அரசியல் என்ற அறிவற்ற குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்கின்றவர்களும் , மதம் என்ற மடமையின் தலையில் ஏறி நின்றுகொண்டு பார்ப்பவர்களும் தவறாகத்தான் பேசுவார்கள், திராவிடம் என்ற சொல்லை தந்தை பெரியாரோ பேரறிஞர் அண்ணாவோ சொந்தமாக உருவாக்கியது அல்ல, அவர்களுக்கு முன்பே அது இருந்தது, பெரியாரும் அண்ணாவும் ஆரிய பார்ப்பன ஊடுருவலையும் , சாதிமத கொடுமைகளையும் வேரறுப்பதற்கு தென் இந்தியா ஒன்றிணைய வேண்டும் என்பதை அவசியமாக கருதினார்கள்.

பெரியார் போன்ற போராளிகள் ஆரியத்தை மூர்க்கமாக எதிர்க்காமல் விட்டிருந்தால் இன்று தமிழ் வரலாற்றை நாம் முழுமையாக அனுபவிக்க இயன்று இருக்காது, நமது இலக்கியங்களும் இலக்கணங்களும் இன்னும் அதிகப்படியாக சிதறடிக்கப்பட்டு நமது மொழியையும் அதன் தொன்மையையும் மறந்துபோக மரித்துப்போக ஆரியம் இன்னும் ஆழமாக அடிகோலி இருக்கும்.

தந்தை பெரியார் அண்ணா போன்ற சுய அறிவாளிகள் வீசிய திராவிட எரிகுண்டுகள் ஆரிய ஊடுருவளையும், பார்ப்பீனிய அதிகார ஆதிக்கத்தையும், இந்துத்துவா பிரிவினைவாத மற்றும் மூடக்கொள்கைகளையும் தூள் தூளாக்கியதின் விளைவுதான் இன்று நாம் சுதந்திரமாக தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இருக்கிறோம், பேரினவாத சக்திகளை எதிர்த்து போராடும் வலிமை பெற்று இருக்கிறோம், திராவிடத்தை ஒதுக்கிவிட்டு தமிழ் தேசியம் பேசலாம், ஆனால் ஒரு தொலைநோக்குப் பார்வையுள்ள தமிழ்தேசியப் போராளி திராவிடத்தை கொச்சைப்படுத்தமாட்டான்.

அன்புள்ள அறிவாளிகளே திராவிடம் என்பதை மற்ற மாநிலத்தவர்கள் மதிக்காமல் மறந்திருக்கலாம், ஆனால் அவர்களுக்கெல்லாம் நாம்தான் வேர் என்பதை யாராலும் மறுக்க முடியாது, எனவே திராவிடம் என்ற சொல்லின் வரலாறு அறியாமல் அதை அவமானப்படுத்தாதீர்கள்.

-------------- நிலாசூரியன் தச்சூர்.

எழுதியவர் : நிலாசூரியன் தச்சூர். (25-Sep-18, 6:02 pm)
சேர்த்தது : நிலாசூரியன்
பார்வை : 333

சிறந்த கட்டுரைகள்

மேலே