புனைவு எனும் புதிர்

இந்த ஆண்டு புத்தக காட்சியில் வாங்கிய நூல்களுள் ஒன்று புனைவு எனும் புதிர். நல்ல அட்டைப்படம். போதாக்குறைக்கு சுற்றிலும் பாலித்தீனால் மூடப்பட்ட புத்தகம். ஆகவே இன்னும் பிரிக்கவே இல்லை!

தொகுப்பாசிரியர் அமேசான் கிண்டில் பதிப்பை இலவசமாக தந்த சமயம் தரவிறக்கினேன். ஒரு வகையில் இது நான் முழுமையாகப் படித்த முதல் கிண்டில் நூல். கிண்டில் அனுபவங்கள் பற்றி இன்னொரு பதிவில் இயன்றால் சொல்கிறேன்.

2016-ல் புனைவு எனும் புதிர் நாளிதழில் வந்த தருணத்தில் நான் சில வாரங்கள் கணினியில் படித்தேன். மூன்று கதைகள் மட்டுமே படித்தேன். நன்றாக நினைவிருக்கிறது. கி.ரா. – மின்னல், கு.ப.ரா – சிறிது வெளிச்சம், அசோகமித்திரன் – விரிந்த வயல்வெளிகளுக்கப்பால்.

வேறு கதைகளைப் படிக்கவோ, கட்டுரைகளைக் கூர்ந்து வாசிக்கவோ அப்போது காலம் அமையவில்லை. ஆகவே புத்தகம் வெளியானபோதே வாங்க வேண்டிய உத்தேசப் பட்டியலில் குறித்துக் கொண்டேன்.

பணி நேரம் தாண்டி புத்தகம் வாசிக்க முற்பட்டால், அதிலும் ஏதாவது தடை விழுந்துகொண்டே இருந்தது. ஆக, தினமும் படிக்கக் கிடைத்த சிறுசிறு இடைவெளிகளைப் பயன்படுத்த ’கிண்டில் ஃபார் ஆன்ட்ராய்ட்’ உதவியது.

முதல் கதை சிறிய கதை. வண்ண நிலவன் எழுதிய ‘மிருகம்’. கதை முதல் வாசிப்பில் வெறுமையாகத்தான் இருந்தது. அதற்கான விளக்கம் படித்ததும் அடுத்தடுத்த கதைகளை இன்னும் கூர்மையாக கவனித்துப் படிக்க வேண்டுமென தோன்றியது.

ஜி.நாகராஜனின் கதைத் தலைப்பு பல முறை பல பேர் குறிப்பிட்ட தலைப்பு. மிக கவனமாகப் படித்ததில் ஒரு நிறைவு. அதே மகிழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு கதை எனும் வேகத்தில் (?) படித்தேன். நாள் முழுக்க அசைபோட அதுதான் வசதியாகவும் இருந்தது.

மின்னல் கதையை பலமுறை நானே படித்துவியந்திருக்கிறேன். எந்தப்புள்ளியில் ஒரு சாதாரணக் கதை இலக்கியமாகிறது என விளக்கும் நுட்பம் அருமை. தி.ஜானகிராமனின் (சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்) கதை அத்தனை பெரிதாக, அத்தனை விவரணைகளோடு இருப்பினும் ஏன் அது சிறப்பான கதையாகிறது ? கி. ராஜநாராயணன் கதை பெரும்பாலும் ஒரே சூழலின் வருணனைகளும், உரையாடல்களுமாய் இருப்பினும் அது ஏன் சிறப்பான கதையாகிறது ?

சுந்தர ராமசாமியின் கதை (பள்ளம்) வெவ்வேறு புள்ளிகளாக கதையை நீட்டித்து கோர்த்த விதம் அருமையானது. இத்தொகுப்பில் மௌனியின் கதை (மாறாட்டம்) இருப்பதிலேயே எனக்கு ஆச்சர்யமூட்டிய கதை. முதல் வாசிப்பில் எனக்கு முழுமையாக விளங்காமல் மீண்டுமொருமுறை சில பத்திகளை வாசித்து விளங்கிக் கொள்ள இயன்றது.

ஷோபாசக்தியின் கதை (வெள்ளிக்கிழமை) அதன் நிகழிடம், அது சொல்லப்பட்ட தொனி, அதன் முடிவை நிறுத்திய விதமென முழுமையாக ஈர்த்தது.

எல்லா கதைகளும் அதனதன் அளவில் சிறப்பான கதைகள்தாம். ஒவ்வொரு ஆசிரியர் பெயரையும் குறிப்பிட்டுச் சொன்னால் கட்டுரையின் நீளம்தான் அதிகரிக்கும். அதை தவிர்க்கிறேன். இறுதியில் கதைகளின் தலைப்புகளை குறிப்பிடுகிறேன்.

தொகுப்பிலுள்ள கதைகளின் தேர்வு கண்டிப்பாக வாசிப்போரை ஈர்க்கும். கிண்டில் பதிப்பின் புதிய அட்டை இன்னும் அழகு! எப்போது அச்சு வடிவில் கிடைக்குமென தெரியவில்லை.

பல பேர் சொன்ன அதே மதிப்புரைதான்.

இந்நூல் துவக்க நிலை வாசகர்களுக்கு எளிமையாக தமிழ்ச்சிறுகதைகளின் வெவ்வேறு நுட்பங்களை, வெவ்வேறு காலச்சூழல்களிடையே நிகழும் கதைவெளிகளை அறிமுகம் செய்கிறது.

மதிப்பான நூல். தவற விட வேண்டாம்!

தொகுப்பின் கதைகள்
-------------------------------------
மிருகம் – வண்ண நிலவன்.
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்.
சிறிது வெளிச்சம் – கு.ப.ரா
முருங்கை மர மோகினி – கு. அழகிரிசாமி
மாறாட்டம் – மௌனி
மின்னல் – கி. ராஜநாராயணன்
விரிந்த வயல்வெளிக்கப்பால் – அசோகமித்திரன்
நிலை – பூமணி
பள்ளம் – சுந்தர ராமசாமி
வெள்ளிக்கிழமை – ஷோபாசக்தி
சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் – தி. ஜானகிராமன்
உபதேசம் – புதுமைப்பித்தன்


தொகுத்தவர் – விமலாதித்த மாமல்லன்.

நீங்களும் படிப்பீர்களென நம்புகிறேன்.

புத்தக நாள் வாழ்த்துகள்.

தமிழ்

எழுதியவர் : (26-Sep-18, 9:51 pm)
பார்வை : 53

மேலே