வாழ்நாள் உலவாமுன் ஒப்புர வாற்றுமின் – நாலடியார் 22
நேரிசை வெண்பா
வாழ்நாட்(கு) அலகா வயங்கொளி மண்டிலம்
வீழ்நாள் படாஅ தெழுதலால் - வாழ்நாள்
உலவாமுன் ஒப்புர வாற்றுமின்; யாரும்
நிலவார் நிலமிசை மேல். 22
யாக்கை நிலையாமை, நாலடியார்
பொருளுரை:
ஆயுள்நாட்களுக்கு அளவு காணும்படி விளக்குகின்ற கதிரவன் என்னும் ஒளிவட்டம் வீண் நாள் படாமல் தொடர்பாகக் தோன்றி வருவதனால் அம் முறையே கணக்கிடப்பட்டு ஆயுள்நாள் அற்றுப் போகுமுன் உதவி செய்யுங்கள்;
அந்த ஆயுள் நாளுக்குமேல் யாரும் இவ்வுலகத்தில் நிலைக்க மாட்டார்கள்.
கருத்து:
கதிரவன் நாடோறுந் தோன்றுதலால் நாட்கணக்குத் தெரிதலின், அக் கணக்குக் கொண்டு வாழ்நாள் கழியுமுன் அறஞ்செய்து கொள்க.
விளக்கம்:
அலகா - அலகாக, அஃதாவது அலகு கண்டு கொள்ளும் வகையில், அலகு - அளவு;
ஒளி மண்டிலம் - இங்கே பகலவன். ஒரு நாளாவது தவறாமல் என்றற்கு ‘வீழ்நாள் படாது' எனப்பட்டது.
வீழ்நாள்; தவறும் நாள்; தப்பிப்போகும் நாள் உண்டாகாதபடி என்பது பொருள்.
நிலவார் என்பதற்கு பகுதி நில் என்பதாகலின், நிலைக்கமாட்டார் எனப் பொருளுரைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுதலாலேயே இருவரறிவும் ஒத்து இணக்கமுறுதலின், உதவி ‘ஒப்புரவு' எனப்பட்டது.