உய்ந்துபோம் ஆறே வலிக்குமாம் மாண்டார் மனம் – நாலடியார் 23
நேரிசை வெண்பா
மன்றம் கறங்க மணப்பறை யாயின
அன்றவர்க் காங்கே பிணப்பறையாய்ப் -பின்றை
ஒலித்தலும் உண்டாமென் றுய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம். 23
- யாக்கை நிலையாமை, நாலடியார்
பொருளுரை:
பேரவை முழுதும் ஒலிக்கும்படி திருமண மேளமாய் முழங்கியவை திருமண நாளன்று திருமண மக்களுக்கு அத்திருமணக் கூடத்திலேயே சாவு மேளமாய்ப் பின்பு ஒலித்தலும் நேருமெனக் கருதி நன்னிலையுற்றுச் செல்லுவதற்கான அறவழியிலேயே அறிவு மாட்சிமைப்பட்டோரது நன்மனம் துணிந்து நிற்கும்.
கருத்து:
மணப்பறையே பிணப்பறையாகவும் மாறுமாதலின், யாக்கையின் நிலையின்மை கருதி உடனே அறஞ்செய்க.
விளக்கம்:
மன்றம் - அவை; இங்கே, திருமணப் பேரவை, மணமக்கள் ஆணும் பெண்ணுமாயிருத்தலின் அவ்விரு பாலார்க்கும் பொருந்த ‘அவர்க்கு' எனப் பலர் பாலாற் கூறினார்.
‘உய்ந்து போம் ஆறு', என்றது, பொதுவாக அறவழி.
இளமையைத் துய்ப்பதா அறவழியிற் செல்வதா என இருதலைப்பட்டு ஐயுறும் போது, மாட்சிமைப் பட்டாரது மனம் அறவழியின் பக்கமே ஈர்ப்புறும் என்னும் இயல்பை ‘வலிக்கும்' என்னும் ஒரு சொல்லால் விளங்க வைத்தார்.
வலிக்குமாம் என்பதில் ‘ஆம்' என்ப என்னுங் குறிப்பினது;