4,500 ஆண்டு பழமையான மொழி தமிழ் சர்வதேச ஆய்வில் தகவல்
தமிழ் உள்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதிலும் தமிழ்தான் திராவிட மொழிக்குடும்பத்திலேயே மிகப்பழமையான மொழி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் உள்ள மேக்ஸ் பிளான்க் அறிவியல் - மானுடவியல் வரலாற்று கல்வி நிறுவனமும் உத்தரகண்டின் டேராடூனில் அமைந்துள்ள இந்திய வனஉயிர்க்கல்வி நிறுவனமும் இணைந்து மொழி சார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டன.
இந்தியாவின் ஆதி இனமாகக் கருதப்படும் திராவிடர்களின் மொழியியல் ஆய்வை இந்நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டனர். தமிழில் இருந்து தோன்றிய பிற மொழிகள் குறித்தும், அவற்றிலிருந்து பிரிந்து புதிதாக உருவான கிளை மொழிகள் குறித்தும் அவர்கள் தரவுகளைச் சேகரித்தனர்.
வெளியான ஆய்வு முடிவுகள்
அதன் அடிப்படையில் சில விஷயங்களைக் கண்டறிந்து அதனை ஆய்வறிக்கையாக சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது : வங்கதேசத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் வரை பரவியிருக்கும் தெற்காசியப் பகுதி குறைந்தது 600 மொழிகளின் தாயகமாக உள்ளது. திராவிடம், இந்தோ - ஐரோப்பா, சீனா - திபெத்தியம் உள்பட 6 மொழிக்குடும்பங்களின் கீழ் மொழிகள் வகைபடுத்தப்பட்டுள்ளன.
திராவிட மொழிக்குடும்பம் முதன்மையானது
இந்த மொழிகளில் முதன்மையானதும் பழமையானதுமாக திகழ்வது சுமார் 80 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம். இன்றைக்கும் ஏறத்தாழ 22 கோடி மக்கள் இந்த மொழிகளை தற்போது பேசுவதாக ஆய்வு கூறுகிறது. தென் இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் தான் இந்த மொழிகளின் பயன்பாடு அதிக அளவில் உள்ளது.
சிதையாத தமிழ்மொழி
திராவிட மொழிக்குடும்பத்தில் பழமையான மொழி என்றால் அது தமிழ் மொழி தான். இதர மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் பரவலாக பேசப்படுகின்றன. இந்த மொழிகளின் இலக்கியங்கள் அனைத்தும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றியவை. உலகின் தொன்மையான மொழியாக சமஸ்கிருதமும், தமிழும் கருதப்படுகிறது. ஆனால் தமிழ் மொழி சமஸ்கிருதம் போல சிதையாமல் அதன் கல்வெட்டுகளும், காப்பியங்களும் தற்காலம் வரை தொடர்ந்து காணக் கிடைத்து வருகின்றன.
பூர்வீகத்தை கணிக்க முடியவில்லை
திராவிட மொழிகள் பூகோளரீதியாக பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்துத் தெளிவாக கணிக்க முடியவில்லை. ஆனால், திராவிட மொழிக் குடும்பங்களுக்கு இந்திய துணைக் கண்டம் என்பது பூர்வீகம் என்ற கருத்தொற்றுமை ஆய்வாளர்கள் மத்தியில் நிலவுகிறது. ஏறக்குறைய 3,500 ஆண்டுகளுக்கு முன் ஆரியர்கள் வருகைக்கு முன்பே திராவிடர்கள் இங்கு வாழ்ந்து வந்தனர் என்று ஆய்வில் தெரிய வருகிறது.
4,500 ஆண்டு பழமையானது
சில சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வின்படி திராவிட மொழிபேசும் மக்களிடம் இருந்து முதல்கட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் திராவிட மொழிகளின் வரலாற்றுக் காலம் என்பது 4 ஆயிரம் ஆண்டுகள் முதல் 4500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜலக்ஷ்மி