சிவதாண்டவம்

ஊர்த்துவ தாண்டவத்தில்
உன்னிடம் தோற்றுப்போன
சந்திரகாந்த தேவி அல்லவே நான்.
இதோ….
நானும் காலைத் தூக்கிவிட்டேன்.
உன் பிரணவ ஒலியில்
கரைந்துவிட
உன் உமையல்ல நான்.
அண்ட சராசரங்களை
எனக்குள் அடக்கும்
யோனி பீடத்தில்
உன் நெற்றிக்கண்
தீப்பிழம்பாய் எரிந்துச்
சாம்பலாகிப் போனது.

அந்தச் சாம்பலிலிருந்து
உன் ஆட்டத்திற்குள் அடங்கும்
காத்யாயனி தேவியைக்
அவளோடு நீயாடும்
சிருங்கார தாண்டவம்
உனக்காக என்னை
ஏங்கித் தவிக்கவிடும்
என்ற கனவுகளில் நீ.
கங்காதேவியையும்
துணைக்கு அழைக்கிறாய்.

பித்தனே மறந்துவிடாதே
பாற்கடலில்
நீயுண்ட நஞ்சை
ஸ்கந்தமாதாவின்
கைப்பிடிக்குள்
பத்திரமாக வைத்திருக்கிறேன்
என்பதை.

மகாபிரளயம் சாட்சியாக
நீ ஆடப்போகும்
ஊழிக்கூத்துக்கு
ஒத்திகைப் பார்க்க
என்னை அழைக்காதே.

என் கருமுட்டையிலிருந்து
நீ கற்றுக்கொண்ட பாடம்
ஆக்கலும் அழித்தலும்.
என்னில் சரிபாதியாக
நீ கொண்ட
அர்த்தநாரீஸ்வர கோலம்
உனக்கு
நான் போட்ட
காதல் பிச்சை.

போதும்…
சிவதாண்டவ
வேடங்கள் களைந்து
வெளியில் வா.
காத்திருக்கிறேன் காதலியாக
உன் நெற்றிக்கண்ணுக்கு
மட்டுமே தெரியும்
மூன்றாவது முலையோடு.


----------------------------------------
புதியமாதவி, மும்பை

திண்ணை

எழுதியவர் : (27-Sep-18, 4:22 am)
பார்வை : 87

மேலே