தடுமாற்றம் தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறிவாளர் – நாலடியார் 27

நேரிசை வெண்பா

படுமழை மொக்குளின் பல்காலும் தோன்றிக்
கெடுமிதோர் யாக்கையென் றெண்ணித் - தடுமாற்றம்
தீர்ப்பேம்யாம் என்றுணரும் திண்ணறி வாளரை
நேர்ப்பார்யார் நீணிலத்தின் மேல். 27

- யாக்கை நிலையாமை, நாலடியார்

பொருளுரை:

மழை நீரில் தோன்றுகின்ற குமிழியைப்போல பல தடவையும் தோன்றித் தோன்றி விரைந்து அழிந்து போகின்ற ஓருடம்பு இது என்று இதன் இழிவு கருதி இங்ஙனம் பிறவியில் தடுமாறுதலை யாம் நீக்க முயல்வேம் என்று மெய்யுணரும் உறுதியான அறிவுடையவரை ஒப்பவர் யாவர் இப்பெரிய நிலவுலகத்தில்; ஒருவருமில்லை.

கருத்து:

யாக்கையின் நிலைமை நீர்க்குமிழி போன்றதாதலால், பிறவித் தடுமாற்றத்தைத் தீர்க்க முயல்பவரே உயர்ந்தவராவர்.

விளக்கம்:

மழை படு மொக்குள் என்று மாற்றிக்கொள்க

‘பல்காலும்' என்னுங் குறிப்பால் விரைந்து கெடுதலும் பெறப்படும்.
உவமையின் இயல்பு பொருளில் விளக்கப்பட்டது.

தோன்றிக் கெடுதல் - பிறந்து இறத்தல்,

தடுமாற்றம் - பிறவித் தடுமாற்றம், அது தீர்த்தலாவது, யாக்கை இன்பத்தை ஒரு பொருளாகக் கருதி யொழுகாமல், அறவழியில் நின்று மெய்யுணர்ந்து வீடுபெற முயலுதல்,

மயங்கி வலைப்படாமையின், 1‘திண்ணறிவாளர்' என்றார். நோப்பார் யாருமில்லையெனவே, மேம்படுவாரின்மைதானே பெறப்பட்டது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Oct-18, 9:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

மேலே