மனிதநேயம் மலரட்டும்

“மனிதநேயம் மலரட்டும் ” வாசிக்கும்போது சற்று இனிக்கத்தான் செய்கிறது.அனால் உண்மைநிலை அதுவல்ல. அன்பெனும் பிடியுள் அகப்படாது,நெஞ்சை நஞ்சாக்கி , நம்மை நாமே அழிக்கும் நிலை . “அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ” என்பது மறந்து இன்று அன்புக்கு தாழிட்ட அதிசய ஜீவிகள் நாம் . என்னநடந்தாலும் சரி எனக்கென்ன என்று செல்லும் ஈன மனம் படைத்த மனிதவர்க்கம். கல்வி நெறியாளர்கள் கூட இன்று காசுபார்க்கும் சிந்தனை வளர்த்ததுதான், மனிதநேயத்தின் பேரிடி. கற்றோம் விற்றோம் என வாழ்க்கை நடத்தும் இன்றைய தலைமுறை பிழைகளுக்கு, மனிதநேயம் மலர்வது பற்றி எந்தொரு சிந்தனையுமில்லை.

காலங்களின் பரிணாமவளர்ச்சியால் கல்லாகிப்போன நமது மனங்களை சற்று கரைத்தால் தான் என்ன ...? அன்பென்னும் உணர்நிலையை எரிதழலில் இட்டபின்னே , நாமெல்லாம் அசைவற்ற கல்லாக மாறிப்போனோம். அறிவோடு கலந்த ஞானமும் அனுபவத்தினால் பிறந்த ஞானமும் இன்றைய சுழலில் காண்பது அரிதினும் அரிது. ஞானோபதேசிகள் என்றுமே அன்பின் பாதையில் அகிலத்தை வழிப்படுத்துவர். ஆனால் இன்று நாமெல்லாம் விஞ்ஞானம் வளர்த்தே விழுந்துகிடக்கிறோம். ஜீவகாருண்யம் கண்ட வள்ளலார் வாழ்ந்த தேசம் இன்று மனித ஜீவிதத்தை கொன்றுகுவிக்கும் அவலநிலை. அன்பென்னும் பிடியுள் அகப்பட்டு திளைத்தநாம் இன்று மதம்,இனம்,மொழி,சாதி என மானிடத்தை மறுதளிக்கும் நிலை.

எந்தஒரு தேசம் மனிதநேயத்தை மறக்கத் துவங்குகிறதோ, அந்த தேசம் அழிவுப் பாதையில் முன்னேறுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. சுதந்திர காலம் தொட்டே நம் தேசம் , மத பூசல்களாலும் , இன மோதால்களாலும், சாதிவெறியர்களின் சதகோடி சம்பவங்களாலும் பிரிவினையின் பிரளயத்தை வளர்க்கத் தொவங்கிவிட்டது. இன்று மிஞ்சிய ஈரமனங்கள் கூட பல வன்மத்தின் உச்சத்தால் உளறத்துவங்கிவிட்டன. இந்த நிலை மாறும் என்பதொன்றும் எனது அசாத்திய இச்சையல்ல. நாம் மறந்துபோன அன்பின் மகோன்னதங்களை சற்று நினைப்பதன் மூலம் இவையனைத்தும் மாறும் என்ற சாத்தியமான ஆசை. இன்ப துன்பங்களை மறந்து , அன்பிற்கு ஆழக்குழி தோண்டி , மனிதநேயத்தை மண்ணோடு புதைத்து, ஆன்மாவிழந்த வெற்றுடம்பாய் சலனமில்லாது நாமெல்லாம் எதை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறோம்.

ஈமக் குழியில் எறிந்த பிறகு இந்த சதைக்கூட்டில் மிஞ்சி இருப்பது சாம்பல் மட்டுமே.கருவறை பிறந்து கல்லறையின் காலப்பயணம் துவங்கும் இந்த இடைப்பட்ட வாழ்கையை, சற்றேனும் அர்த்தமுள்ளதாக வாழ்ந்து பார்க்கலாம். தீண்டாமையைத் தீண்டாமையே மனிதநேயம் மலர, சாலச் சிறந்த வழி. இனியேனும் பகைமை மறந்து நட்பு பாராட்டுவோம்.

- அன்புடன் வேத்தகன்

எழுதியவர் : (17-Oct-18, 1:20 pm)
சேர்த்தது : வ.கார்த்திக்
பார்வை : 210

சிறந்த கட்டுரைகள்

மேலே