எங்ஙனம் நியாயமாகும்

பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டென்று
பொங்கி எழுந்தனையோ கடல் தாயே?

எங்கெங்கும் ஓலங்கள்...ஓலங்கள்...
ஈங்கிதுவோ பிரளயத்தின் கோலங்கள்?

நடுக்கடலில் நின்றதனால் - நில
நடுக்க மதாலெழுந்த சுனாமியால் - உயிர்
எடுக்கவியலாது போன
என்னவன் கதையையா?

கதிர்காமம் செல்லவென்று
கடுகதி ரயிலேறிய அண்ணன் -மாத்தறைக்
கடற்கரையில் பிணமாய்க்
கரைதட்டிய கதையையா?

காயத்திரி பீடம் சென்ற அக்கா
பாயதிலே பிணமாய்ப்
படுத்து வந்த கதையையா?

தண்ணீர் வரமுன் போய்விடுவோமென்(று)
எண்ணமுன் சுழிநீரில் சங்கமமான -என்
கண்மணிகளின் கதையையா?

எதைத் தான் நான் சொல்வது ? - இனி
எப்படி யமைதியாய்க் கண்வளர்வது?

அலையோடு போந்த உடைமைகள்...
உலையேற்ற வழியில்(லா) எம்முறவுகள்...
நிலையில் இவ்வுலகிலிவை - இனி
நித்தியம் தானோ?

தங்குதடை இன்றி இங்கு
பொங்கிடுது வேதனை...
எங்களின் துயரிதுவோ
உந்தன்பெருஞ் சாதனை?

பொறுமைக்கு இலக்கணமாம் பூமித்தாய்
பெருமை கொண்டனளோ உனையுந்தாங்கி?

எங்களின் நிம்மதியைப் பூண்டோடழித்தநீ
இங்ஙனம் அமைதியா யுறங்குகின்றனையே - இது
எங்ஙனம் நியாயமாகும்?
~தமிழ்க்கிழவி(2004)

குறிப்பு:
இந்தோனேசியா #சுனாமியில் உயிரிழந்தோர் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்தனைகளோடு, 2004 ல் இலங்கையில் சுனாமியின் பாதிப்பை நேரில் கண்டு, தொண்டர் நிறுவனங்களோடு இணைந்து செயலாற்றிய போதெழுந்த மனவலைகளின் பிரதிபலிப்பான இக்கவிதையை இங்கு பதிவிடுகிறேன்:(

எழுதியவர் : தமிழ்க்கிழவி (18-Oct-18, 12:50 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 2423

மேலே