நினைவுகள்

தெள்ளத் தெளிந்த வானம்
மெல்ல சிவந்த நேரம்..
கதைகள் பேசி காற்று
உயிரில் கலந்த சமயம்..

நினைவுகள் சூழ்ந்த என்னை
கண்ணீர் சூழும் முன்னே
கவிதை காதல் செய்ய
கால்கள் தீண்டின அலைகள்..

தனிமை தொலைக்க மெல்ல,
இருவிழி கவியென தோன்றி
உயிரொளி பருகி அழைத்தாய்
நாம் கடந்த தடங்கள் காண..

தவிர்க்க நினைத்தேன் எனினும்
நினைக்க தவிக்கிறது உள்ளம்..
உன் மீளா கனவுகளால் மெல்ல
காதல் மீட்டிய நாட்களை..

உன் மௌனத்தின் யவனத்தில்
கவனம் தொலைத்த நாட்களை..
உன் அன்பின் விழிமொழியில்
கவிமொழி கற்ற நாட்களை..

என்றும் அழியா தடயங்களாய்
உன் விரல் வருடிய பொழுதுகளை..
என்றும் மறவா நினைவுகளாய்
உன் விழி தீண்டிய தருணங்களை..

நினைவு கசிவினால், தினமும்
தூக்கம் தொலைக்கிறேன் நான்
நகரத்துச் சாலையாய்..

உன் நினைவுகளுக்கு மரணம்
தர, தவித்து அழுகிறேன்..
உனை மறந்தால் மரணிக்க
போவது நானென அறியாமல்..

நம் வாழ்வின் தடங்களை
மெல்ல திரும்பி பார்க்க
முயலும் போதெல்லாம்..
முரண்பட்ட நினைவுகளால்
மூர்ச்சை ஆகி போகிறேன்..

நான் மீளும் நாளெது?

எழுதியவர் : லோகேஷ் நாகராஜன் (21-Oct-18, 10:59 am)
சேர்த்தது : லோகேஷ் நாகராஜன்
Tanglish : ninaivukal
பார்வை : 70

மேலே