மேவுகின்ற ஊருக்கு அணி உயர்ந்த மேலோரே – அணியறுபது 30
நேரிசை வெண்பா
ஆவுக் கணிபால்; அமைதி அலர்மலரும்
காவுக் கணிநிழலின் காட்சியே; - மேவுகின்ற
ஊருக் கணிஉயர்ந்த மேலோரே; ஊருகின்ற
தேருக் கணிகொடியே தேர். 30
- அணியறுபது,
-கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
பொருளுரை:
பால் வளம் பசுவுக்கு அழகு; குளிர் நிழல் பொழிலுக்கு அழகு; உயர்ந்த மேலோர் ஊருக்கு அழகு சீரான கொடி தேருக்கு அழகு எனப்படுகிறது. தேரும் ஊரும் காவும் ஆவும் எவ்வாறெல்லாம் சீரும் சிறப்பும் பேரும் பெருமையும் பெறுகின்றன என இவை தெளிவாய்க் குறித்துள்ளன.
பசுவின் பெருமைக்கழகு அதன் இனிமையான பாலும், அதன் சுவையுமே; இந்துக்களுக்கு பசு தெய்வாம்சம் பொருந்தியதாகக் கருதப்படுகிறது.
‘Cows are considered special or holy in many Hindu cultures. The milk from cows therefore contains the essence of all those energies and ghee is the essence of the milk’.
புத்தம்புது மலர்களும் செடிகளும் கொண்ட சோலைகளுக்கு அம்மலர்களும், மரங்களும் அவற்றின் நிழல் தரும் குளுமையுமே இனிமையாகவும், நல்ல காட்சிகளாகவும் ஆகிறது.
(மா விளம் விளம் விளம் மா என்ற வாய்பாடில் கலித்துறையில் அமைந்த பாடல்)
வாவி தாமரை வாண்முகம் மலர்ந்துநன் மருங்கில்
காவி சாத்தியுற் பலமெனும் கண்மலர் முகிழ்த்து
மேவி மாதவர் நிகர்ப்பது மின்னனர் குழல்போல்
நாவி மாமணம் கமழ்வது நைமிசா ரணியம்; 1 - திருக்குற்றாலப் புராணம்
இனிய பல வளங்களோடு நைமிசாரணியம் என்னும் குளிர்பூஞ்சோலை எழில் நிறைந்து ஒளி விரிந்து இருந்த நிலையை இது வரைந்து காட்டியுள்ளது.
மேன்மையான குணநலன்களுடைய மேலோர் மேவி உள்ளதே மேலான நல்ல ஊர். அவர் அங்கே இல்லையேல் அது பொல்லாத புலைக் காடே.
ஊருகின்ற தேருக்கு அணி கொடியே என்பதை நாம் காணும் கோவில் திருவிழாக்களில் ஊர்ந்து வரும் தேரைக் காணும் பொழுதும், அவைகளின் உச்சியிலுள்ள கொடிகளைக் காணும் பொழுதும் கண்டு ரசிக்கலாம்.