பழந்தமிழர்க்கு மதமில்லை

பழந்தமிழர்க்கு மதமில்லை !
தமிழர்க்கு 'மதம் ' பிடித்ததே கி.பி.200 க்குப் பின்னரே !

* கி. பி. இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட நூல்களில் மட்டுமே ' மதம் ' என்னுஞ் சொற் ,கடவுளைப் பற்றியாதல் உயிரைப் பற்றியாதல் உலகத்தைப் பற்றியாதல் ஒழுக்கத்தைப் பற்றியாதல் மக்கட் குழுவினர் கொண்ட கொள்கைக்கும் பெயராய்த் தமிழ் நூல்களில் வழங்கப்படடு வருகின்றது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டுக்கு அஃதாவது இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முற்பட்ட நூல்களில் ' மதம் ' என்னுஞ் சொற் கொள்கை யென்னும் பொருளில் வருதலைக் காண்கிலேம். புறநானூறு , பரிபாடல் , பத்துப்பாட்டு முதலான பழைய இலக்கியங்களில் ' மதம் ' என்னுஞ் சொல் வலிமை , செருக்கு,அறியாமை , அழகு முதலான பொருள்களில் வருகின்றதே யன்றிக் கொள்கை யென்னும் பொருளில் வரவில்லை. கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதான மணிமேகலையிலுங் கூடச் 'சமயம் ' என்னுஞ் சொல் வந்திருக்கின்றதேயன்றி , அதற்கு ஈடான 'மதம் ' என்னுஞ் சொல்வரவில்லை. கி பி மூன்றாம் நூற்றாண்டின் முற்பாதியிற் றோண்டிய மாணிக்க வாசகப் பெருமான் அருளிச் செய்த திருவாசக காலத்திலிருந்துதான் ' மதம் ' என்னுஞ் சொல் கொள்கை யென்னும் பொருளில் இன்றுகாறும் வழங்கிவருகின்றது. இடைப்பட்ட காலத்தெழுந்த 'நன்னூல் ' முதலான இலக்கண நூல்களும் 'மதம் ' என்னுஞ் சொல்லைக் கொள்கையென்னும் பொருளில் வழங்கி வருதல் "எழுவகை மதமேயுடம்படல் மறுத்தல் "என்னும் நன்னூற் சூத்திரத்தால் அறியப்படும்.

ஆனாற் ,பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்திலோ 'மதம்' என்னுஞ் சொல்லாதல் 'சமயம் ' என்னுஞ் சொல்லாதல் எவ்விடத்துங் காணப்படவே யில்லை. இதுகொண்டு பல்வகை மதங்களும் இத்தமிழ் நாட்டிற் றோன்றுதற்கு முன்னமே தொல்காப்பியம் இயற்றப்பட்டமை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் நன்கு விளங்காநிற்கும் ; அங்கனமே மணிமேகலை காலத்திற்கு அஃதாவது ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட எந்தத் தமிழ் இலக்கியத்திலுஞ் 'சமயம்' , ' மதம் ' என்னுஞ் சொற்கள் வழங்காமையை உற்றுநோக்குங்கால், ஆயிரத் தெண்ணூறு ஆண்டுகட்கு முன்னே இத்தென்றமிழ் நாட்டின் கண்ணே பல்வகைச் சமயப் பகுப்புகள் பல்வகை மதவேறுபாடுகள் இருந்திலாமை தெற்றென விளங்கா நிற்கும். ----------------------------------------------------------

எழுதியவர் : உமாபாரதி (24-Oct-18, 10:31 am)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
பார்வை : 129

சிறந்த கட்டுரைகள்

மேலே