செயிர்தீர்ந்தார் தம்மையோர் பண்டத்துள் வைப்பது இலர் – நாலடியார் 50

நேரிசை வெண்பா

உயிர்போயார் வெண்டலை உட்கச் சிரித்துச்
செயிர்தீர்க்குஞ் செம்மாப் பவரைச் - செயிர்தீர்ந்தார்
கண்டிற் றிதன்வண்ண மென்பதனால் தம்மையோர்
பண்டத்துள் வைப்ப திலர். 50

- தூய்தன்மை, நாலடியார்

பொருளுரை:

உயிர் போனவரது தசை நீங்கிய வெண்ணிறமான எலும்புத் தலை கண்டார் அஞ்சும்படி நகைத்து இவ்வுடம்பின் காரணமாக இன்புறுகின்றவரை அக்குற்றத்தினின்றும் விடுவிக்கக் கூடும்; இதற்குமுன் இயல்பாகவே அப்பிழை நீங்கினவர் தாமே அறிந்து இத்தகையது இவ்வுடம்பின் தன்மை என்னுங் கருத்தினால் தமதுடம்பை ஒரு பொருளில் வைத்து மதிப்பதிலர்.

கருத்து:

உடம்பின் தூயதல்லாத தன்மையை நினைத்தால், அதனை இன்புறும் பற்றுள்ளம் நீங்கும்.

விளக்கம்:

வெண்டலை - இடுகாட்டில் உருளுந் தசை நீங்கிய தலை.

செம்மாத்தல் - இன்பத்தால் இறுமாந்திருத்தல். தம்மையென்பது, இங்கே அவரதுடம்பை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Oct-18, 2:02 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 52

சிறந்த கட்டுரைகள்

மேலே