’நானும்’ இயக்கம்- மேலும் கடிதங்கள் ------------விவாதக் களம்-------------------இன்று படித்தது -------------

அன்புள்ள ஜெயமோகன்,

ஆம். நீங்கள் சொல்வது போல இன்றுள்ள சூழலில் பெண் பாலியல் ரீதியாக ‘மாட்டேன்’ என்று சொல்லும் உரிமையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல உடல்கவர்ச்சியின்றி ஆண்-பெண் உறவுகள் இருக்க முடியாது. நாம் ஐரோப்பிய வாழ்க்கைமுறையை நோக்கி நகர்ந்தாலும் ஒரு அமெரிக்கனைப் போலவோ ஐரோப்பியனைப் போலவோ டேட்டிங்கிற்கு இந்திய ஆண் அழைப்பதில்லை. மேலும் டேட்டிங் என்பது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒருவித வசீகரச் செயல்பாடு. ஆண் தனக்குப் பிடித்த பெண்ணை வசீகரித்துத் தன்னை அவளுக்குப் பிடித்தவனாக ஆக்கும் முயற்சி. அதில் வெற்றி பெற்றால் அவ்வுறவு தொடரும். அவள் பெரிதாக விருப்பம் கொள்ளவில்லையெனில் அந்தச் சந்திப்புடன் முடிந்துவிடும். அத்தகைய வழக்கம் இங்கே முற்றிலும் பிறழ்ந்து வெறும் பாலியல் உறவு சார்ந்த செயல்பாடென மாறிவிட்டது. ஆனால் இங்கே திருமணமானவளோ ஆகாதவளோ அதுபற்றிய கவலைகள் ஏதுமின்றித் தன்னை முற்போக்கானவனாகவும் சுதந்திரமானவனாகவும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவனாகவும் காட்டிக்கொண்டு பாலியல் அழைப்பு விடுக்கின்றனர். அது கண்டிப்பாக டேட்டிங்கில் வராது.

இதே கருத்தியலைப் பெண்ணியவாதிகள் வேறுவிதமாக பாலியல் சுதந்திரமென முன்வைத்தனர். ஆண்கள் வெறும் பாலியல் தேவைக்கு மட்டுமானவர்கள், இந்தக்காலத்தில் அதற்கும் கருவிகள் வந்துவிட்டன என்பது மாதிரியான பெண்ணியக் கருத்துகள் பேசப்பட்டபோது ஆண்களுக்கு இவ்வகையான கொந்தளிப்பு உருவானது. ஏனெனில் ஆணோ- பெண்ணோ வெறும் உடல் இச்சைக்காக பயன்படுவதை இருபாலருமே விரும்புவதில்லை. நான் பெண்கள் பேசும் பாலியல் சுதந்திரத்தையும் ஒரு சிறுபிள்ளைத்தனமான கூற்றெனக் கருதுகின்றேன். அதாவது வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்ணுக்குப் பாலியல் உச்சங்கள் மட்டுமே லட்சியமாக இருப்பது என்பது வேடிக்கையான ஒன்று. அவளுக்குப் பிறவேலைகளோ பணிகளோ இருக்காதா? அறிவுத்தளத்தில் அவளுக்கான இடம் என்ன? மனிதர்களைப் பொறுத்தவரை வாழ்நாளில் காதலும் காமமும் ஒரு பகுதி மட்டுமே. அதை மட்டுமே வைத்துக்கொண்டு வாழ்க்கையைச் செலுத்த இயலாது. வெறும் பாலியல் உச்சங்களுக்காக மட்டும் புரட்சி செய்வதென்பது பாலின பலவீனமென நினைக்கின்றேன்.

இன்று இந்த #metoo விமர்சனங்களுக்குள்ளாவதற்கும் பெண்கள் சொல்கிற பாலியல் அத்துமீறல் அனுபவங்களை ஆண்கள் எள்ளல் செய்வதற்கும் முக்கிய காரணம் பெண்ணியவாதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் வெறும் பாலியல் சுதந்திரம், கலவி உச்சம் போன்ற தேவையற்ற கருத்தியல்களை மட்டும் பெண்ணிய பாடத்திட்டமாக வரைந்துகொண்டு பேசியதாகும். பாலியல் சுதந்திரமும் ஐரோப்பிய மனநிலையிலிருந்து இருந்து இங்கே கடத்திவரப்பட்டதுதான். இவற்றையெல்லாம் பார்க்கும்போது நாம் மாற்றுக் கலாச்சாரப் பழக்கவழக்கங்களை தவறாகப் பயன்படுத்துகின்றோம் அல்லது நம்முடைய இந்திய மனநிலைக்கு அவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்தத் தெரியவில்லை என்று கருதுகின்றேன்.

இந்தியச் சூழலில் இருக்கின்ற பெண்ணியவாதிகள் இனிமேலாவது பாலியல் சுரண்டல்கள் குறித்து ஓர் தெளிவான வரையறை ஒன்றினை உருவாக்கி #metooவின் பக்கம் நிற்கவேண்டும். இல்லையேல் பாலியல் அத்துமீறல் செயல்பாடுகள் பாலியல் சுதந்திரம் மாதிரியான அரைகுறை கருத்தியல்களால் பூசிமெழுகப்படும். ஆண்கள் தம்மைக் காத்துக்கொள்ள “நீங்களே இதைத்தானே பேசினீர்கள், இன்றென்ன பத்தினித்தனம்” போன்ற கேள்விகளை வீசக்கூடும். இப்போதே அப்படியான விமர்சனங்கள்தான் #metoo குறித்து எழுகின்றன. எனவே இங்கே முதலில் பாலியல் விழிப்புணர்வு அத்தியாவசியமானது.

வெண்பா
-------------

இங்கே பேசப்படும் ‘முகநூல்’ பெண்ணியம் மீது எனக்கு எந்த மதிப்பும் இல்லை. அது முகநூலில் உள்ள வேறு கருத்துநிலைபாடுகளைப்போல வெறுமே ஒரு போலி அடையாளத்துக்காக உருவாக்கப்படும் கூச்சல். இந்த கூச்சல்களை ஊடகங்கள் கவனிப்பதுதான் தமிழகத்தின் மிகப்பெரிய சாபம். தமிழ்ப் பெண்ணெழுத்தாளர்கள், பெண்கவிஞர்கள் வெறுமே ‘ஆக்டிவிஸ்ட்’ என்று முகநூல் புஃபைலில் போட்டுக்கொள்பவர்கள். அது அவர்களுக்கு தமிழகத்துக்கு வெளியே ஓர் அடையாளத்தை அளிக்கிறது. அவர்களுக்கும் பெண்ணியம் என்பது பாலியல் மீறல் மட்டுமே.திராவிடப்பெண்ணியம் என்பது வெறும் பம்மாத்து.

உண்மையான பெண்ணியம் இங்குள்ள இடதுசாரிக் கட்சிகளின் பெண்களமைப்புகளால் முன்வைக்கப்படுவது மட்டுமே. இன்று தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்ட, பிரச்சினைக்குள்ளாவர்கள் சென்று நிற்க ஒரே இடம் அவர்கள்தான். தமிழகத்தில் பெண்கள் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கு முன்னின்றவர்களும் அவர்களே. அது அவர்களின் தொழிற்சங்கப்பின்னணியிலிருந்து வந்த தெளிவும் பயிற்சியும் மூலம் உருவாவது. ஊடகங்கள் அவர்களையே பெண்ணியர்களாக முன்னிறுத்தவேண்டும்

ஜெ
மின்னஞ்சல்

எழுதியவர் : (25-Oct-18, 6:29 am)
பார்வை : 47

சிறந்த கட்டுரைகள்

மேலே