பெற்றவர்களை பேணிக்காப்போம்

ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசு இருந்தால் வாங்கலாம்... அம்மாவை வாங்க முடியுமா..?' என்ற பாடலை அனைவரும் கேட்டிருப்பீர்கள். அம்மாவை மட்டுமல்ல, அனுபவங்களின் அட்சயப்பத்திரமாக விளங்கும் மூத்தோரை எதைக் கொடுத்தும் வாங்க இயலாது! அவர்களுக்கு மரியாதை செலுத்துவகையில் ஒவ்வொர் ஆண்டும் அக்டோபர் 1 -ம் தேதி உலக முதியோர் தினமாக அறிவித்தது ஐ.நா சபை.
இன்றைய காலகட்டத்தில் மூத்தோர் என்று சொன்னவுடன் அநேகருக்கு நினைவுவருவது முதியோர் இல்லங்கள்தான். பெற்றோரையே புறம்தள்ளி, கொடூரமான முறையில் நடத்தப்பட்டு, பின்னாளில் நமக்கும் வயதாகும் என்ற எண்ணமின்றி, இரக்கமற்ற இயந்திர மனிதர்களும் இந்த உலகில்தான் வாழ்கிறார்கள். கணவனால் கைவிடப்பட்டோர், பிள்ளைகளால் காக்கப்படாதோர், உறவினர்களால் ஏமாற்றப்பட்டோர் எனப் பெரும்பாலான முதியோர்கள் ரோட்டிலும், பஸ் ஸ்டாண்டிலும், ரயில்வே நிலையங்களிலும் காணப்படுகின்றனர். மூத்தோரிடம் முஷ்டியை முறுக்கியபடி மூர்கத்தனத்தைக் காட்டுவோருக்கு, பாசமோ, உணர்வின் ஈரதன்மையோ ஒரு நாளும் பிரதானமில்லை. அவர்களின் தேவை... பணம், ஆரம்பரம், வறட்டுக் கெளரவம், போலியான அந்தஸ்து இவை மட்டுமே.
முதியோர் இல்லங்கள்:
`மனிதர்களின் காட்சி சாலை
மிருகங்கள் வந்து பார்த்துவிட்டு
போகின்றன
முதியோர் இல்லம்'
பெற்றோர்கள், மிகக்கொடிய வறுமையிலும் தன் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். பிள்ளைகளோ, தனக்கென ஒரு குடும்பம் வந்த பிறகு தாய்-தந்தையை மறந்துவிடுகிறார்கள்.
`நீ ஏன் வீட்டிலேயே இருக்க... எங்கயாவது போய்த் தொலையறது!', `நீயெல்லாம் இருந்து என்ன பண்ணப்போற... செத்துத் தொலையவேண்டியதுதானே?' என்ற குரல்கள் முதியோர்கள் வாழும் வீடுகளில் அனுதினமும் ஒலித்துக்கொண்டுதானிருக்கின்றன. அதே சமயம், பெற்ற பிள்ளைகளே பார்த்துக்கொள்ளாத நிலைமையில் பாட்டி-தாத்தாக்களைப் பார்த்துக்கொள்ள சில ஈர நெஞ்சங்கள் இந்த உலகத்தில் இன்னும் இருக்கின்றன.
அன்பின் முகவரியைத் தேடி ஆளாய் பறந்து ஓரிடத்தில் அமைதியைக் கண்டடைந்து, அந்த அகத்தையே தன் முகமாக வைத்துக்கொண்டவர்கள் அநேகர். அவர்களை அனுதினமும் பராமரித்துவரும் கோவை ஆர்.எஸ் புரம் `ஈரநெஞ்சம்' ஆதரவற்றோர் இல்லத்துக்குச் சென்றேன்.
ஒரு கூட்டமாக சில மாணவர்கள் கேக் வைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்தபோது ``நாங்கள் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள். எங்கள் நண்பனின் பிறந்த நாளை இங்கு இருக்கும் பாட்டிகளோடும் பெரியவர்களோடும் செலிபிரேட் பண்ண வந்துள்ளோம். மாதம்தோறும் வருவோம் எங்களில் யாருக்கு பிறந்தநாள் என்றாலும் இங்கு வந்துதான் கொண்டாடுவோம். அவங்களுக்கு மதிய உணவு கொடுப்போம். மரக்கன்று நடுவோம். இங்கு வந்தால் எங்களுக்கு மிகுந்த திருப்தி கிடைக்கிறது'' என்கிறார்கள்.
மதுரையைச் சேர்ந்த மூதிப் என்கிற மாணவர், ``நான் கோயம்புத்தூருக்குப் புதுசு. படிகிறதுக்காக வந்தேன். எங்க சீனியர்ஸ் இதுமாதிரி செய்றதைக் கேள்விப்பட்டேன். இவங்க எங்க குடும்பத்துல ஒருத்தரா மாறிட்டாங்க. இந்தப் பாட்டி தாத்தாவெல்லாம் அவங்க வீட்ல இருந்தா ஒண்ணு, ரெண்டு பேரன் பேத்திகளோடுதான் பொழுதைக் கழிச்சிருப்பாங்க. ஆனா இங்கு, ஏகப்பட்ட பேரன் பேத்திகளோடு வாழுறாங்க. இதைப் பார்க்கும்போது மூத்தோரை மதிக்கிறோம்கிற திருப்தி ஏற்படுது'' என்றார்.
பெரும் இழப்பிலிருந்து மீளாத துயர் சுமக்கும் முகத்தைக்கொண்ட ஒரு பாட்டியிடம் பேச்சுக்கொடுத்தேன்.
``என் பேரு அம்மணியம்மாள். வயது 82. எனக்கு மூணு பையன், ஒரு பொண்ணு. நாலு பேரையும் நல்லாத்தான் வளர்த்தோம். எங்க வீட்டுக்காரருக்கு, கண்ணு தெரியாது. அவரும் கொஞ்சநாள்ல இறந்துட்டாரு. அவரு இருக்கிற வரைக்கும் நான் நல்லா இருந்தேன். முதல் பையனுக்குக் கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்காங்க. ரெண்டாவது பையனுக்கு உடம்பு சரியில்லை. மூணாவது பையனுக்குக் கல்யாணமாகி மாமியார் வீட்லேயே இருக்கான். மாவு வித்து பொழைக்கிறான்.
கணவர் இறந்த பிறகு பெரியவன் வீட்ல இருந்தேன். தினமும் டார்ச்சர் பண்ணி அங்கிருந்து என்னைப் போகச் சொல்லிட்டாங்க. `மத்த பசங்க வீட்டுக்குப் போங்க. இங்கயே இருந்து எங்களையே ஏன் பழிவாங்குறீங்க?'னு கேவலமா பேசினாங்க. எனக்கு அப்ப ரொம்ப உடம்பு முடியல. டாக்டர்கிட்ட போய் ஊசி, மருந்து வாங்கலாம்னு பூ மார்க்கெட் வந்தேன். ரோடு க்ராஸ் பண்ணப்போ கால்வலிக்குதுனு நடுரோட்டில நின்னுட்டேன். அப்ப அங்கிருந்த போலீஸ்காரம்மா, என் கையைப் பிடிச்சு க்ராஸ் பண்ணிவிட்டாங்க. `ஏன் இவ்வளவு கஷ்டத்துல இங்கு வந்தீங்க?'னு கேட்டுட்டு, அவங்களே ஊசி, மருந்தெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. `வாங்க, நான் ஒரு இடத்துல கொண்டுபோய் விடுறேன். அவங்க உங்களை நல்லா பார்த்துக்குவாங்க'னு சொல்லி இங்கு கொண்டு வந்து விட்டாங்க.
இங்கு வந்த பிறகு ஒருமுறைகூட பையன் வந்து பார்க்கல. மருமக மட்டும் இடையில வந்து பார்த்துட்டு போவா. நைட் தூங்கும்போதெல்லாம் அழுகை வரும். இப்ப தனிமரமா இருக்கேன். நான் அவங்களுக்கு எதுவுமே சேர்த்துவைக்கலையாம். அதுதான் அவங்களுக்கு வெறுப்பா இருக்காம். அதனால என்னை ஒதுக்கிவைக்கிறாங்க. இதையெல்லாம் பார்க்கும்போது, யாருக்கும் கஷ்டம் தரமா தூங்கும்போதே செத்துப்போயிடணும்னு தோணுது. இல்லைன்னா இதுக்கும் சண்டைபோட்டு அநாதையா தூக்கிப் போட்டுருவாங்க.
ஒரு சின்ன ஆசை, நான் இறக்கிறதுக்குள்ள என் குடும்பத்தோடு ஒரு நாள் வாழணும்"; என, கண்ணீரைத் துடைத்துக்கொள்கிறார் அம்மணியம்மாள்.
``பெத்தப் பிள்ளைங்களே பாரம்னு தூக்கி வீசப்பட்ட நான், இன்னிக்கு பல பிள்ளைகளோட வயித்துப்பசியை ஆத்துறேன்'' எனப் பெருமையாகச் சொல்கிறார் சகுந்தலா பாட்டி.
``எனக்கு வயது 65. ஒரே பிள்ளைனு கண்ணுக்குக் கண்ணா வளர்த்தேன். நல்லா படிக்கவெச்சேன். `எங்கேயாவது போகவேண்டியதுதானே. இங்கிருந்து ஏன் உயிரை வாங்கிற'னு எந்தக் கையைப் புடிச்சு நான் நடக்கச் சொல்லிக்குடுத்தனோ, அதே கையைப் புடிச்சு என்னை நடுரோட்டில விட்டுட்டுப் போயிட்டான். கொஞ்ச நாள் வீட்டு வேலைக்குப் போனேன். என்னால முடியல. எனக்குத் தெரிஞ்சவங்க மூலமா இங்கே வந்துட்டேன். இங்கே வந்ததுனால பக்கத்து இருக்கிற ஸ்கூல் பசங்களுக்கு எங்களால முடிஞ்ச வரைக்கும் சமைச்சுப்போடுறோம். என் பேரன் என்னை `பாட்டி'னு கூப்பிடறதுக்கு வெட்கப்பட்டான். ஆனா இங்க, எத்தனை குழந்தைகள் எங்களை வந்து பார்த்துட்டு மூச்சுக்கு முப்பது தடவை `பாட்டி... பாட்டி...'னு கூப்பிடுறாங்க. இது போதும் எங்களுக்கு'' எனக் கலங்கினார்.
அந்த முதியோர் இல்லத்தில் இப்படி ஒவ்வொருவர் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது. அதன் பின்னணியைப் படிக்கும்போது...
`மகனே!
வாரம் ஒருமுறை என் பேரப் பிள்ளைகளைக்
கூட்டி வா...
`இவர்கள் தான் தாத்தா-பாட்டி' என்று
அறிமுகம் செய்.
`தாத்தா-பாட்டி சாமிகிட்ட போயிடாங்க'
என்று கூறி எங்களை
உயிரோடு எரிக்காதே!
நீ மிகவும் நல்லவன்
என் செல்ல மகனே
அநாதையாக எங்களை விட்டுவிடாமல் முதியோர் இல்லத்தில்
சேர்த்தாயே
நன்றி மகனே!'
என்ற கவிதைதான் நினைவுக்குவருகிறது.
முதியோர் இல்லாத வீடுகள் இருண்ட பாலைவனத்துக்குச் சமம்