அவனும் நானும்-அத்தியாயம்-18
....அவனும் நானும்....
அத்தியாயம் : 18
அன்றைய அவனின் கோபமான பார்வைக்குப் பின் அவனை அவள் சந்தித்திருக்கவில்லை...அவளின் விழிகளிரண்டுமே இந்த நான்கு நாட்களாக அவனை மட்டுமாகவே தேடித் தேடிக் களைத்திருந்து...ஆனாலும் அவனின் தரிசனம்தான் அவளிற்குக் கிடைக்கவேயில்லை...யாரிடமும் விசாரிக்கவும் முடியாததால் தனக்குள்ளாகவே தன் ஏக்கத்தினையும் தவிப்பினையும் மூடி மறைத்துக் கொண்டாள்...வழமையான அவளின் செயல்களனைத்தும் அதன் போக்கில் நடந்து கொண்டிருக்க...அவளின் மனம் மட்டும் அவனைத் தேடி அலைபாய்ந்து கொண்டேயிருந்தது...
அவளின் தவிப்பினை சௌமி அறிந்து கொண்டாலும்,அதைப்பற்றி எதையும் அவளிடத்தில் அவள் கேட்டுக் கொள்ளவில்லை...ஆனாலும் அவளின் விழிகள் ஒவ்வொரு பக்கமாய் அந்த அவனைத் தேடி அலைகையில் அவளின் மனதினைக் கொள்ளை கொண்ட கள்வன் யாரென்று அறிந்து கொள்ளும் ஆவல் அவளுள்ளும் அதிகரித்துக் கொண்டே சென்றது...
இப்படியாக இரு தோழிகளும் வெவ்வேறு மனநிலையோடு அவனை எதிர்பார்த்திருக்க,கீர்த்தனாவின் தேடல் முற்றுப்பெறும் நாளும் வந்தது...ஆனால் அன்றும் அவனின் பார்வை நேசத்தில் ஆரம்பித்து கோபத்தில் முடிந்ததில் மீண்டுமாய் அவளின் உள்ளம் துயரத்தை மட்டுமாகவே அரவணைத்துக் கொண்டது...
அன்று கல்லூரி முடிந்ததுமே வழக்கம் போல் வீட்டிற்குச் செல்லாது,இடைவழியிலேயே பொது நூலகத்தில் இறங்கிக் கொண்டாள்...சௌமிக்கும் அன்று வேறு வேலை இருந்ததால் அவள் மட்டுமாகவே தனித்துச் சென்றிருந்தாள்...ஆனால் அது அவனை அவள் தனித்துச் சந்திப்பதற்கு வசதியாகவும் அமைந்தது...
நீண்ட நாட்களாகவே கல்கி அவர்களுடைய "பொன்னியின் செல்வன்" கதையினை மீண்டுமொரு தடவையாய் வாசிக்க வேண்டுமென்று நினைத்திருந்தவள்,அன்று அதன் முதலிரு பாகங்களை எடுத்துச் செல்லவே நூலகத்தினை நாடி வந்திருந்தாள்...பத்து தடவைகளிற்கு மேல் அக் கதையினை அவள் வாசித்திருப்பாள்....ஆனாலும் அவளிற்கு என்றுமே அது சலிப்பூட்டியதில்லை...
அவள் பல வருடங்களாகவே அவ் நூலகத்தோடு தொடர்பில் இருப்பதால்,அங்கே பணிபுரிபவர்கள் அனைவருமே அவளிற்குப் பழக்கமானவர்கள்தான்...கடந்த இரு மாதங்களாக அங்கே அவளின் வருகை பதிவு செய்யப்படாதிருந்ததால் அன்று அவளை ஒவ்வொருவராக நலம் விசாரித்தவாறே இருந்தனர்...அனைவருக்கும் புன்னகையோடு பதிலளித்தவள் லென்டிங் பகுதிக்குள் நுழைந்து கொண்டாள்...
"கல்கியின் கதைகள் பிரிவினுள் புத்தகத்தினை தேடிக் கொண்டிருந்தவள்,பின்னிருந்து ஓர் குரல் ஒலிக்கவும் திரும்பிப் பாராமலேயே அக் குரலிற்குச் சொந்தமானவனை இனங்கண்டு கொண்டாள்...முகத்தில் புன்முறுவல் பூக்க.."கிருஷ்"என்று அழைத்தவாறே திரும்பியவள்,அங்கே அவளை ஏமாற்றது அவனே நிற்கவும் அவளின் புன்னகை மேலும் விரிந்தது...
"பரவாயில்லையே திரும்பிப் பார்க்கமாலேயே யாருன்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க..."
"அப்புறம் மேடம் இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க...??.."
"ம்ம் பார்த்தால் எப்படித் தெரியுதாம்..??..என்று புருவத்தை உயர்த்தி லேசாய் புன்னகை புரிந்தவள்,தன் தேடலை நிறுத்தாது தொடர்ந்து கொண்டே அவனோடு உரையாடினாள்...
"ஏதோவொரு புத்தகத்தைத்தான் ரொம்பவும் அவசரமாய் தேடிட்டு இருக்கீங்கன்னு தெரியுது...ஆனால் இஞ்சினியரிங் படிக்குற பொண்ணு இங்க என்ன பண்றாங்கன்னுதான் தெரியல..."
"ஏன் இஞ்சினியரிங் படிச்சால் அதை மட்டும்தான் படிக்கனுமா என்ன...??.."
"அப்படிச் சொல்லலை...யஸ்ட் சும்மாதான் கேட்டேன்...என்ன புத்தகத்தை தேடிட்டு இருக்கீங்க...??.."
" ..பொன்னியின் செல்வன்..பாகம் 3,4 எல்லாம் இருக்கு...நான் தேடி வந்த ஒன்றையும் இரண்டையும்தான் காணோம்..."
"அப்படினால் வேற யாராச்சும் எடுத்திருப்பாங்க....நீங்க நூலகர்கிட்ட கேட்டுப் பார்த்தீங்களா...??..."
"ம்ம்...ஏற்கனவே கேட்டாச்சு...நீங்க சொன்ன மாதிரி வேற ஒருத்தங்க எடுத்திட்டாங்கதான்...ஆனால் அதில் இன்னும் இரண்டு பிரதி இருக்கின்னு சொன்னார்...காணோம்..."என்றவள்,
"கிருஷ் எனக்கொரு ஹெல்ப் பண்ண முடியுமா...??...இல்லைன்னால் நீங்க இப்போ அவசரம் கிளம்பனுமா..??.."
"என்னென்னு சொல்லுங்க...அடியேன் தங்களிற்காய் உதவி புரியக் காத்துக் கொண்டிருக்கிறேன்..."என்று அவன் இடை வரை குனிந்து கூறவும் புன்னகைத்தவள்,
"சில நேரங்களில "புராதனக் கதைகள்" பிரிவுக்குள்ளேயும் ஒரு பிரதியிருக்கும்...அங்க இருக்கான்னு பார்க்குறீங்களா..??..."
"உத்தரவு மகாராணியே..."என்றவாறே அங்கிருந்து நகர்ந்தான் அவன்...
அவன் சென்றதும் மீண்டும் அப் பிரிவிற்குள்ளாகவே தன் தேடலைத் தொடர்ந்தவள்,கண் முன்னே அவள் தேடிய இரு பாகங்களும் நீளவும் முகத்தினில் விரிந்த புன்னகையோடு திரும்பினாள்...புத்தகங்களை அவள் முன்னே நீட்டிக் கொண்டிருந்த கரத்தின் சொந்தக்காரன் கிருஷ் என்றெண்ணி அவள் திரும்ப, யாரை இத்தனை தினங்களாய் தேடிக் களைத்திருந்தாளோ அவளின் அவன் அங்கே நின்று கொண்டிருந்தான்...
"தாங்யூ கிருஷ்..."என்றவாறே திரும்பியவள்,அங்கே எதிர்பாராத வண்ணம் அவனைக் கண்ட மகிழ்ச்சியில் அப்படியே வாயடைத்துப் போய் நின்றாள்...
அதுவரை நேரமும் அவளின் முகத்தினில் தோன்றிய மாற்றங்களையே ரசித்துக் கொண்டிருந்தவனின் விழிகள்,அவளின் உதடுகள் வழியே வந்து விழுந்த பெயரினைக் கேட்டதும் கோபத்தின் முகமூடியினை மீண்டுமாய் அணிந்து கொண்டது...
அவனையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்ததில் அவனின் இந்த விநாடி மாற்றத்தினை அவள் கவனிக்கத் தவறவுமில்லை...
கீழே மண்டியிட்டு அமர்ந்திருந்தவள்,அவனைக் கண்டதுமே எழுந்திருந்தாள்....அதில் இருவருக்கிடையிலுமே சிறிய இடைவெளியே ஏற்பட்டிருந்ததில் அவளின் இருதயத்துடிப்பு வேக வேகமாய் அடித்துக் கொண்டது...
என்ன செய்வதென்று தெரியாது இமைகள் படபடக்க தன் முன்னே நின்று கொண்டிருந்தவளின் விழிகளையே சிறிது நேரத்திற்கு ஊடுருவிப் பார்த்தவன்,அவளின் கைகளில் புத்தகங்களைத் திணித்துவிட்டு திரும்பிப் பார்க்காமலேயே சென்றுவிட்டான்...அது அவளின் உள்ளத்தில் எதுவென்றே சொல்ல முடியா ஓர் வலியினை ஏற்படுத்திச் செல்ல கையிலிருந்த புத்தகங்களைப் பார்த்தவாறு அசையாது நின்றாள்...அப்போது அங்கே கிருஷ் வந்து சேர்ந்தான்...
"அங்கேயும் காணலை கீர்த்தனா..."என்றவாறே வந்தவன்,அவளது கரங்களிலிருந்த புத்தகங்களைக் கண்டதும்,
"அட நீங்க தேடினது கிடைச்சாச்சா..??..."என்று அவன் புத்தகங்களைப் பார்த்தவாறே கேட்க,அவளின் விழிகளோ அவன் சென்ற வழியினையே ஏக்கத்தோடு பார்த்த வண்ணமிருந்தன...அவன் சொன்னது போல் அவளின் தேடலிற்குப் பதிலாய் அவள் முன்னே அவன் வந்துவிட்டான்...ஆனாலும் மனம் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது...
"ஆஆ கீர்த்தனா நீங்க வேற ஏதும் புக்ஸ் எடுக்கனுமா..??...இல்லைன்னால் கிளம்பலாமா..??..."
அவனது குரலில் நடப்பிற்கு வந்தவள்,
"இல்லை கிளம்பலாம் கிருஷ்..."
புத்தகங்களைப் பெற்றுக் கொண்டு வெளியே வந்தவாறே அவனுடன் இணைந்து பேரூந்துத் தரிப்பிடத்தை நோக்கி நடக்கத் துவங்கியவள்,தீடிரென்று ஏதோ தோன்றவும் திரும்பிப் பார்த்தாள்...ஆம் அவளை அவன் ஏமாற்றாது தூரமாய் நின்று அவளைத்தான் அவன் விழிகளால் தொடர்ந்து கொண்டிருந்தான்...ஆனால் இப்போதும் அவன் பார்வையில் ஓர்வித வித்தியாசம் இருப்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது...
கிருஷ் கண்டுவிடக் கூடாதென்பதற்காக உடனேயே தன் விழிகளை அவனிலிருந்தெடுத்து முன்னே பாதையில் பதித்துக் கொண்டாள்...ஆனால் அவளின் இந்தச் செய்கை கூட அவனில் புகைந்து கொண்டிருந்த கோபத்தை இன்னும் அதிகரித்து வைத்தது...இது எதையும் அறிந்து கொள்ளாதோ அவளோ அவனின் திடீர் திடீர் மாற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தாள்...அதில் அவளிற்கு எதுவோ ஒன்று லேசாகப் புரியவும் அவளின் கால்கள் இடையிலேயே நடையினை இடைநிறுத்திக் கொண்டன...
அதுவரையிலும் தொலைபேசியில் யாருடனோ உரையாடிக் கொண்டே அருகில் வந்தவன்,அவள் இடையில் நிற்கவும்,
"என்னாச்சு கீர்த்தனா...??...ஏன் நின்னுட்டீங்க..?.."
அவன் கேட்டதும் அவனையே சிறிது நேரத்திற்குப் பார்த்தவள்,ஒன்றுமில்லையென்பது போல் தலையை இடம் வலமாய் அசைத்துக் கொண்டாள்...மீண்டும் அவனுடன் இணைந்து நடந்தவள்,மனதில் அவனின் விழிகள் வேற்றுமையைக் காட்டிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களையும் நினைவுகூர்ந்து கொண்டே வந்தாள்...
இறுதியில் அனைத்தையும் அலசி ஆராய்ததில் அவளின் ஊகமே உண்மையாகிப் போக,அவன் எவ்வாறு அவளை சந்தேகிக்கலாம் என்பதில் அவளுள் கோபமும் வருத்தமும் ஒரு சேர எழுந்தது....அதே நேரத்தில் அவளுள் இன்னொன்றும் தோன்றியது...அன்று சௌமி இடையில் வந்ததிற்கே சினப்பட்டவன்,கிருஷ்ஷை அவளுடன் இணைத்துப் பார்த்ததில் கோபப்படாவிட்டால்தான் ஆச்சரியமென்றும் நினைத்துக் கொண்டாள்...
என்னதான் சமாதானங்களை அவள் தனக்குத்தானே கூறிக் கொண்டாலும்,அவளின் மனம் என்னவோ அவனின் கோபத்தினை எண்ணிச் சிணுங்கத்தான் செய்தது...பேரூந்து தரிப்பிடம் வந்ததுமே கிருஷ் விடைபெற்றுக் கொள்ள,அவள் அவளுக்கான லைன் பஸ்ஸில் ஏறி அமர்ந்தாள்...வீட்டை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தவளின் உடல் மட்டும் அப் பேரூந்தில் அமர்ந்திருக்க,உள்ளம் மட்டும் அவனைத் தேடி அவள் வந்த வழியே மீண்டும் சென்றது...ஆனால் அவளின் தேடலிற்குப் பதிலளிக்க அவன்தான் அங்கே காத்து நிற்கவில்லை...
"...என் தொலைந்து போன
விழிகளை நான்
உன்னிடத்தில் தேட,
நீயோ என்னிலிருந்தே
தூரமாய் தொலைவாகிப்
போவதுதான் ஏனோ...??..."
தொடரும்...