உறுபசியின் துற்றுக்கு அணியூட்டி உண்ணுதல் – அணியறுபது 42

நேரிசை வெண்பா

ஒற்றுக்(கு) அணிஓர்ந் துரைத்தல்; உறுபசியின்
துற்றுக்(கு) அணியூட்டி உண்ணுதல்; - பற்றுக்கு
நித்தனடிச் சார்பே நிலைத்தவணி; நீளொளியே
முத்துக்(கு) அணியாகும் முன். 42

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை: மருமங்களை நன்கு ஓர்ந்து உரைத்தல் ஒற்றர்க்கு அழகு: பிறர்க்கு ஊட்டி உண்ணுதல் உணவுக்கு அழகு, ஈசன் திருவடியே உரிமையாய்ப் பற்றுதற்கு அழகு; நல்ல ஒளியே முத்துக்கு அழகு.

ஒற்றர் என்பவர் அரசுக்கு உரிய கருமத் துணைவர். நாட்டில் அங்கங்கே நிகழுகின்ற நிகழ்ச்சிகளை ஒற்றி அறிந்து உரிமையுடன் உறுதியாய் உரைப்பவர்; ஆதலால் இவரைக் கண்போல் கருதி அரசர் எவ்வழியும் செவ்வையாப் போற்றி வருவர்.

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். 581 ஒற்றாடல்

மன்னவனுக்குக் கண்போல் உள்ள ஒற்றர் எதையும் கூர்ந்து நோக்கி ஓர்ந்து வந்து தேர்ந்து தெளிவாய் உரைக்கும் அளவு உயர்ச்சியுறுகின்றார்.

துற்று - துய்க்கும் உணவு. விருந்தினர்களுக்கு முதலில் உணவளித்து அதன் பின்பு உண்ணுபவன் மதிநலம் வாய்ந்த புண்ணியவான் ஆகின்றான்.

நேரிசை வெண்பா
முற்றுற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பிற்றுற்றுத் துற்றுவர் சான்றவர்; - அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும். 190 பெருமை, நாலடியார்

விருந்து அருந்த உதவுபவர் பெருந்தகையாளராய் உயர்ந்து சிறந்த பதவிகளை அடைவர் என இது குறித்துளது. .

என்றும் நித்தியமாய் நிலைத்துள்ள இறைவனை அன்புடன் பற்றினால் துன்பப் பற்றுகள் நீங்கிப் போம்; இன்ப நிலைகள் எங்கும் ஓங்கி வரும். பற்றுக பற்றற்றான் பற்றினை என்றார் வள்ளுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Nov-18, 8:41 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே