அவனும் நானும்-அத்தியாயம்-19

.....அவனும் நானும்.....

அத்தியாயம் : 19

"...தொலைந்துவிட்டேன்
என அறிந்தும்
மீண்டும் மீண்டுமாய்
தேடிக்கொண்டே இருக்கிறேன்
என்னையல்ல,
எனக்குள் தொலைந்துவிட்ட
உன்னை..."...

என்று அவனது விழிகளுக்குள் அவள் வீழ்ந்தாளோ அன்றிலிருந்தே அவள் கொஞ்சம் கொஞ்சமாய் அவன் பால் ஈர்க்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறாள் என்பதை அவள் நன்கே அறிந்துதான் இருந்தாள்...ஆனாலும் இதுதான் காதலா என்பதில்தான் கொஞ்சம் தெளிவற்றிருந்தாள்...ஆனால் இன்று கடற்கரையினில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின்னர் அவளின் அந்தக் குழப்பமும் தீர்ந்திருந்தது...

அன்றைய தினம் நூலகத்தில் நிகழ்ந்த அவனுடனான சந்திப்பின் பின் அவள் அவன் மேல் கொஞ்சம் கோபமாக இருந்தாளென்றுதான் சொல்ல வேண்டும்...அதில் அவள் மனம் மிகுந்த வேதனைக்கும் உள்ளாகியிருந்தது...அடுத்து வந்த இரு தினங்களும் அவளின் பாட்டியின் பிறந்தநாளிற்காய் ஊருக்குச் சென்று வந்த பின்னர்தான் அவளின் உள்ளம் கொஞ்சமேனும் அமைதியடைந்திருந்தது...

இதற்காக அவள் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு லீவு போட்டிருந்தாள்...ஆனால் அந்த இரு நாட்களும் அவன் அவளைத் தேடுவானென்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை...அதிலும் இப்போதெல்லாம் அவன் அவளை முறைத்துக் கொண்டே திரிவதால் நிச்சயம் அவளின் விடுப்பு அவனைப் பாதித்திருக்காதென்றுதான் எண்ணியிருந்தாள்...ஆனால் இன்று கடற்கரையில் வைத்து அவன் சகஜமாகவே அவளின் விடுப்பு பற்றிக் கேட்கவும் அவள் கொஞ்ச நேரத்திற்கு இந்த உலகத்தையே மறந்துவிட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்...

ஆரம்பத்தில் அவனைக் கண்டதும் பார்வையில் அவனை அவள் அந்நியமாகக் காட்டிக் கொண்டதே அவன் மேல் அவளுக்கிருந்த கோபத்தினால்தான்...ஆனால் அவன் அவளருகே வந்து பல நாட்கள் பேசிப் பழகியவன் போல் உரையாட ஆரம்பிக்கவும்,அவளுள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வட்டமடிக்க ஆரம்பித்துவிட்டன...எங்கே இன்னும் கொஞ்ச நேரம் அவனருகே இருந்தால் மொத்தமாய் அவன் பக்கமே சாய்ந்துவிடுவோமோ என்ற பயத்தினில்தான் அவள் அங்கிருந்து விரைவிலேயே கிளம்ப எத்தனித்தாள்..

ஆனால் அதற்கு அவன் காட்டிய கோபம் அவளைப் படபடக்க வைத்திருந்தாலும்,அவன் உரிமையுள்ளவனாக "பிடிக்கலையா..??.."என்று கேட்டது அவளிற்கு மிகவும் பிடித்திருந்தது...அதுவும் இறுதியில் அவன் சுவாசம் அவளின் விழிகளுக்குள் ஊடுருவிய அந்தவொரு விநாடியில் அவளைக் கேட்காமலேயே அவளின் இருதயம் அவனிடத்தில் மொத்தமாகவே சரணடைந்திருந்தது...முதற்தடவையாக அவளின் இருதயத்துடிப்பின் சத்தத்தை அவனுக்கருகாக நின்றவாறே அவன் வழியாக உணர்ந்து கொண்டாள் அவள்...

அவனின் கடுவன் பூனை முகத்திற்குப் பின்னால் இப்படியோர் அழகான புன்னகை மறைந்திருப்பதையே அன்றுதான் கண்டு கொண்டாள்...அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவனின் ஓர் கரம் அடிக்கடி தலை கோதியதை மனதிற்குள்ளாகவே ரசித்துக் கொண்டவளின் விரல்கள் அவனின் தலை கோதுவதற்காய் அப்போதே துடிதுடிக்கவும் ஆரம்பித்திருந்தன...இப்போதும் அதற்காய் ஏங்கிக் கொண்டிருந்த விரல்களை மென்மையாகத் தடவிக் கொடுத்துக் கொண்டாள்...

இன்று சௌமி மட்டும் வந்திருந்தால் அன்றைய அழகான தருணம் அவளிற்கு அமைந்திருக்காதென்று நினைத்துக் கொண்டவள்,சௌமிக்கு மனதிற்குள்ளாகவே ஆயிரமாயிரம் நன்றிகளையும் அர்ப்பணித்துக் கொண்டாள்...அதேசமயம் நல்லவேளையாக அவனும் தனித்தே வந்திருந்தானென்று எண்ணிக் கொண்டவளிற்கு,இன்று அவன் அவளின் வருகையை அறிந்தேதான் கடற்கரைக்கு வந்திருந்தானென்பது மட்டும் அப்போது அவளிற்குத் தெரிந்திருந்தால் இன்னும் சந்தோசத்தில் துள்ளிக் குதித்திருப்பாள்...

தன் மனதிற்குள் அவன் புகுந்துவிட்ட இரகசியத்தை சௌமியிடத்தில் சொல்லிவிடலாமென்று எண்ணியவாறே போனைக் கையிலெடுத்தவள்,பின்னர் நேரடியாகவே அவளிடம் சொல்லிக் கொள்ளலாமென்று அவ் எண்ணத்தைக் கைவிட்டுக் கொண்டாள்...பரீட்சைகள் நடைபெறுவதால்,அவை முடிந்த பின்னர் தானே அழைப்பதாக ஏற்கனவே ஆனந் கூறியிருந்ததால் தினக்குறிப்பின் பக்கங்களின் காதோரமாய் மட்டுமாகவே அப்போதைக்கு தன் இரகசியக் கதைகளைக் கூறிக் கொண்டாள் அவள்...

பல கவிதைகளைக் கண்டிருந்த அவளின் தினக்குறிப்புப் பக்கங்கள் முதன்முறையாக அவனின் வாசத்தையும் அவளின் எழுதுகோல் வழியே சுவாசிக்க ஆரம்பித்தது...

..."...இமை இடுக்கின் ஓரம்
இருதயத்தின் கோலம்
என்னை என்ன செய்தாய் நீயே....
காதல் மொழிகளைத் தந்தாய்
விழிகளில் சொன்னாய்
கவிதைகள் தந்தென்னை களவாடினாய்...

விழுந்து விட்டேன் நானும்
எழும்பவில்லை இன்னும்

இதுதான் காதலா...??..நீயும் சொல்லடா என் காதலா..??.."....

..."....கண்கள் பேசும் நேரம்
உள்ளம் அங்கே மோதும்
என்னென்னமோ செய்வாய் நீயே...
என் கனவுகள் வெல்லும்
உன் நினைவுகள் கொல்லும்
இருமனம் அங்கே ஒருமனமாகும்...

தந்துவிட்டேன் என்னை
தாங்கிக் கொண்டேன் உன்னை

இதுதான் காதலே...இனி நீயும் நானுமே..."...

கேள்வி பதில்களாய் தன் மனதின் இரு பக்கங்களையும் வரிகளாய் வடிவமைத்தவள்,அதை அப்படியே தன் மனதிற்குள் பூட்டி வைத்தவாறே புன்னகையோடு கனவிற்குள் தன்னை மூழ்கடித்துக் கொண்டாள்...

அஸ்வின்னும் ஸ்ருதியும் அவர்கள் வழமையாகச் சந்தித்துக் கொள்ளும் கஃபேயில் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்...நீண்ட நாட்களின் பின்னர் தனியாக வெளியே சந்தித்துக் கொள்வதால் அவள் அவனுடனான தனிமையை இரசித்துக் கொண்டிருக்க,அவனோ அவளை இரசித்துக் கொண்டிருந்தான்...

"என்ன சேர் பார்வையெல்லாம் பலமாயிருக்கு..ம்ம்..??.."

"ஏன் பார்க்கக்கூடாதா..??..என்னோட ஆளை நான் பார்க்கிறேன்...உனக்கென்னடி...??.."

"இந்தப் பார்வையெல்லாம் இப்படித் தனியா மீட் பண்ணும் போது மட்டும்தானே...மற்ற நேரங்களில் எல்லாம் நாங்கதான் உங்க கண்ணுக்குத் தெரியவே மாட்டோங்கிறமே...."என்றவளின் குரல் ஓர்வித ஏக்கத்தோடு ஒலித்தது...

அவளின் அந்த ஏக்கத்திற்கு காரணமும் இருந்தது...தனியாகச் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில் எல்லாம் காதலைப் பொழிபவன்,காலேஜ்ஜில் மறந்தும் கூட அவளைக் காதலாய் ஓர் பார்வை கூடப் பார்த்துவிட மாட்டான்...அதற்கான காரணமும் அவள்தான் என்பதை அவள் மனம் அறிந்திருந்தாலுமே அவன் மற்றைய நேரங்களில் அவளை யாரோவாகத் தள்ளி வைப்பதில் அவளுக்கு உள்ளூர ஓர்விதத் துயரம் ஒளிந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை...

இதில் அவனை மட்டுமே குறை சொல்வதற்குமில்லை...அவள்தான் கல்லூரிப் படிப்பு முடிந்து நல்ல வேலையென்று இருவரும் செட்டிலாகும் வரை நமக்குள் இருக்கும் காதலை யாருக்குமே காட்டிக் கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தாள்...காரணம் அவளின் பெற்றோர்களுக்கு ஒருவேளை தெரிந்து அவளின் கல்லூரிப் படிப்பினை நிறுத்திவிட்டாலுமென்ற பயம் அவளுள் இருந்தது...என்னதான் அவள் ஆசைப்படும் அனைத்தையும் நிறைவேற்றிடும் பெற்றோர்களாய் அவர்கள் இருந்தாலும் காதலென்ற பேச்சு எழும் போதில் மட்டும் அவர்களும் சமூகத்தின் பேச்சுக்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பணியினைத்தான் முதலில் செய்கிறார்கள் என்பதை அவள் ஏற்கனவேயோர் அனுபவத்தின் மூலம் பெற்றதாலோ என்னவோ அவள் தன் படிப்பு முடியும் வரையிலும் அமைதி காப்பதே மேலென்று முடிவு செய்து கொண்டாள்...

ஏற்கனவே ஓர் முறை அவள் பின்னால் ஒருவன் சுற்றித் திரிகிறான் என்ற செய்தி அவளின் பெற்றோரின் காதினை எட்டிய போதே அவளின் திருமணம் தொடர்பில்
ஆலோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்...இதில் அவளின் காதல் வேறு தெரிந்து அதுவே அவளின் கல்விக்கு இடையூறாக வந்துவிடக் கூடாது என்பதால்தான் இந்த நான்கு வருடங்களாய் அவர்களின் காதலை அவர்கள் எங்கேயுமே காட்டிக் கொண்டதில்லை...

அவர்களின் நெருங்கிய நண்பர்களுக்குக் கூட அவர்களின் காதலை அவர்கள் தெரியப்படுத்தவில்லை... இப்படித் தனியாக சந்தித்துக் கொள்வதுமே என்றாவதொரு நாளில்தான்....இந்த நான்கு வருடங்களாகவுமே தொலைபேசியின் வழியாக மட்டுமாகவேதான் அவர்களின் காதல் வளர்ந்து கொண்டிருக்கின்றது...இருந்தாலும் இப்படித் தனிமையில் சந்தித்துக் கொள்ளும் வேளைகளில் மட்டும் ஏனோ அவளால் அவளின் ஏக்கத்தினை கட்டுப்படுத்திக் கொள்ள முடிவதில்லை...

அப்படியான சந்தர்ப்பங்களில் அவன் அவளைக் காதலாலேயே மொத்தமாய் கலங்கடிக்கச் செய்வதும்,அவள் அவனில் மீண்டும் மீண்டுமாய் காதலில் வீழ்ந்து கொள்வதும் அவர்களுக்குள் வழமைதான் என்பதால்,அன்றும் அது போல் அவளைக் காதலில் மூழ்கடிக்கச் செய்யும் வேலையில் அவன் இறங்க,அவளும் அவனின் நேசக் கடலிற்குள் விருப்பத்துடனேயே சங்கமித்துக் கொண்டாள்...

மறுநாள் வழமையைக் காட்டிலும் கொஞ்சம் முன்னதாகவே கல்லூரிக்கு வந்து சேர்ந்திருந்தாள் கீர்த்தனா...காரணம் எப்போதும் போல் அல்லாமல் அன்று அவனைக் காண வேண்டுமென்ற ஆவல் அவளுள் அதிகமாகவே எழுந்திருந்தது...அன்று அவளின் விழிகளோடு இணைந்து அவளின் இருதயமும் அவனுக்காய் தவித்துக் கொண்டிருக்க அவனோ மதியநேர இடைவேளையைக் கடந்துமே அவள் முன்னே வராது அவளைத் தவிக்கவிட்டே தூரமாய் நின்று வேடிக்கை பார்த்தவன்,அவர்கள் மூவரும் ப்ரீ டைமில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது அவளுக்கு அவனின் தரிசனத்தைக் கொடுத்துக் கொண்டான்...ஆனால் என்ன அவன் அவளைப் பார்ப்பதற்கென வராது ப்ரீத்தியைக் காண்பதற்கென வந்து நின்றான்...

"ஹாய் ப்ரீத்தி...என்ன இங்க உட்கார்ந்திருந்து அரட்டை அடிச்சிட்டிருக்க...லெக்ஸ்சேர்ஸ் இல்லையா..??.."

"ஹேய் ஹாய்டா...ஒருவழியா சேருக்கு நான் இந்தக் காலேஜ்லதான் படிக்கிறேன் என்கிறது ஞாபகத்துக்கு வந்திருச்சு போல..."என்று அவனைக் கேலி செய்தவள்,அவனின் கேள்விக்கும் பதிலளித்துக் கொண்டாள்...

"இப்போ ப்ரீ டைம்தான்டா...ஆமா என்ன இந்தப் பக்கம் அத்தான்...??..."

அவன் அவளினை நோக்கி வந்த போதே நேற்றைய தினம் கடற்கரையில் அவளுடன் வந்து கதைத்தது போல இன்றும் ஏதும் அடாவடித்தனம் பண்ணிவிடுவானோ என்றெண்ணி உள்ளூரப் பயந்தபடியாகவே அவன் வருவதைப் பார்த்துக் கொண்டிருந்தவள்,அவன் அருகில் வந்து அவளை ஓர் பார்வை கூடப் பார்க்காது ப்ரீத்தியை அழைக்கவும் முதலில் அவளிற்கு ஒன்றுமே புரியவில்லை.. அதன் பின் ப்ரீத்தியும் உரிமையோடு அவனை டாவென விளித்து அத்தான் எனவும் அவளின் உள்ளம் மொத்தமாகவே குழப்பத்திற்குள் ஆழ்ந்துவிட்டது...அதுவரை நேரமும் அவனைக் காணாது தவித்த மனது இப்போது எதற்காக இவன் இப்போது இங்கே வந்து தொலைத்தானென்று தவிக்க ஆரம்பித்துவிட்டது...

ஆனால் அவனோ அவளின் அந்தத் தவிப்பினை உள்ளூர மிகவும் ரசித்தவனாய் அவளை ஓரக் கண்ணால் பார்த்தவாறே ப்ரீத்தியுடன் கதை பேசிக் கொண்டிருந்தான்...

"ம்ம்...சும்மாதான்டி இந்தப் பக்கம் வரும் போது உன்னைப் பார்த்தேன்...அதான் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்..."என்றவாறே மீண்டுமாய் அருகில் நின்றவளை ஓர் பார்வை பார்க்க அவளோ அவனைப் பார்க்காது மனதில் அவனிற்கு நன்றாக அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்...

"அவள்தான் இவனை டா போடுறாள்னா...இவன் எதுக்கு இப்போ டி போடுறானாம்...இவனை நாம கடுவன் பூனைன்னு நினைச்சிட்டிருந்தால்.. இவன் சரியான கள்ளப் பூனையா இருப்பான் போலயே..."என்று அவள் மனதிற்குள்ளாகவே முணுமுணுத்துக் கொண்டிருக்க,அந்தக் கள்வனோ அவளின் அந்தப் பொறாமை கலந்த கோபத்தினை ஓரப் பார்வையால் ரசித்த வண்ணமாகவே இருந்தான்...ஆனாலும் அவளின் நினைப்பிற்குச் சரியாக அந்தக் கள்வனும் அவளை நோக்கியதான அவனின் பார்வையையும் குறும்பான புன்னகையையும் சௌமியும்,ப்ரீத்தியும் அறியாதவாறே பார்த்துக் கொண்டான்...

"அது சரி இன்னும் ஒரு வாரத்தில மிட் வக்கேசனே வரப்போகுது...இவரு இப்போதான் என்னைப் பார்த்து பேசிட்டுப் போகலாம்னு வந்தாராம்..இதை என்னை நம்பச் சொல்றியாக்கும்.."

"சரி விடுடி...உன்னைத்தானே நான் பிறந்ததில இருந்தே பார்த்திட்டிருக்கேன்...ஆமா இவங்க யாரு உன் ப்ரண்ட்ஸா...??.."

"ஏன் இவங்களைப் பார்த்தால் உனக்கு வேற எப்படித்தான் தெரியுதாம்..."??..என்று அவனை மேலும் கீழுமாய் ஓர் பார்வை பார்த்தவள், அவர்களை அவனிற்கும் அவனை அவர்களுக்குமாய் அறிமுகப்படுத்தி வைத்தாள்...அவனும் மகாநடிகனாய் அவளை இன்றுதான் முதன் முறையாகப் பார்ப்பது போல் ஓர் பார்வை பார்த்துக் கொண்டான்...அதில் ஏற்கனவே அவளுள் எரிந்து கொண்டிருந்த தீ இன்னுமாய் அதிகரித்தது...

ப்ரீத்தி இருவரையும் அறிமுகம் செய்ததும் இருவருக்கும் பொதுவாகவே ஹாய் சொன்னவன்,அவளிடத்தில் மட்டும் வம்பு வளர்க்க ஆரம்பித்தான்...

"ஆமா இவங்க பேரு என்னென்னு சொன்ன ப்ரீத்...கீர்த்திகாவா...சரியாவே கேட்கலையே..."

அதுவரை நேரமும் குனிந்தபடியே அவனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தவள் இப்போது நேரடியாகவே அவனை முறைத்தாள்...

"நேற்றுத்தான் என் ஜாதகத்தையே மொத்தமாய் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டுப் போனான்...இதில இப்போதான் என் பெயரையே கேட்குற மாதிரி என்னமாய் நடிக்குறான்..."என்று அவள் பொருமிக் கொள்ள,ப்ரீத்தி அவனை ஓர் மார்க்கமாய் பார்த்தவாறே,

"எது சரியாக் கேட்கலையா..??..ஏன் உன் காதில ஏதாச்சும் கோளாறா...??...அவளோட பெயர் கீர்த்தனா...நல்லா காது இரண்டையும் திறந்து வைச்சுக் கேட்டுக்கோ..."

"ம்ம் கேட்டாச்சு...கேட்டாச்சு..."என்று அவன் காதிரண்டையும் பிடித்து இடம் வலமாய் ஆட்டவும்,அதுவரை நேரமும் அவன் சீனியர் என்பதால் அடக்கமாய் நின்று கொண்டிருந்த சௌமி...அவனின் அந்தச் செய்கையில் பெரிதாகவே சிரித்துவிட்டாள்...அவளின் அந்தப் புன்னகை மற்றைய இருவரிடத்திலும் எதிரொலிக்க கீர்த்தனா மட்டுமாய் தனக்கென்ன வந்தது என்ற பாவனையில் நின்று கொண்டிருந்தாள்...ஆனாலும் அவனின் அந்த மாயப் புன்னகை அவளை அவன் பக்கமாய் இழுக்கவே செய்தது...

"ஏன் ப்ரீத்தி...உன்னோட மத்த ப்ரண்டு சிரிக்க மாட்டாங்களா...??.."என்று அவளின் வம்பிற்கு மீண்டுமாய் வந்தவன்,அவள் நிமிரவும் புருவத்தினை உயர்த்தி அவளிற்கு மட்டும் தெரியும் படியாக கண்ணடித்துக் கொண்டான்...

இதுவே மற்றைய நேரமாய் இருந்திருந்தால் அவனின் இந்தக் கேலிகளெல்லாம் அவளை வெட்கத்தில் மூழ்கடித்திருக்கும்...ஆனால் அப்போது அவளிருந்த மனநிலையில் அவளிற்கு எதையுமே ரசிக்கத் தோன்றவில்லை...ஆனாலும் அவனின் அந்தச் செய்கையில் ஒரு கணம் லேசாய் தடுமாறியவள்,பின் தன்னைச் சமாளித்துக் கொண்டவளாய்,

"எனக்குத் தலைவலிக்குது...நான் க்ளாசுக்கு போறேன்...நீங்க இருந்து பேசிட்டு வாங்க.."என்று அவள் விறுவிறுவென்று முன்னே நோக்கி நடந்திட ஆரம்பித்தாள்...

"ஹேய் இருடி நாங்களும் வாறோம்..."என்று அவளைத் தடுத்தவள்..

"சரி ஓகே அத்தான்...நாம அப்புறமாய் மீட் பண்ணி ஆறுதலாய் பேசிக்கலாம்..பாய்.."என்றவாறே அவனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சௌமியோடும் கீர்த்தனாவோடும் இணைந்து கொண்டாள்...

அவள் கோபமாய் செல்வதையே பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தவனிற்கோ விழிகளிலும் இதழ்களிலும் அவளுக்கு மட்டுமே சொந்தமான அவனின் புன்சிரிப்பு வந்து ஒட்டிக் கொண்டது...ஆனால் அங்கே அவளின் இதழ்களோ அவனை வார்த்தைகளாலேயே வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது...தன் அன்னைக்குப் பின் அவனிடத்தில் அவள் மௌனமாகவே வெளிப்படுத்திய அவளின் அந்த உரிமை கலந்த கோபத்தில் தன்னை மூழுமையாகவே மூழ்கடித்துக் கொண்டான் அவன்...

.."..உந்தன் கோபங்கள் கூட
அழகுதானடி பெண்ணே..
என்னை அவை உன்
இதழ்களிற்குள் அடிக்கடி
சிறை வைத்துக் கொள்வதால்..."...

தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (17-Nov-18, 8:39 am)
சேர்த்தது : உதயசகி
பார்வை : 722

மேலே