பெண்மை நின்னினும் மேன்மை
தொல்காப்பியனை அழைத்தேன் முந்நீர் வழக்கம் மகடூஉ- வோடு இல்லை
என்ற காலத்தைச் சேர்ந்தவன் நான்
என்று ஓடிவிட்டான்....
வள்ளுவனை அழைத்தேன் அவனோ
தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய் என்று கூறி விட்டு குறள்(ரல்) (கொடுக்கச்) படைக்கச் சென்று விட்டான்....
நாணும் அச்சமும் நாய்கட்குத்தான் வேண்டும்
என்று பறை சாற்றினாயே நீயாவது வா பாரதி என்றேன்...
அவன் பகிரங்கமாய் மறுத்து விட்டான்....
வேடிக்கையற்றுக் கிடக்குதண்ணே வேரிற் பழுத்த பலா என்றான்
பாரதிக்கு தாசன்
மறுப்புக் கூறமாட்டான் என்ற நம்பிக்கையில்
அணுகினேன் அவனை....
பளார் என்று அறைவது போல் பளிச்சென்று விடுப்பு எடுத்துக் கொண்டான்....
காரைக்குடி பக்கம் போகலாம் என்று எண்ணினேன் கண்களைக் கூடத் திறக்காமல் கர்வமாய் மறுத்து விட்டான் கண்ணதாசன்.....
சரி
இனி இருப்பது
இவன் மட்டும்தான்
என்று வேகமாய் ஓடினேன்
வெடுக்கென்று
வாய்தாவுக்கு கிளம்புகிறான்
வைரமுத்து....
இனியேனும் பொறுத்தது போதும்...
பொங்கியெழுவது நாமாக இருப்போம்....
பெண்ணியம் பேசுவோம்....
பெண்மைக்காய் பேசுவோம்....
பெண்பால் பேச
ஆண்பால் ஒலிவாங்கி எதற்கு????
உரக்கச் சொல்வோம்
உறங்கி விடாமல் சொல்வோம்
பெண்மை நின்னினும் மென்மை அல்ல...
மேன்மை என்று.....