தீராத கவலைகள்
கவலைகள் இல்லாமல் சிந்தனை ஓட்டத்தில் ஓடிக் கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன்.
அப்படியே சிந்தனை செய்து கொண்டிருக்கையில்
வயிறு பசிக்கிறது.
சிந்தனையால் பசி நோயை விரட்ட முடியுமா?
உணவு வேண்டும்.
உண்டால் தான் பசியடங்கும்.
உணவு வேண்டுமெனில் பணம் வேண்டும்.
பணம் வேண்டி உழைத்து பசி நீங்க உணவிற்காக செலவிட தேவை குறைவுதான்.
பசி நீங்க சிந்தனை தொடரலாமா?
உடலை மறைக்கக் கிழியாத ஆடை வேண்டும்.
தாகம் தீர்க்க தண்ணீர் வேண்டும்.
குடியிருக்க மழைக்கு ஒழுகாத இடம் வேண்டும்.
இவையெல்லாம் கிடைக்க உழைக்க வேண்டும்.
உழைத்து எல்லா அத்தியாவசியத் தேவைகளும் பெற்றுவிட ஓய்ந்ததா கவலை?
அண்டைவீட்டுக்காரர் மகிழ்வூந்தில் செல்கிறார்.
மூன்றாம் வீட்டுக்காரர் கழுத்து நிறைய நகை அணிந்துள்ளார்.
நாம் அணிய வேண்டாமோ?
மகிழ்வூந்தில் செல்ல வேண்டாமோ?
பெரும் கவலைகள் தொற்றிக் கொள்கின்றன.
அவற்றிற்காக உழைக்க வேண்டும்.
ஓய்வேது?
நற்சிந்தனையில் மனந்தெளிய நேரமேது?
கல்யாணம், மனைவி,
குழந்தைகள் என்றே விரிவாக கவலைகள் தீர்ந்ததென்று கொஞ்சம் நிம்மதி அடையும் நேரம் வயோதிகம் அடைந்திருக்க,
உடல் நோயில் படுத்திருக்க
சேர்த்து வைத்தெல்லாம் நோய்க்கே செலவாகுதே என்ற பெரும்கவலை மரணத்தில் தீரும்.