அவளும் தமிழும்

நெடுந்தூரம் விரல்கோர்த்து நடைபோட - எனை
நெருங்காமல் விழியாலே சிறைபோட
கடந்தோடும் நொடியாவும் சுகமாக - அவள்
கலந்தாலே நெஞ்சோடு இதமாக

இதழ்தந்த மொழியாவும் கவியாக - இன்பத்
தமிழ்தந்த சுவையாவும் அவளாக
எனைதந்து மனம்வென்று பதியாக - சங்கத்
தமிழ்கொண்டு இவையாவும் வரியாக

இமைக்காது அவள்தூக்கம் காண்பேனே - மண்ணில்
இவள்போல அழகேது என்பேனே
தமிழ்கூட அவளென்றே சொல்வேனே - கண்ணில்
இருகாட்சி தமிழொன்று அவளிரண்டு என்பேனே

இரவோடு எழில்கொண்ட நிலவோடு - கார்
முகிலோடு மணம்கொண்ட மழையோடு
இணைகூற எதுவுண்டு என்றாலோ - கன்னித்
தமிழுண்டு அத்தமிழோடு அவளுண்டு

அழகென்று தமிழ்சொன்ன அத்தனையும் - இங்கே
அவளென்று மனம்சொன்ன கற்பனையும்
பிழையென்று நினைத்தாலோ பொறுப்பீரே - இதை
மழலையின் கவிஎன்றே நினைப்பீரே

எழுதியவர் : வேத்தகன் (20-Nov-18, 2:55 pm)
பார்வை : 332

மேலே