தமிழ் சினிமா
தமிழ் சினிமா
************************************
கதை
************************
அநேகமாக சுட்டது
திரைக்கதை
********************************
அத்தைமகள் ரத்தினமாம் முறைமாமன் முத்தரசாம்
சொத்தனைத்தும் அவள்பெயரில் எழுதியிட்ட பட்டயமாம்
மொத்தமாய் சொத்திற்கும் வாரிசு இவளென்க
முத்தரசன் பார்வையிலே நேசமற்ற பாசமழை
நகர்விட்டு கிராமத்துள் ஆசிரியப்பணி அமைய
நகரியப் பேருந்தில் வந்திறங்கும் நாயகனாம்
நாகரீக உடையழகு நா மொழியும் ஆங்கிலம்
மகராசன் இவனோடு ரத்தினம் காதல்கொள்ள
அறைதன்னில் பூட்டிவைத்த இரண்டுகால் பசுஇனமாய்
முறைமாமன் கவனத்தில் நாயகியவள் படும்பாட்டில்
இறையென நாயகனும் நாயகியை மீட்டெடுக்க
குறையின்றித் திரைக்கதை இயல்பாக முடிவுறுமே !
வசனம் -- உரையாடல்
******************************************
முன்னணி மாவட்டப் பேச்சுமுறை அதனூடே
கன்னித் தமிழதனை பலவிதமாய் கொலைசெய்து
முன்னணியில் வாயசைத்து பின்னணியில் பேச்சிட்டு
மனமொன்றாப் பாதையிலே கனமிலா உரைநடைகள்
ஒளிப்பதிவு
***********************
கருப்புநிறக் கூவத்தை சீவனுள்ள நதியாக்கி
இருக்கும் ஒளிதன்னை இல்லாதது போலாக்கி
இருட்டுப் பின்னணியில் திருட்டுநிலா ஒளிகாட்டி
அருகில் முகங்காட்டி தொலைவில் உடல்காட்டும்
இசை எனும் இம்சை
****************************************
சுத்தமான இசையொறுத்து சுட்டுவிட்ட மெட்டமைத்து
கத்தலோங்கி சொல்விளங்கா பாடலுக்கு இசைஆரம்
செத்த காட்சி வந்துவிட சங்குஊதும் செவிகிழிய
முத்தக்காட்சி ஒன்றுமட்டும் மெதுவாய் ஒலிபதிக்கும்
இறுதி நிலை சண்டைக் காட்சி
**********************************************
நலிவடைந்த தோற்றத்து கதையம்ச நாயகனும்
பலமுற்ற வில்லனவன் கைத்தடிகள் கூட்டத்தை
சலிக்காது மேல்பறந்து மொத்தமாய் துவைத்தெடுத்து
இளவிரல் ஒன்றினாலே மார்குத்திச் சாகடிக்க
கலகல ஓசையுடன் திரையரங்கு வாசலுக்கு
பலபல சிந்தையொடு ரசிகமணிப் பெருங்கூட்டம்
பொலபொல வெனவே வெளியேறும் பாந்தமாய் !
(சமூகச் சிந்தனை )