மக்களைச் சந்திப்பதில் என்ன தயக்கம் முதல்வரே
ஒரு நூற்றாண்டு வரலாற்றில், காவிரிப் படுகையில் கடுமையான சேதங்களை உண்டாக்கிய புயல்களில் ஒன்றாகியிருக்கிறது கஜா புயல். இயற்கையின் சீற்றம் தவிர்க்க முடியாதது என்றபோதிலும் பாதிப்புகளின் அளவை ஒரு நல்ல அரசு நிர்வாகத்தால் குறைக்க முடியும். குறிப்பாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் காட்டப்படும் வேகமும் விவேகமும் பாதிப்புகளின் தாக்கத்திலிருந்து மக்களை வேகமாக மீட்டெடுக்க முடியும். ஆனால், களத்திலிருந்து வரும் தகவல்கள் யாவும் அதிமுக அரசு நிர்வாகத்தின் மீது அதிருப்தியையே உண்டாக்குகின்றன. இந்தப் புயலால் ஒட்டுமொத்த மாநிலமும் பாதிக்கப்படவில்லை; ஆறு மாவட்டங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கின்றன. தொடர் மழை, வெள்ளம் போன்ற தொடர் சங்கடங்களும் இல்லை. இப்படிப்பட்டச் சூழலிலும், தமிழ்நாடு போன்ற ஒரு வளர்ந்த மாநிலத்தின் குடிமக்கள் புயலுக்குப் பின் ஐந்து நாட்களாகியும் பல பகுதிகளில் குடிதண்ணீருக்கே அல்லாடிக்கொண்டிருக்கின்றனர் என்கிற சூழலை எப்படி சகித்துக்கொள்வது?
ஒரு பேரிடரைக் கற்பனைசெய்வதிலும் அதை எதிர்கொள்வதில் முன்கூட்டி திட்டமிடுவதிலும் தன்னுடைய போதாமையைத் தொடர்ந்து வெளிப்படுத்திவருகிறது தமிழ்நாட்டு அரசு இயந்திரம். பாதிக்கப்பட்ட மக்களை அணுகுவதில் அரசு வெளிக்காட்டும் கோப முகம் பழனிசாமி அரசு கூடுதலாக உண்டாக்கிக்கொண்டிருக்கும் சிக்கல். முதல்வர் பழனிசாமி பாதிக்கப்பட்ட பகுதிகளை உடனடியாகச் சென்று பார்வையிட்டு மக்களையும் சந்தித்திருக்க வேண்டும். அரசு நிர்வாகத்தின் ஒட்டுமொத்த கவனமும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதற்கான அடையாள நடவடிக்கைகளில் ஒன்று அது. கேரள முதல்வர் பினராயி விஜயன் சமீபத்திய கேரள வெள்ளத்தை எப்படி அணுகினார் என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டலாம். பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் நின்றதோடு, கேரளத் துயரத்தை தேசிய அளவிலான கவனத்துக்குக் கொண்டுசென்றதோடு ஒட்டுமொத்த மலையாளிகளும் உதவுவதற்கான அறைகூவலையும் விடுத்தார் பினராயி விஜயன். இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட அரசுத் துறையினரையும் நிவாரணப் பணிகளுக்காக வந்த தன்னார்வலர்களையும் உற்சாகப்படுத்தினார். தமிழ்நாட்டில் நடந்ததோ தலைகீழ் கதை.
மாநிலத்தின் ஒரு பகுதி மக்கள் வீடிழந்து, வீதியில் நிலைக்குலைந்து நிற்கும் நிலையில், இன்னொரு பகுதியில் அரசு சார்பில் திறப்பு விழா நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தார் முதல்வர் பழனிசாமி. பாதிக்கப்பட்ட மக்கள் கோபத்தில் மறியலில் ஈடுபட்டபோது அவர்கள் மீது காவல் துறை பாய்ந்து கொத்துக்கொத்தாகக் கைதுசெய்ததும், ஊரெங்கும் காவல் படையினரை நிறுத்திவைத்திருப்பதும் முன்னுதாரணம் அற்ற நிகழ்வுகள். புயலுக்குப் பிந்தைய ஐந்தாவது நாளன்று பாதிக்கப்பட்டோரைப் பார்வையிடச் சென்றவர் சாலை வழியாகச் செல்லாமல் வான் வழியாக ஹெலிகாப்டரில் செல்ல முடிவெடுத்தது அடுத்த கோளாறு. அந்தப் பயணத்தையும் கனமழையின் காரணமாகத் தனது பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டிருக்கிறார். முதல்வரைச் சந்தித்து தங்களது குறைகளை எடுத்துச்சொல்ல முடியாத அளவிலான அங்கிருந்த கெடுபிடியான ஏற்பாடுகள் மக்களை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கின்றன.
பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் தமிழக அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஊருக்குள் அனுமதிக்காமல் மக்கள் திருப்பியனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்பதை அரசு உணர வேண்டாமா? பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய முதல் தேவை குடிநீர். பக்கத்து மாவட்டங்களிலிருந்து ஜெனரேட்டர்களை வரவழைத்து நீர்த்தேக்கத் தொட்டிகளை நிரப்பினால் ஒரே ஊருக்கு இரண்டு நாட்களுக்குக் குடிநீர் வழங்க முடியுமே? அரசு இயந்திரத்துக்குச் சாத்தியமாகாத விஷயமா அது?
மழை பெய்து ஏற்கெனவே தண்ணீர் தேங்கிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மீண்டும் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. நிலைமை மேலும் மோசமாகிவிடாமல் இருக்க, எல்லா வீடுகளுக்கும் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, மண்ணெண்ணெய், கொசுவிரட்டி, போர்வை கட்டாயம் தர வேண்டும். டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். டிராக்டர் டிரெய்லர் போன்றவற்றில் பெரிய ஜெனரேட்டர்களைக் கொண்டுசென்று குடிநீர், வீடுகளுக்கு மின் விநியோகம் ஆகியவற்றைத் தொடங்கலாம். இதற்கு ராணுவத்தின் பொறியாளர் படைப்பிரிவையும் தனியார் நிறுவனங்களையும் துணைக்கு அழைக்கலாம். குறைந்தபட்சம், குடிநீருக்கும் உணவுக்கும் உத்தரவாதம் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதை முழுமையாகச் செய்யாமல், வெறுமனே பார்வையிடும் காட்சிகளை அரங்கேற்ற முனைவது எரியும் நெருப்பில் எண்ணைய் ஊற்றும் செயலாகத்தான் முடியும். முதல்வர் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களைக் கரிசனத்தோடு அணுக வேண்டும்!
மு.அப்துல் முத்தலீஃப்