கனவுகள் வெல்வோம்
கனவு தமிழில் நிறைய அர்த்தம் .
சொப்பனம் . உறக்கம் . மயக்கம் .
ஆனால், மனிதர்க்கு ஒரே அர்த்தம் .
அது வாழ்க்கை . ஆம் கனவென்பது வாழ்க்கை .
வாழ்க்கை வாடகை வீடு என்றால் இரண்டு வருடம் வாழ்ந்த பின் வேறு வீடு செல்லலாம் . ஆனால் வாழ்க்கை நாடக மேடையாயிற்றே அந்த மேடையில் நாம் தான் நடித்தாக வேண்டும் . அதற்கான கதாப்பாத்திரம் தான் நமது கனவு .
நமது கனவு என்னவோ அதுவே நாம்.நாம் எப்படியோ அப்படியே நமது வாழ்க்கை .
மூட்டைகள் சுமக்கும் கழுதை போல் நாம் நமது கனவு சுமந்து செல்கிறோம் . சில மனிதர் கனவு கண்ட வாழ்க்கை வாழ்வார் . சில மனிதர் கனவுக்கு எதிராய் பொய்யாய் வாழ்வார் .
சிலரின் கனவு மெய்யாகும் .
சிலரின் கனவு பொய்யாகும் .
ஒரு சிறுவன் அவன் சிற்பியின் மகன் . ஒருநாள் அவனின் அப்பா விநாயகர் சிலை செதுக்குவதை பார்க்கிறான் . அவனின் அப்பா தன் மனதை ஒரு நிலைப்படுத்தி , கண்ணினை கூர்மைப்படுத்தி , தனது உளியால் புலி மகனை புவிக்கு கொண்டுவந்தார் . அந்த சிறுவன் ஆச்சரியம் கொண்டான் . தனது அப்பா கையிலிருந்து ஆனைமுகன் வந்தாரே என்று . ஓடிச் சென்றான் கட்டி அணைத்தான் . விநாயகனையும் தன்னை பெற்ற வித்தகனையும் ஒன்றென நினைத்தான் .
அவன் தனது அப்பாவிடம் கேட்டான் எப்படி அப்பா விநாயகரை செதுக்கினீர்கள் ? . அவர் , விநாயகரை செதுக்குவது என்பது எனது இன்றைய கனவு . அதற்காக நான் ஒரு வாரம் பயிற்சி செய்தேன் . இரண்டு நாள் முயற்சி செய்தேன் என்றார் . என்னது நீங்கள் பயிற்சியும் , முயற்சியும் செய்தீர்களா ? ஏன் ? அப்பா .
நீங்கள் தான் சிற்பி ஆயிற்றே .
அவர் , பயிற்சியும் முயற்சியும் இல்லை என்றால் பிள்ளையார் சில்லு சில்லாய் சிதைந்திருப்பார் .
பார்த்தீர்களா !
ஒரு சிற்பி சிற்பம் செதுக்க பயிற்சியும் முயற்சியும் செய்கிறான் . ஒரு விளையாட்டு வீரன் போட்டியில் ஜெயிக்க பயிற்சியும் முயற்சியும் செய்கிறான் . ஒரு பேச்சாளன் தங்குதடையின்றி பேச பயிற்சியும் முயற்சியும் செய்கிறான் .
பயிற்சி முயற்சி இவ்விரண்டும் கனவுக்கு கண் கொடுக்கும் .
ஆசையின் வடிவம் தான் கனவு . ஆசை என்னும் வாசற்படி வழியே கனவு என்றும் உருவம் உட்புகும் .
அந்த கனவு நம்மை விழிக்க சொல்லும் . உழைக்க சொல்லும் . தோல்வி வந்தால் அதனை அழிக்க சொல்லும் . வெற்றி என்னும் விதையை விதைக்க சொல்லும் . அந்த வெற்றி நிலையாய் நிலைக்க அயராது உழைக்க சொல்லும் .
கனவு என்பது உறக்கநிலையில் வருவதல்ல . மயக்கநிலையில் வருவதல்ல . மனநிலையை பொறுத்து வருவது . கடல் கூட சீற்றம் கொள்ளாமல் இருக்கலாம் ஆனால் கனவு ஒருநாள் சீற்றம் கொண்டு நம்மை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றே தீரும் .
ஆதலால் !
கனவுகள் காண்போம் .
வானளவு, கடலளவு இல்லை .
வானும் கடலும் கலந்தாலும் அளக்க முடியாத அளவிற்கு கனவு காண்போம் .
கண்ட கனவினை வெல்வோம்
வெற்றி தேசம் காண்போம் .