போதமுயர் யாப்பிற்கு அருளும் அணியே அணி – அணியறுபது 48

நேரிசை வெண்பா

எழுத்துக்(கு) அணிசொல்லே; இன்சொற்(கு) அணிதான்
வழுத்தும் பொருளின் வளமே; - அழுத்தும்
பொருளுக்(கு) அணியாப்பே; போதமுயர் யாப்பிற்(கு)
அருளும் அணியே அணி. 48

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

எழுத்துக்கு அழகு சொல்லே, இனிய சொல்லுக்கு அழகு வளமிக்க சொற்களின் பொருளேயாகும்; பொருளுக்கு அழகு யாப்பே; யாப்புக்கு அழகு அணியே ஆகும், போதம் - ஞானம், அறிவு.

கலை நிலைகளுக்கு மூலமாயுள்ள நான்கு வகைகள் இங்கே தொகையாய் அறிய வந்துள்ளன. மனிதனுடைய எண்ணங்களை மொழிகளால் வெளியிடுகின்றான். அந்த மொழிக்கு முதல் உறுப்பாய் நன்கு அமைந்துள்ளது எழுத்து என வந்தது. அ என்புது எழுத்து: ஆ என்பது சொல்.

ஆவின்பால் ஆன்ற அமுதாய் உயிர்களுக்குப்
பூவின்பால் ஊட்டும் புதுமையால் - நாவின்பால்
போற்றி அதன்குலத்தைப் புத்தேள் இனத்தோடு
சாற்றி வருமிவ் வுலகு.

இதில் பொருளும் யாப்பும் அணியும் அமைந்துள்ளன. உண்மை நிலைகளை நுண்மையாய் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆழ்ந்து அறியும் அளவே அரிய பொருள்கள் எளிதே தெரிய வருகின்றன. கருதி வருவது கருத்தாய் விளைகிறது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)

எழுத்துச் சொற்பொருள் யாப்பலங் காரமென் றிசைத்த
வழுத்து பஞ்சதி காரமும் மாசறுத்(து) அறியேன்;
பழுத்த பாவலர் பாதபைங் கமலமென் முடிமேல்
அழுத்தும் அஞ்சலி ஆசறக் கற்றதே அறியேன். - குருகை

ஐந்து வகை இலக்கணங்களின் அருமைகளையும் அவற்றை அறிந்து தெளிந்த புலவர்களின் மகிமைகளையும் இதனால் அறிந்து கொள்கின்றோம்.

கல்வியறிவைச் சால்புறப் பெறுதற்கு மூல சாதனமாயுள்ள இந்த ஐவகை இயல்களையும் கற்று மெய்யறிவு பெற்று உயிர்க்கு உய்தி பெற வேண்டும். அவ்வாறு பெறாமல் வைய மையல்களில் அழுந்திக் கல்விச் செருக்கோடு களித்துத் திரியின் பிறவிப் பேற்றை இழந்த பேதைகளாய் அவர் இழிக்கப்படுவர். அகந்தை, மமதை, இறுமாப்பு என்பன அவலக் கேடுகளையே விளைத்து விடுகின்றன.

எழுத்துச் சொற்பொருள் யாப்பலங் காரமென்(று)
இவற்றைக் கற்(று)இறு மாப்புறும் பேய்சில. – மோகவதைப் பரணி

உயிர்க்கு உரிய பயனை அடையாதவர் எவ்வாறு கடையராய் இழிவுறுகின்றனர் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். உயிர் துயருறாமல் உய்தியைச் செய்து கொள்வதே மெய்யான உணர்வின் மேலான உயர் பயனாம்,

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Nov-18, 10:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

மேலே