உள்ளுணர்ந்து தேர்தற் கணிநம் திருக்குறளே – அணியறுபது 50

நேரிசை வெண்பா

ஓர்தற் கணிகம்பன் ஒண்கவியே; உள்ளுணர்ந்து
தேர்தற் கணிநம் திருக்குறளே; - சேர்தற்குச்
செவ்வேள் திருவடியே செய்யவணி; சேர்ந்தவர்க்(கு)
எவ்வேளை தானுமணி யே! 50

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

கம்பர் பெருமான் இன்பக் கவியே ஓர்ந்து உணர்தற்கு அழகு: திருவள்ளுவத் தேவரின் திருக்குறளே தேர்ந்து தெளிதற்கு அழகு; செவ்வேள் அமலன் திருவடியே சிவகோடிகள் சேர்ந்து உய்தற்கு அழகு; அவ்வாறு சேர்ந்த முத்தர்களுக்கு எவ்வேளையும் அரிய இன்பமும் பெரிய அழகும் ஆகும்.

அறிவும் ஞானமும் ஆன்ம இன்பங்களும் இங்கே உரிமையாய் நன்கு உணர வந்துள்ளன.

கம்பரது காவியம் அறிவுக்கு அரிய பெரிய ஒர் இன்ப நிலையம். அதனை இனிய சுவர்க்கலோகம் என்று சொல்லலாம்; அங்கே எல்லா இந்திர போகங்களையும் எவ்வழியும் செவ்வையாய் அனுபவிக்கலாம். உள்ளம் உவகையுற, உணர்வு ஒளிபெற, உயிர் உயர்ந்து உவந்து திகழச் சிறந்த இன்ப நலன்கள் அதில் எங்கணும் நன்கு நிறைந்துள்ளன.

நித்திய சுகங்கள் நிறைந்துள்ள சத்திய உலகம் எனத் திருக்குறள் எங்கும் தெய்வ ஒளிகளை வீசியுளது. அங்கே ஆன்மானந்தமான அதிசய இன்பங்களை மதிநலம் கனியத் துய்த்து மகிழலாம்.

தமிழ் மொழியில் தோன்றியுள்ள இந்த இரண்டு நூல்களைப் போல் சால்புடைய மேலான நூல்களை வேறு எந்த மொழியும் பெறவில்லை. உலக மொழிகள் யாவும் இந்தத் தெய்வீகமான கலையின் திலக ஒளிகளை நோக்கித் திசைகள் தோறும் நசைகள் மீதூர்ந்து இசைகள் பாடித் தொழுது வருகின்றன.

இந்த உண்மையை இந்நாட்டு மக்கள் எண்ணி உணராமல் கண்மூடிக் கவிழ்ந்து மண் மூடிகளாய் மறுகி உழலுகின்றனர். மடமையிருள் மண்டிக் கடமையை உணராமல் யாதும் கருதிக் காணாமல் களித்திருப்பது கழிபேரிழிவாய்ப் பெருகியுளது.

மையல் மயக்கங்களில் மருண்டு வெய்ய பேய்களாய் விரிந்து உழந்தும் தம்மையும் மனிதர் என அவர் தருக்கிக் களித்துப் பிலுக்கி வருவது இயற்கை வினோதமாய்க் கலித்து வருகிறது.

அரிய சோதி

திருக்குறளே! நீதோன்றிச் செந்தமிழில் செழுஞ்சோதி
எங்கும் வீசி
அருக்கனென நிலவியிந்த அகிலவுல கங்களுக்கும்
அறிவு காட்டிப்
பெருக்கமுடன் நின்றுள்ளாய்! தமிழரெனப் பிறந்தவருன்
பெருமை ஓர்ந்தே
உருக்கமுடன் ஒழுகியொளி பெறும்நாளே உயர்நாளாம்;
உறுநாள் என்றோ? 1

தெய்வ நிதி.

தேவரருள் அமுதான திருக்குறளாம் தெய்வநிதி
எந்த வீட்டில்
மேவியுளது, அவ்வீடே மேலான மெய்வீடாம்;
மேவல் இன்றேல்
பாவயிருள் படர்ந்தறிவு பாழான பழிவீடாம்;
பழிநே ராமல்
ஆவலுடன் பயின்றுயர்வார் அமரரென இலங்குவார்
அறிவு கூர்ந்தே. 2

கதியின்பம்.

வள்ளுவரை வான்குறளை வாயளவில் பேசுகின்றார்;
மக்கள் முன்பு
தெள்ளுரைகள் பலகூறித் தெளிந்தவர்போல் நடிக்கின்றார்;
சிந்தை கூர்ந்தே
உள்ளுணர்வை, உறுபொருளை, உயர்சுவையை, உண்மையாய்
ஓர்ந்து வாழ்ந்து
கள்ளமற ஒழுகுவார் எவரவரே கதியின்பம்
காண்கின் றாரே. 3

இந்நாட்டின் சாபம்

எந்நாட்டில் எம்மொழியில் திருக்குறள்போல் ஒருநூலை
எய்தி இன்பம்
அந்நாட்டில் உள்ளவர்கள் அடைந்துள்ளார்? யாண்டுமே
இல்லை யன்றோ!
இந்நாட்டில் தம்முடைய தாய்மொழியின் எழில்ஒளியை
இனிது நோக்கித்
தந்நாட்டம் தெளியாமல் தாழ்ந்துள்ளார் தமிழ்நாட்டின்
சாபம் என்னே! 4

இக் கவிகளின் பொருள் நிலைகளைக் கருதியுணர்ந்து உறுதி உண்மைகளை ஓர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். அரிய அறிவுடைய மனிதப் பிறவியை அடைந்து வந்தும் உரிய பயனை அடையாமல் ஒழிந்து போவது பெரிய பழியாம்.

செவ்வேள் - முருகக் கடவுள். செந்நிறத் திருவுருவும், என்றும் மாறாத இளமை எழிலும், இணை ஏதுமில்லாத அதிசய அழகும் மருவி அமரர் முதல் யாவரும் விழைந்து வியந்து உவந்து தொழுது துதி செய்து வரத் தோன்றியுள்ளமையால் செவ்வேள் என்னும் திருநாமம் இப் பெருமானுக்கு எவ்வழியும் தனி உரிமையாய் இனிது ஒளி செய்துளது.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

அருவும் ஆகுவன் உருவமும் ஆகுவன் அருவும்
உருவும் இல்லதோர் தன்மையும் ஆகுவன் ஊழின்
கருமம் ஆகுவன் நிமித்தமும் ஆகுவன் கண்டாய்!
பரமன் ஆடலை யாவரே பகர்ந்திடற் பாலார்? 1

வேதக் காட்சிக்கும் உபநிடத் துச்சிக்கும் விரிந்த
போதக் காட்சிக்கும் காணலன்; புதியரில் புதியன்;
மூதக் கார்க்குமூ தக்கவன்; முடிவிற்கு முடிவாய்
ஆதிக்(கு) ஆதியாய் உயிர்க்குயி ராய்நின்ற அமலன். 2 - கந்த புராணம்

இத்தகைய அமல மூர்த்தியைக் கருதி யுருகி வருவார் பிறவித் துயரங்கள் நீங்கிப் பேரின்ப நிலையைப் பெறுகின்றார். உள்ளம் உருகி வரும் அளவு பேரின்ப வெள்ளம் அங்கே பெருகி வருகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Nov-18, 7:44 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 80

சிறந்த கட்டுரைகள்

மேலே