அவள் அழகைவிட அழகு தமிழ் அவளைவிட alagu

மயக்கும் வெண்மதி அழகு.
மாலைநேர அவளின் வசீகரம் அழகு.
ஒளிந்துகொள்ளும் நாணம் அழகு.
ஓவியனின் கைவண்ணம் போன்ற கலையழகு.
என் கவிதை அவள் அழகைவிட அழகு.
வார்த்தை தந்த என்தமிழ் அவளைவிட அழகு.!

திரைகடல் சீறிப்பாய்வது அழகு.
திரவியம் தேடும் கப்பல்கள் பல சுமப்பதழகு.
நீலவண்ண நீரின் நிறையழகு.
நீங்கா அலைகளின் ஆராரோ அழகு.
உருவாக்கிய கரம் அவள் அழகைவிட அழகு.
அர்த்தமிக்க வரிகள் தரும் தமிழ் அவளைவிட அழகு.!

வானுயர் மலைகள் அழகு. வண்ண வண்ண
மலர்கள் தாங்கும் வளைவுகள் அழகு.
வெள்ளிக்கோடாக நீர் வீழ்ச்சிகள் அழகு.
வெய்யில் பட்டு மின்னுதல் காண மிக அழகு.
அரணாக கொண்டிருப்பது அவள் அழகைவிட அழகு.
உச்சரிக்க ஓசை தரும் இன்பத்தமிழ் அவளைவிட அழகு.!

குழந்தை மகளின் கொஞ்சும் மழலை அழகு.
குதூகலித்து மகிழ்ந்திடும் சிரிப்பழகு.
தத்தி நடக்கும் தளிர் நடையழகு. மெத்தென்ற
அணைப்பின் ஸ்பரிசம் அழகு. பெற்றவள்
அவள் அழகைவிட அழகு. தித்திக்கும்
தென்பா தரும் தமிழ் அவளைவிட அழகு.!

அம்மா என்ற அன்பு தெய்வம் அழகு.
அரவணைக்கும் அவளின் பாசம் அழகு.
தலைவருடி உணவூட்டும் தாய்மை அழகு.
நல்வழி சொல்லித்தரும் நற்பண்பழகு.
இந்நாநிலம், அவள் அழகைவிட அழகு.
அன்னைத் தமிழ் அவளைவிட அழகு.!

காதலியின் கடைக்கண் பார்வையழகு.
கள்ளத்தனக் களுக்கென்ற சிரிப்பழகு.
மெல்லச் சாய்த்திடும் மேனியழகு.
மெய்யாகத் தோன்றும் பொய்க்கோபம் அழகு.
பார்த்திருக்கும் என்விழிகள், அவள் அழகைவிட அழகு.
ஹையோ! வர்ணிக்க வார்த்தை தந்த தமிழ் அவளைவிட அழகு.!

எழுதியவர் : பிரின்சஸ் ஹாசினி (4-Dec-18, 11:52 pm)
சேர்த்தது : Princess Hasini
பார்வை : 152

மேலே