நல்லதைப் பேசுவதே நாவணி – அணியறுபது 55

நேரிசை வெண்பா

நல்லதை எண்ணுவதே நன்மனத்துக்(கு) ஆனவணி;
நல்லதைப் பேசுவதே நாவணி; - நல்லதைச்
செய்வதே தேகத்தின் சீரணி; இம்மூன்றும்
எய்தினார் உய்தி இவண். 55

- அணியறுபது,
- கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல எண்ணங்களை எண்ணுவதே மனத்துக்கு அழகு; நல்ல வார்த்தைகளைப் பேசுவதே நாவுக்கு அழகு; நல்ல செயல்களைச் செய்வதே உடம்புக்கு அழகு; இவை மூன்றும் அமையின் உயிர்க்கு அழகு ஆகும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மனமும் வாக்கும் காயமும் இனமாய் இங்கே அறிய வந்தன. தினமும் நிகழ்வன; சிந்திக்க நேர்ந்தன;. மூன்று வழிகளும் வாழ்வின் விழிகள்.

வினைகள் விளைந்து வருகிற தொழில் நிலையங்களாய் இவை இயைந்திருக்கின்றன. எண்ணமும் சொல்லும் செயலும் நல்லனவாயின் அவை புண்ணியங்களாய்ப் பொலிந்து நின்று எவ்வழியும் இன்ப நலங்களை அருளுகின்றன. தீயனவாயின் பாவங்களாய்ப் பரந்து நின்று யாண்டும் நீண்ட துன்பங்களையே தருகின்றன.

யார்க்கும் இதமே கருதுக: எவரிடமும் இனிமையாய்ப் பேசுக; எங்கும் நலமே புரிக. இவ்வாறு பழகிவரின் அல்லல் யாதும் அணுகாது: நல்ல சுக வாழ்வே எல்லா வழிகளிலும் விரைந்து வரும்.

எல்லா உயிரினங்களும் எவ்வழியும் தமக்கு இன்பமே வேண்டும் என்று கருதி வருகின்றன. கருதியவாறு காணாமல் எங்கும் மறுகி யுழல்கின்றன. காரணம் என்ன? வழி வழியாகவே மனம் மொழி மெய்களை நல்ல வழிகளில் பழக்கி நலம்புரிந்து வந்தவரே இன்ப நலன்களை எய்த உரியவராகின்றார்; அவ்வாறு பழகாமல் அல்வழியில் இழிந்து அல்லல் புரிய நேர்ந்தவர் எவரும் எப்பொழுதும் துன்பம் தோயவே நேர்ந்துள்ளனர்.

எனைப்பகை உற்றாரும் உய்வர்; வினைப்பகை
வீயாது பின்சென்(று) அடும். 207 தீவினையச்சம்

எத்தகைய கொடிய பகைகளுக்கும் தப்பி உய்யலாம்; தாம் செய்த வினைப்பயனை அனுபவியாமல் யாரும் யாதும் தப்ப முடியாது என வள்ளுவர் இவ்வாறு விதி நியமத்தை நன்கு விளக்கியிருக்கிறார்.

பிற உயிர்களுக்கு இடர் செய்கின்றவன் தன் உயிர்க்கே கொடிய துயரங்களை விளைத்துக் கொள்கிறான். விளைவு தெரியாமல் வெறியனாய் உழல்கிறான்.

இன்னிசை வெண்பா

பிறர்க்கின்னா செய்தலிற் பேதைமை யில்லை
பிறர்க்கின்னா(து) என்றுபேர் இட்டுத் - தனக்கின்னா
வித்து விளைத்து வினைவிளைப்பக் காண்டலிற்
பித்தும் உளவோ பிற. 83 – அறநெறிச்சாரம்

பிறர்க்குத் துன்பம் செய்வதினும் கொடிய மடமை வேறு யாதும் இல்லை; தான் செய்த துயர் ஒன்று நூறாய்ப் பெருகித் தன்னை வந்து வருத்துமே என்பதை உணராமையால் அந்த முழு மூடன் அவ்வாறு செய்து பின்பு அழிதுயரங்களை அடைந்து அழுது புலம்பி அலமந்து உழல்கின்றான்.

தீய வழியில் பழகிய தீவினையாளர்க்கு நல்ல அறிவுரைகளை மேலோர் அருளோடு நயந்து கூறினும் உவந்து கேளார். மருளோடு இகழ்ந்தே போவர். செய்த தீவினைப் பயன் எய்தியபோது ஐயோ! என்று அவர் அலறி அழுது துடிப்பர்.

மறத்துறை நீங்குமின்! வல்வினை ஊட்டுமென்(று)
அறத்துறை மக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும்,
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்;
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர். - சிலப்பதிகாரம் 14

தீவினையாளருடைய புலைநிலைகளை இது தெளிவாக விளக்கியுளது. இனிய போதனைகள் யாதும் அவர்க்கு ஏறாது. கொடிய வேதனைகள் ஏறி வதைத்த பொழுது அவர் பதைத்து அழிவர்.

யாப்பு - உறுதியான அறிவு. மாக்கள் என்றது மக்களுக்கு உரிய மதிநலனை இழந்துபோன அந்த, இழிவு நிலை தெளிவாய்த் தெரிய வந்தது.

மனநினைவும் வாய்மொழியும் மெய்ச்செயலும் புனிதமாய் இருந்தால் அந்த மனிதன் மகானாய் உயர்கிறான், எல்லாவற்றிற்கும் மனம் மூல நிலையமாதலால் அதன் தலைமை தெரிய முதன்மையாய் வந்தது. புனிதமான இனிய மனம் அரிய மகிமைகளைத் தனியே எங்கும் நலமாய் விளைத்தருளுகிறது.

மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தார் ஆகி - நினைத்திருந்(து)
ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல்லெனின்
சென்று படுமாம் உயிர். 359 பழமொழி நானூறு

மூன்று கரணங்களும் இனியராய் ஆன்று அவிந்து அடங்கியுள்ள சான்றோராலேயே இவ்வுலகம் இனிது நடந்து வருகிறது. அவ்வுண்மையை இது தெளிவாக உணர்த்தியுள்ளது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Dec-18, 9:00 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 103

சிறந்த கட்டுரைகள்

மேலே