ஆசிரியர் எனும் சிற்பி
ஆசிரியர்களை பெருமையாக நினைக்கும் எந்த மாணவனும் வீண் போனதில்லை. ஆசிரயர் உங்களை கண்டிப்பதில் எந்த பகைஉணர்ச்சியும் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பெற்றவர்களைப் போலவே உங்களின் வளர்ச்சியில் பெருமிதம் கொள்பவர்கள் ஆசிரியர். உன் பெற்றோர்க்கு உன் வளர்ச்சியால் இலாபமுண்டு. ஆனால் பிரதிபலன் பாராமல் உன் வளர்ச்சியை கண்டு பூரிக்கும் குணம் ஆசிரியருக்கு உண்டு. தன்னால் தன் மாணவன் வளர்ந்தான் என்பதில் ஒரு கௌரவம் ஆசிரியர்களுக்கு எப்போதும் உண்டு. ஆசிரியர் அடித்தார், திட்டினார் என பெற்றவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு சண்டைக்கு ஓடாமல் தான் படைத்த மண்பிண்டத்தை சிற்பமாக மாற்ற உளியால் செதுக்கும்போது சற்று வலிக்கத்தான் செய்யும் என்பதை ஒருபோதும் மறவாதீர்கள் பெற்றோர்களே. நீங்களும் அதையெல்லாம் கடந்துதான் வந்திருப்பீர்கள். "மாதா பிதா குரு இவர்கள் தெய்வம்" என்பது மருவி மாதா பிதா குரு தெய்வம் என்றாகியது. எனது ஆசிரியர்களையும் இந்த ஒருகணம் நினைவுகூர்கிறேன்.
நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது ஒரு திருமணத்திற்கு சென்றபோது தெரியாமல் வெற்றிலை பாக்கு போட்டேன்.இதை என் அம்மா ஆசிரியரிடம் கூறிவிட்டார்கள்.ஆசிரியர் என்னை கையை நீட்டுச் சொல்லி கையில் அடித்து என் கையே வீங்கி விட்டது.மறுநாள் சிறுவயதில் வெற்றிலை பாக்கு போடுவது தவறு என்று அறிவுறுத்தினார்.நான் இன்றுவரை வெற்றிலை பாக்கு போடுவதில்லை.வெற்றிலை பாக்கை பார்த்தாலே எனக்கு என் ஆசிரியரின் நினைவு வந்து பயம் எட்டிப் பார்க்கும்.ஆசிரியர் என்றால் அவ்வளவு பயமும் மரியாதையும் இருந்தது.இப்பொழுது நானும் ஒரு ஆசிரியை.மாணவர்களை கண்டிப்பதற்கே பயமாக உள்ளது.காலம் மாறி விட்டது இருந்தாலும் மாணவர்களை முடிந்தவரை அன்பால் என்வழிக்கு கொண்டு வருவேன்.இருந்தாலும் அதுவும் பெரிய சவாலாகத்தான் உள்ளது இன்றைய காலகட்டத்தில்..........
துருக்கியில் தனது ஆசிரியர் விமானத்தில் பயணம் செய்ததை அறிந்து அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் ஒலிபெருக்கியில் அனைவரும் அறியும் வகையில் எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் என் வாழ்க்கை உயர இவர் தான் காரணம் என சொல்லும் விமான ஓட்டி நெகிழ்ச்சியான நேரம். நெகிழ்ச்சியில் ஆசிரியர் கண்ணீர் விட்டார்.ஒரு மாணவன் தனது ஆசிரியரை மறக்காமல் செய்த செயல் போற்றுதற்குரியது.