இணையப் பிச்சைக்காரன்----------------------------------அனுபவம்
இன்று ஒரு சங்கடமான கடிதம். ஒரு நண்பர், செல்வந்தர், ‘ஏன் தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் இணையப்பிச்சைக்காரர்கள் ஆக மாறிவிட்டீர்கள்?” என்று கேட்டிருந்தார். நேற்று முன்தினம் அவருக்கு நான் பணம்கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன்.
நான் தீவிரமாக எழுதவந்தது 1988 ல்தான். அன்றெல்லாம் எழுதினால் நூறுபேர்தான் வாசிப்பார்கள். நான் 1990 முதலே வாசகர்களிடம் பிச்சை எடுக்கவும் தொடங்கிவிட்டேன். தர்மபுரியில் என் நண்பர் நஞ்சுண்டன் இதயநோய் வந்து அறுவைசிகிழ்ச்சை செய்துகொண்டிருந்தார். டி.எஸ்.எலியட்டின் செவ்விலக்கியம் என்பது என்ன போன்ற நூல்களை மொழியாக்கம் செய்தவர்.நான் அவருக்காக பணம் கேட்டு பலருக்கும் கடிதம் எழுதினேன். நிறைவூட்டும் ஒரு தொகை சேகரித்து அனுப்பினேன். பெரிய தொகை சுந்தர ராமசாமி தந்தது.
அதன்பின் நான் நிதி வசூலிக்காத வருடம் இதுவரை இருந்ததில்லை. பெரும்பாலும் எழுத்தாளர்களுக்காகத்தான். உடல்நலமின்றி இருந்தவர்கள், வேலையிழந்து அலைந்தவர்கள் என பலர். இடதுசாரி தீவிர இயக்கங்களில் இருந்து ஏமாற்றம் அடைந்து திரும்பிவந்து வாழ வழியின்றி நடுத்தெருவில் நின்றவர்கள் சிலர். அவர்களில் சிலர் இப்போதும் இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர். எப்போதுமே குறைவில்லாமல் பணம் வந்திருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம். என் மேல் ஒரு நம்பிக்கை இருக்கிறது.
1995 ல் என் நண்பரும் புலிகள் அமைப்பில் பொறுப்பில் இருந்தவருமான கருணாகரனின் குழந்தைக்கு அறுவை சிகிழ்ச்சை செய்யவேண்டியிருந்தது. பணம் வசூலித்து அனுப்பினேன்.மறைமுக வழிகளினூடாக கிளிநொச்சி சென்று சேர்ந்தது. பையன் இப்போது இளைஞன். அன்று புலிகள் அமைப்பிடம் பணம் மிகக்குறைவு. அந்தப்பணம் இல்லையேல் அவன் மிகவும் கஷ்டப்பட்டிருப்பான். [சமீபத்தில் அவர் அதைப் பதிவுசெய்ததனால் இத்தனை வருடங்களுக்குப்பின் இதை நான் இப்போது எழுதுகிறேன். பொதுவாக இவற்றை எழுதுவதில்லை. ஏற்பதில் எழுத்தாளர்களுக்கு பெரும் கூச்சம் உள்ளது]
இத்தனை வருடங்களுக்குப்பின் என் நண்பர் முத்துராமன் ஈழ அகதிக்குழந்தைகளின் மேற்கல்விக்காக நிதி திரட்டுகிறார். அவருக்காக பணம் கேட்டு நண்பர்களிடம் கையேந்திருக்கிறேன். நம்மாழ்வார் அவர்களின் பண்ணையில் சூரிய மின்சார தகடுகள் அமைக்க நிதி திரட்டினோம்.வானவன் மாதேவியின் ஆதவ் அறக்கட்டளைக்காக நிதி கேட்டோம். இப்போது குழுமம் இருப்பதனால் பொதுவாக வெளியே நிதிகேட்பதில்லை. நண்பர்கள் என நினைப்பவர்களிடம் மட்டும் கேட்பதுண்டு.
பெரும்பாலும் பணம் வருகிறது. ஆனாலும் பணம் கேட்கப்பட்டவர்களில் மூன்றில் ஒருபங்கினர் மௌனமாக இருந்துவிடுவதே வழக்கம். இன்று வந்ததுபோன்ற கடிதம் ஓருசிலமுறைதான் வந்திருக்கிறது. இதில் சங்கடம் கொள்ளக்கூடாது என தெரியும். ஆனால் முகத்தில் காறித்துப்பிய எச்சில் பட்டால் கழுவக்கழுவ போகாததுபோல அது சுழன்றுகொண்டிருக்கிறது.
நிதி வசூலித்து அளிக்கவேண்டிய நிலையில்தான் அன்றும் இன்றும் தமிழ் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அதை நான் அவர்களின் இழிவாக நினைக்கவில்லை. நம் இழிவு அது. அதைப்பற்றிய சுரணை நமக்கு இல்லை என்றால் அது மேலும் இழிவு
ஒருசமூகத்தில் அதன் அறிவுஜீவிகள் எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வாழவேண்டும் என்றால், கைவிடப்பட்டு சாகவேண்டும் என்றால் அந்தச்சமூகம் வேறெதிலும் ஆரோக்கியமாக இல்லை என்றே பொருள். வாசிப்பு என்பது ஓர் இயக்கமாக இல்லாத தமிழ்ச்சமூகத்தில் அறிவார்ந்த எதற்கும் மரியாதை இல்லாத சூழலில் இதையே நாம் எதிர்பார்க்கமுடியும்.
ஆனால் ‘ஏன் உழைச்சு வாழலாமே? தெருவிலே துணி அயர்ன் பன்றவன் ஐநூறு ரூபா சம்பாரிக்கிறானே?” என்ற கேள்வி முதல் “அவங்கள்லாம் பொறுப்பில்லாதவங்க சார். குடிகாரனுங்க” வரை பலவகையான பதில்களை அளிக்க நாம் பழகிவிட்டிருக்கிறோம். அதற்கான நியாயங்கள் தர்க்கங்கள். அதில் செயல்படும் அறிவுக்கூர்மை வாசிப்பில் தெரிந்திருந்தால் இங்கே புத்தகங்கள் விற்பதில் பிரச்சினையே இருக்காது.
எனக்கு தனிப்பட்ட முறையில் பணம் தேவைப்பட்டதில்லை. நான் மத்திய அரசு ஊழியனாக இருந்தேன். என் மனைவி பணியாற்றுகிறாள். அத்துடன் அடிப்படையில் நான் பெரிய கஞ்சன். பயணம் தவிர எதற்குமே பணம் செலவிட்டதில்லை.
ஆனால் எனக்காகவும் ஒருமுறை பணம் கேட்கநேர்ந்தது. பலவகை முயற்சிகள் தோற்றுப்போன பின் விஷ்ணுபுரத்தை அச்சேற்றுவதற்காக . முன்பதிவில் நூலை வாங்கும்படி கோரி நண்பர்களுக்கு எழுதினேன். அவர்களின் உதவியால் நூல் வெளிவந்தது. சொல்புதிது நடந்த நாட்களில் நண்பர்களிடம் பணம் பெற்றிருக்கிறேன்.
இன்று எனக்கு எதற்கும் பணம் தேவையில்லை. சரி, தேவையாக இருந்தால் கேட்பேனா? கண்டிப்பாகக் கேட்பேன். கேட்காமல் ஆண்மையுடன் வாழ்ந்து ஒன்றும் எழுதாமல் செத்துப்போவதை விட கேட்டு வாங்கி எழுதிவிட்டுப்போவது மேல். எழுத்தாளனின் கடமை நல்லவனாக வாழ்வது இல்லை, நன்றாக எழுதுவதுதான். செத்துப்போனால் ஆறுமாதத்தில் எதிரிகள் மறந்துவிடுவார்கள். அதன்பின் எழுதியவைதான் நிலைக்கும்.
இன்று என் வாசகர்கள் சிலர் சாரு நிவேதிதா வாசகர்களிடம் பணம் கேட்பதைப்பற்றி நக்கல் செய்து எனக்கு எழுதுவதுண்டு. நெருக்கமானவர்களுக்கு நான் என்ன சொல்வேன் என்று தெரியும். ஒரு ‘டெம்ப்லேட்’ கடிதம் வைத்திருக்கிறேன். அதை அனுப்பிவிடுவேன். அதோடு அவர் எதிரியும் ஆகிவிடுவார்
ஓர் எழுத்தாளன் தன் வாசகர்களிடம் பணம் கேட்பதில் ஓர் அழகுதான் உள்ளது என நினைக்கிறேன். அவனை முக்கியமானவனாக நினைப்பவர்கள் பணம் கொடுக்கிறார்கள். நினைக்காதவர்கள் பணம் கொடுக்கவேண்டியதில்லை. அந்தப்பணத்தில் சினிமா பார்க்கலாம், சாராயம் குடிக்கலாம். அதில் என்ன கேலி வேண்டியிருக்கிறது?
தமிழில் பாரதி ,புதுமைப்பித்தன், பிரமிள் ஈறாக பெரிய எழுத்தாளர்கள் பெரும்பாலும் நண்பர்களின் நன்கொடையால்தான் வாழ்ந்தார்கள். பெரும்புகழுடன் இருந்த ஜெயகாந்தனுக்கே அவருடைய நண்பர் மூப்பனார் நிதிசேர்த்து அளித்திருக்கிறர். இன்றும் பலர் அந்நிலையில்தான் வாழ்கிறார்கள். இன்னும் நூறாண்டுக்காலம் அப்படித்தான் நிலைமை இருக்கும்- அதன்பின் தமிழில் யாரும் எழுதமாட்டார்கள்.
ஓர் எழுத்தாளன் மறைந்தபின் அவனுடன் இணையப்பிச்சைக்காரன் என்ற பேரும் சேர்ந்து இருக்கும் என்றால் அதன் வழியாக அவன் வாழ்ந்த காலகட்டத்தின் சமூகம்தான் அவமதிப்புக்கு உள்ளாகிறது. கட்டாய உழைப்பு முகாம் போல அது ஒரு குறியீடு.
பக்கவாதம் தாக்கி நோயுற்று தனிமையில் இருக்கும் எழுத்தாள நண்பருக்காகவே நான் பணம் கேட்டேன். முன்னரும் அவருக்கு உதவி செய்திருக்கிறோம். கிட்டத்தட்ட தெருவில் தங்கி நண்பர்கள் ஆதரவில் வாழ்ந்த அவரை நிதி திரட்டி லீஸுக்கு வீடு எடுத்து குடிவைத்தோம். கையிருப்புப்பணமும் கொடுத்தோம். பக்கவாதச் சிகிழ்ச்சையில் அந்தப்பணம் தீர்ந்துவிட்டது.
ஒருவர் இப்படி எழுதினாலும் கூட பலர் பணம் அனுப்பினர். மேலும் வந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்கு நன்றி. அனுப்ப உண்மையில் விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளலாம்.
ஆகவே இணையப்பிச்சைக்காரன் என்று என்னை நண்பர் அழைத்ததில் குறையில்லை. வகுப்புவாதி, மதவாதி, இனவாதி, பூர்ஷுவா, சுரண்டல்வாதி, சனாதனி, ஆணாதிக்கவாதி இன்னபிற அடைமொழிகளுடன் இதையும் சேர்த்துக்கொள்கிறேன். மௌனமாக இருந்துவிட்டவர்களிடமும் சேர்த்து இப்படிச் சொல்லி முடிக்கிறேன் “தர்மதொரை, அன்னதாதா, மகராசா, இணையப்பிச்சைக்காரனுங்கய்யா கண்பாருங்கய்யா சீமானே”
ஜெ மின்னஞ்சல்