நாணம் கொண்ட அன்பன்
திடுமென தோன்றிய ஆவல்
ஆண்மகன் நாணம் குறித்து
கவிமொழி வரைய...
அவனிடம் கூறவும்...
சம்மத முறுவல் தந்து..
சிகை கோதியபடி...
சற்று தூரம் நடந்து...
மரத்தின் மீது சாய்ந்து...
ஒற்றை கால் மடித்து...
இலகுவாக நின்றான்.
அவள் பார்வையால்
அன்பன் அழகை
பருகத்தொடங்கினாள்...
நித்தம் தேகப்பயிற்சி பலன் தந்த
செருக்கு மிகுந்த தோற்றம்...
வாகாக வலிய தோள்களில்
தலைசாய்க்க
தோதான உயரம்...
நொடிப்பொழுதில் இடர் விலக்கும்
நீண்ட நெடிய கரங்கள்...
அடைக்கலம் புக அழைக்கும்
அகன்ற மார்பு...
விண் போல் பரந்து விரிந்த
விசாலமான நெற்றி...
எவ்வித எல்லைக்குள் உட்படாமல்
வளர்ந்து நிற்கும் புருவங்கள்...
எல்லைமீறிய பார்வைகள் என்று
ஏதுமில்லா கண்கள்...
பட்டை தீட்டிய கத்திமுனை போல்
கூரான நாசி...
அடர்ந்த மீசையின் கீழ்
மகிழ்ச்சி பகிரும் புன்னகை...
ஆனால் இன்றதில்
நய்யாண்டியின் சாயல் ஏனோ.?
சுயம், சூழல் உணர்ந்தாள்..
வெட்கம் தின்னும் பொருளானாள்..
இயலாமை தந்த செயலாய்-அவன்
இருக்குமிடம் நெருங்கி...
செல்லக் கோபத்துடன்...
சொக்காய் இழுத்து...
தலை சரித்து..
புருவங்கள் மேலேற...
தன்னவனை நோக்கினாள்...
பொருள் செரிந்த பார்வையுடன்...
தனக்கானவளின்
விழிமொழி தாளாமல் -வதனம்
அந்தி நேர
ஆதவனின் நிறமாக...
நிலம் நோக்கி
இமை தாழ்த்தினான்...
நாணத்துடன்...