காதலிப்பாயா
அழகே
உன்னைப் பின்தொடர்ந்து
வந்தோருக்கு
தொடர்ந்து நடந்து விட்டது
காரியம்
காரிகையே
இனி யாரையும் காரி
உமிழ்ந்து ஊற்றாதே
அவன் நெஞ்சில்
காரீயம்
நீ அணிந்தாய்
கருப்பு ஆடை
கண்டு நான் ஆனேன்
கருப்பு ஆடாய்
நீ நடமாடும்
கற்சிலை
உனக்கு ஈடு எச்சிலை ?
நீ
கடித்துத் துப்பிய
கரும்பில் சாரை விடுத்து
எறும்புகள் விருந்தாய்
உண்கின்றன உன் எச்சிலை.
நீ
காதல் நோய்
பரப்பும் பொற்சிலை
உன் கடைக் கண்ணில்
கிடைக்கும் அந்நோய்
தீர்க்கும் பச்சிலை
நீ உம் என்றால்
கங்கையாய்ப் பெருகும்
என் ஆஸ்தி
நீ இல்லையென்றால்
கங்கையில் கரையும்
என் அஸ்தி
நீ என் செல் எடுத்துப்
படித்தால் என் மடலை
கல்லறையில்
செல் எடுக்காது
என் உடலை
அரிவையே
நான் உன்
அறிவையும் அழகையும்
அறிய ஆசை கொள்கிறேன்
நீயோ என் மனம்
அரியவே ஆசை கொல்கிறாய்
அழகே நீ தீ
எப்போது காதல்மன்றத்தில்
தரப்போகின்றாய்
காதல் எனும் நீதி