அறங்கண்டேன் ஆன்ற பொருள்கண்டேன் இன்பத் திறங்கண்டேன் - 5 நூலின் பயன், தருமதீபிகை
நேரிசை வெண்பா
அறங்கண்டேன் ஆன்ற பொருள்கண்டேன் இன்பத்
திறங்கண்டேன் வீடும் தெரிந்தேன் - நிறங்கொண்ட
செவ்வேளுட் கொண்ட செகவீர பாண்டியனார்
இவ்வேள் ஒருநூலால் இன்று. 5
- நூலின் பயன், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
ஒளிமயமாயுள்ள முருகனை உள்ளத்தில் கொண்டுள்ள செகவீரபாண்டியனார் அருளிய இந்நூலால் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் அரிய பொருள்களைக் கண்டு பெரிய இன்பங்கள் பெற்றேன் என்பதாம்.
நிறம் கொண்ட என்றது சோதி சுடர்ப்பிழம்பாய் நிற்கும் அப்பெருமானது திருமேனியின் திவ்விய நிலைகருதி வந்தது. நிறம் – ஒளி, இனிய சோதி இன்ப ஒளி வீசியுள்ளது.
"பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு
ஒவற இமைக்கும் சேண்விளங் கவிரொளி'
நீலக்கடல் மேல் நிலாவி நிற்கும் பாலசூரியன் போல், கோல மயில்மேல் குமாரக்கடவுள் குலாவியிருக்கும் என நக்கீரர் இங்ஙனம் குறித்திருக்கிறார்.
வேள் என்பது மன்மதனுக்குப் பேர். அவன் கரியகோல மேனியனாதலால் செஞ்சோதித் திருமேனியனான முருகநாதன் செவ்வேள் என நின்றான். அளவிடலரிய அதிசய அழகும் அற்புத நிலையும் துதிசெய்ய வந்தன.
சிறப்புப் பாயிரம்.
அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
7726.
ஆயிர கோடி காமர்
.அழகெலாம் திரண்டொன்(று) ஆகி
மேயின எனினும் செவ்வேள்
.விமலமாஞ் சரணம் தன்னில்
தூயநல் எழிலுக்(கு) ஆற்றா(து)
..என்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற்(கு) எல்லாம்
..உவமையார் வகுக்க வல்லார்? 439 சூரபன்மன் வதைப் படலம், உத்த காண்டம், கந்தபுராணம்
என்றதனால் எம்பெருமானது ஒளிவளர் உருவும், இளமை நலனும், எழில் நிலையும் அதிசயமுடையன என்பது அறியலாகும். அவனது திவ்விய சவுந்தரியத்திற்கு யாண்டும் யாரும் எல்லை காணமுடியாது. உள்ளம் உருகி நோக்கியவர் உவகை மீதுார்ந்து உய்தி பெறுகின்றார்.
இவ் வேள் ஒருநூல் என்றது யாவரும் விரும்பிப் போற்றத் தக்கதும், இனிய புதுமையுடையதும் ஆகிய அரிய ஓர் தனி நூல் என்றவாறு. வேள் – விருப்பம், உயிர்களுக்கு உறுதிப் பொருளாகக் கருதப்பட்டுள்ள அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கினையும் இனிதாக இஃது உணர்த்தியுள்ளது.
இந்நூலின் இயல்பும் பயனும் இதனால் இனிது புலனாம்.