அம்மா

கூரை ஓலைக்குள்
அவள் தள்ளாடினாளும்
என்னை
அவள் கூறைச் சேலைக்குள்
தாலாட்டினாள்

அவள்
கருவறை
கொண்ட கோயில
தன்
கருவறையில்
கல்லைச் சுமக்காது
பிள்ளை
சுமப்பவள்

தலைக்குமேல்
எண்ணெய் வைக்கிறாளோ
இல்லையோ
என்னை வைத்திருந்தாள்

பூச்சிக் கடியில்
அவள் இருந்து
தன் மூச்சுக்கடியில்
எனை வளர்த்தாள்

இறைவா
மறுபடி நான் மழலையாகி
அமர ஆசை அவள் இடையில்
அந்நேரம் நீ கூட வந்துவிடாதே
இடையில்

கர்ப்பத்தில்
என்னை சிற்பமாய்
செதுக்கியவள்
தன் வாழ்நாளை
எனக்காக ஒதுக்கியவள்

என் அழுகைக்கு
அவள் கண்ணீர் சிந்தியவள்

வாய்மையினும்
தூய்மை தாய்மை

அவள்
நீரை தான் குடித்து
பாலை எமக்கூடும்
அன்னமாய் வாய்த்த அன்னை

என் இரைப்பை
நிறைய
தன் இரைப்பை
நிறுத்தாது உழைத்தவள்

தன் இரைப்பைக்குச்
செல்லாது
கருப்பைக்குச் செல்லும்படி
உண்பவள்

முதியோர் இல்லத்தில்
வைக்காது அன்னையை
நம் உள்ளத்தில் வைப்போம்


அன்னையின் கருவறையில்
எழுதப்பட்ட கவிதை
குழந்தை

பத்து மாதம் சுமந்தவளை
மொத்த
மாதமும் சுமக்க ஆசை

அன்னை மடியில்
உரங்கவேண்டும்
விடியும் வரை அல்ல
மடியும் வரை

எழுதியவர் : குமார் (3-Jan-19, 9:24 pm)
சேர்த்தது : புதுவைக் குமார்
Tanglish : amma
பார்வை : 845

மேலே