எங்க அப்பாஐயா துரையின் கதை
ரொம்ப நாளா நான் நினைத்தது இது .. இப்படி எல்லாம் எழுதி முடிக்கணும். எங்க அப்பா என்கிட்டே சொன்ன குட்டி குட்டி கதைகள் இப்படி நிறைய குட்டி நினைவுகள் சுகமா இருக்கு.
இது எனது டைரி இல்லை. இது ஒரு சிங்கத்தின் கதை. சிங்கம் மாதிரி கர்ஜித்து நடந்து திரிந்த ஒரு மனிதனின் கதை. இது ஒரு காலத்தின் பதிவு.
காட்டில் வேட்டையாடும் சிங்கம் அல்ல வீட்டிலும் தெருவிலும் நிற்கும் எல்லா இடத்திலும் அவரின் கர்ஜிக்கும் குரலாலும் கம்பீரமான உடலாலும் தனித்து தெரியும் துரை சிங்கம். அவர் பெரிய ஆளு எல்லாம் இல்லை . சாதாரண ஒரு மனிதர் தான் . பெயர் செல்ல துரை.
எட்டு பேர் கொண்ட குடும்பத்தின் கடைக்குட்டி பயன் என்பதால் செல்ல துரை என்று வைத்தார்களோ. இல்லையே அவருக்கு அப்பா துரை , சின்ன துரை,தப்பி துரை என்று தம்பிகளும் உண்டு. இத்தனை துரை இருந்தாலும் ஊரில் துரை என்று கூப்பிடுவது இவரைத் தான். அதுவும் ஊர் வழக்கில் அது துரை அல்ல செல்லத்துரை நாடார். இதில் நான் சாதியைக் குறிப்பிடணுமா என்று தெரியவில்லை. ஆனால் தாத்தா பெயர் மரியா வியாகுலம் நாடார் என்று தான் முன்னறையில் தொங்க போட்டிருக்கும் புகைப்படத்தில் எழுதி இருக்கும். நல்ல வேளை எங்க பெயர்களில் இந்த நாடார் ஒட்டிக்கொள்ளவில்லை .
புகைப்படத்தில் தான் அவர் உருவம் பார்த்திருக்கிறேன். அப்படியே மொழுக் கொழுக் குழந்தை மாதிரி முகம் மீசை இருக்காது. வெள்ளை என்றால் அப்படி ஒரு வெள்ளை. குமாஸ்தாவா இருந்தாராம் . அந்த காலத்திலே நல்லா படிச்சிருந்தாரோ என்னவோ. தாத்தாவைப் பற்றி அப்பா பேசும் போதெல்லாம் அப்பா என்று சொன்னதில்லை . பப்பா என்று தான் சொல்லுவார். பப்பா அப்படி இப்படி என்று சொன்னதில்லை பெரிதாக. ஏன் என்றால் அப்பாவின் சிறு பருவத்திலே அவர் தவறி இருக்கிறார். அதுவும் நாற்காலியில் சாய்ந்து இருந்தபடியே இறந்ததால் அது நல்ல மரணம் என்று வேறு சொல்லுவார்கள். கஷ்டப்படாமல் நோய்வாய்படாமல் வலி இல்லாமல் அப்படியே இருந்தது தெரியாமல் மரிப்பதுக்கு எங்க ஊரில் நல்ல மரணம் என்று பெயர். நல்ல மரணம் அடைய என்று சொல்லுவதும் பிராத்தனை கூட இருக்கு.
எது எப்படியோ அந்த கதை எதற்கு. எங்க தாத்தா கதைக்கே வருகிறேன். அப்பா சொல்வாங்க அவங்க பப்பா தின்பண்டம் அதுவும் எங்க அப்பாக்கு பிடிச்ச கேக் வாங்கி குடுப்பாராம் . அதுவும் முடுக்கில (முடுக்கு என்றால் அவங்க வீட்டை சுற்றி இருக்கும் ஒற்றை அடி குறுகலான பாதை . அங்க வைச்சு ஒளிச்சு அவருக்கு முதலிலே ஒண்ணு கொடுப்பாராம். "அந்த முடுக்கை கடப்பதற்குள் சடக்கென்று முழுங்கி விட்டு ஒன்றும் தெரியாதது போல உள்ள வந்து இன்னொன்று வாங்கி திம்பேன்" என்று அப்பா அதை சொல்லும் போது அவருக்கு கேக் நினைவில் இருக்குமா அல்லது அதை வாங்கி தந்த பப்பா நினைவில் இருக்குமா என்று தெரியாது . அவர் முகம் அவ்வளவு பூரித்த சிரிப்பில் பிரகாசிக்கும்.கேக் என்றால் இப்போ நாம சாப்பிடுகிற பிறந்த நாள் கேக் இல்லை. அந்த டீ கடையில் அப்படியே மஞ்சள் நிறத்தில் அப்படியே போட்டு ஒரு கேக் தருவானே அது தான். அவங்க பப்பா வாங்கி தந்தது அவருக்கு நினைவு . இன்று எனது மகனுக்கு நான் அந்த கதையை வேறு மாதிரி சொல்லிக் கொண்டிருக்கிறேன். கதை என்னவோ வேற தான். ஆனா அந்த கேக்கும் அப்பாவை தொலைத்த ஏக்கமும் என்னவோ ஓன்று தான்.
இந்த அப்பாக்கள் எல்லோருக்கும் ஹீரோ தான். ஆனா எங்க அப்பா சூப்பர் ஹீரோ தான். அவர் நலலவரா கெட்டவரா என்று எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு அவர் நடைக்கும் அவர் அடைந்த உயரத்திற்கும் நான் அவரை நினைக்கும் போதெல்லாம் அண்ணாந்து பார்க்கிற உணர்வு தான் வரும். அது எப்படியோ அந்த ஐஞ்சாம் கிளாஸ் வரை படித்திருந்தாலும் அத்தனையும் தெரிந்த அனுபவ மனிதனின் ஐயா துரையின் கதை தான் இது. 1950 ல் பிறந்த அற்புதம் என்று சொன்னால் சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் நான் அதிசயத்த மனிதன் ஐயா துரையின் கதையாக என் நினைவுகளில் பதிந்து கிடப்பது தான் இந்த கதை.
thodarum
இந்த செல்ல துரைக்கு பீட்டர் என்ற அண்ணன் , அப்புறம் செல்வ ராணி தங்கச்சி. இதை அப்பா கூப்பிடுவது செல்ராணி , அப்புறம் அடுத்த தங்கச்சி மேரி சிசிலியம்மாள். அவங்க செல்லப் பெயர் செல்லம். ஆமாங்க செல்ல மாமி என்று தான் கூப்பிடுவோம். ,மேரி போஸ்கோ இந்த பெயரைப் பார்த்தால் பெண் பெயர் போல இருக்கிறதா இல்லை தானே ஆனால் பெண் பெயர் தான். பாஸ்கா என்று கூப்பிடுவாரு.
கதை எப்படி ?