பேரின்பம் பற்ற முயலும் பயனுடையார் புலைநிலையில் துன்படைய நில்லார் - உடல் நிலை, தருமதீபிகை 18
நேரிசை வெண்பா
பெற்ற பிறப்பால் பெறலரும் பேரின்பம்
பற்ற முயலும் பயனுடையார் - மற்றுமோர்
புன்பிறப்பில் ஆழ்த்தும் புலைநிலையில் போராடித்
துன்படைய நில்லார் தொடர்ந்து. 18
- உடல் நிலை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
பெற்றுள்ள இப் பிறவியால் பெறுதற்குரிய பேரின்ப நிலையைப் பெறுகின்ற பேரறிவுடையவர் வேறே சிறுமையான வழிகளில் திரிந்து சீரழியார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
பழி பாவங்கள் விளையும் இழி நெறிகளைப் புலை நிலை என்றது. உடம்பின் பயனை உடன் அடைய முயலும் நயனுடைமை கருதி பயனுடையார் என்றது. நல்ல மனிதப் பிறப்பை அடைந்தவர் தமக்குரிய உறுதி நலனைக் காலமுள்ள பொழுதே கருதிக் கொள்ள வேண்டும். கொள்ளாதொழியின் பொல்லாத் துயரங்களுக்கு ஆளாய்ப் புல்லிய பிறப்பில் ஆழ்ந்து புலையாடிப் போவர்;
அங்ஙனம் ஈனமாயிழிந்து போகாமல் ஞானமாய் உயர்ந்து செல்லுக என்றும், உரிமையுறுபவர் பெருமை பெறுகின்றார் என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்,