பெண்மையின் உயர்வு பற்றி பாரதி----------------------பாரதி பயிலகம் வலைப்பூ

"பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!!"

பெண்மையின் உயர்வுக்கு இப்படி உரக்கக் குரல் கொடுத்தவன் மகாகவி பாரதி! 'பெண் புத்தி பின்புத்தி' என்று நம்மவர் பிதற்றிவந்த காலத்தில் "மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள், கலி அழிப்பது பெண்கள் அறமடா!" என்று வீறுகொண்டெழுந்தவன் மகாகவி பாரதி. இன்று பெண்ணுரிமை இயக்கங்கள் பேசும் சொற்களுக்கு முன்னோடியாக இருந்து முழங்கியவன் பாரதி. "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்!" என்று உறுதி அளிக்கிறான்.

இன்று பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னணியில் இருக்கும் நிலைமைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டி முழங்கிய இருவரில் சுவாமி விவேகானந்தர் ஒருவர், மற்றவர் மகாகவி பாரதியே! எதிர்வரும் நூற்றாண்டில் பெண்கள் நிலைமையை அன்றே கணித்தவன் பாரதி. அவன் சொல்கிறான்: "சாத்திரங்கள் பலபல கற்பராம், சவுரியங்கள் பலபல செய்வராம்; மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்; மூடக் கட்டுக்கள் யாவும் தகர்ப்பராம்; காத்து மானிடர் செய்கை யனைத்தையும் கடவுளர்க்கு இனிதாக சமைப்பராம்; ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்" என்று வருமுன் செய்தியை ஆண்களுக்கு ஓதி வைத்தான் பாரதி.

மகாகவி பாரதி தன் கவிதைகளிலே பெண்மையின் பெருமையைப் போற்றிப் பாடியதோடு நின்றுவிடவில்லை. உண்மையில் அவர்களது முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு பத்திரிகைகளிலும் எழுதி வந்தான். 'மாதர் கல்விக் கணக்கு' என்ற தலைப்பில், பெண்களுக் கென்றே, பெண்களை எழுதவைத்து பாரதி நடத்திய முதல் பத்திரிகையான "சக்கரவர்த்தினி" இதழில் 1906ஆம் ஆண்டில் எழுதுகிறான்: "1901ஆம் வருஷத்தில் பிரசுரிக்கப் பெற்ற சென்சசிலிருந்து மொத்தம் பத்தாயிரம் ஸ்திரீகளுக்கு 94 ஸ்திரீகளே கல்விப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்" என்று தெரிகிறது. இந்தப் பயிற்சியும் அதி சொற்பமானதாகவே இருக்குமென்று நாம் தெரிவிக்க வேண்டுவதில்லை. முதன் மூன்று பாடப் புஸ்தகங்களுக்கு அப்பால் படித்திருக்கும் மாதர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். இவர்களில்கூட கிறிஸ்தவப் பெண்கள் மிகவும் பெருந்தொகையாக இருப்பார்கள்". இப்படி அன்றைய நிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறான்.

காலவோட்டத்தில் நாகரிகம் மாறிக்கொண்டே யிருக்கிறது. மாதர்களுக்கு கல்வி அவசியம் என்று சொல்லி "மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழக்கமிட்ட பாரதி, சும்மா வாயளவில் பெண்கல்வி பற்றி பேசிவிட்டு நிறுத்திக் கொள்பவர் களையும் கடுமையாகச் சாடுகிறான். எதிர்கால மேதைகளை உருவாக்கப் போகிறவர்கள் மாதர்கள்; அதற்கேற்றபடி அவர்களுக்குக் கல்வியறிவினை ஊட்ட வேண்டிய கடமை நமக்கு உண்டு; அர்ஜுனன் போன்ற மாவீரர்களையும், சங்கரர் போன்ற ஞானிகளையும் தோன்றச் செய்யும் பெண்மை அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கலாமா என்று வினா எழுப்புகிறான்.

தான் கல்கத்தா காங்கிரசுக்குச் சென்றபோது அங்கு சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தபோது பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசியதையும் தன் கட்டுரையொன்றில் பாரதி நினைவுகூர்ந்திருக்கிறான். "இந்தியா" பத்திரிகையில், இதற்கென்று ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறான். அதில் அவன் சொன்ன கருத்துக்களின் சுருக்கம்:

"நாகரிகம் பெற்று வரும் ஜாதியாருக்கு முதல் அடையாளம் அவர்கள் ஸ்திரீ ஜனங்களை மதிப்புடன் நடத்துவதேயாகும். ஒருசில எந்திரங்கள் அதிகரித்து, மோட்டார் வண்டிகள் அதிகம் ஓடுவதால் மட்டுமே ஒரு காலம் நாகரிக காலமாகிவிடாது. இகபர ஞானமும், சற்குணங்களும், பரஸ்பர சகாய சிந்தையும் அவற்றால் உண்டாகும் நன்மை மிகுதியுமே நாகரிகமென்று நிலைநாட்டப்படும். இந்த நாகரிக முதிர்ச்சியில் ஸ்திரீகளுக்கு எந்த ஸ்தானம் கொடுக்க வேண்டும் என்பதே நம்முன் உள்ள பிரச்சனை".

"கவர்ன்மெண்ட் பள்ளிக்கூடங்களிலும், வெள்ளையர் பள்ளிக்கூடங்களிலும் நம் கன்னியர்களிலே ஒரு சிறு பகுதியாருக்குக் கொடுக்கப்படும் பயனற்ற கல்வியானது அறியாமையைக் காட்டிலும் நூறு மடங்கு கொடியதாகும். நம்மவர்கள் தாமாகவே இவ்விஷயத்தில் பிரயத்தனங்கள் செய்து ஊருக்கு ஊர் பெண் பாடசாலைகள் ஏற்படுத்தி அவற்றிலேயே முற்றும் சுதேசி முறைமையைத் தழுவிய கல்வி கற்பிக்கச் செய்தல் வேண்டும்".

"பெண்கள் குணமழிந்து போய்விட்டால், பிறகு தேசம் அதோகதி அடைந்து போய்விடும். மாதர்களுக்குக் கல்வி வேண்டுமென்று ஒவ்வொருவரும் மனத்தாலும், வாயினாலும் சொல்லிக்கொண்டு சும்மா இருந்துவிடுவது பேதமையாகும். 'அறிவினால் உணர்ந்த விஷயத்தை செய்கையிலே நடத்தாமல் இருப்பவன் வெறும் குழந்தைக்கு நிகரானவன்' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொல்லுகிறார். மாதர்கள் உதவியின்றி எந்த தேசமும் எந்தவிதமான அபிவிருத்தியும் அடைய முடியாது. ஈசுவரனுக்கே தேவிதான் சக்தி என்று ஆன்மீகவாதிகள் சொல்லும் உண்மைப் பொருளை மறந்துவிடக் கூடாது. பாரத நாடு இப்போது அடைந்திருக்கும் இழிவு நிலையிலிருந்து உன்னதம் பெற வேண்டுமானால், ஆண்கள் மட்டுமே யல்லாமல் பெண்களும் தேசபக்தியிலே சிறந்தவர்களாக வேண்டும். தேசத்தின் எந்தவிதமான பெருங் காரியமும் கைகூடி வரவேண்டு மானால் அதற்கு ஸ்திரீகளின் மனோபலம் இல்லாமல் தீராது. இதனை எழுதுபவனிடம் ஸ்ரீமதி சகோதரி நிவேதிதா தேவி சில கற்பனைகளைக் கூறிவருமிடையே அந்த அம்மை, "ஐயா! மாதர்களை இருட்டிலே தள்ளிவிட்டு, அவர்கள் அறியாமல் நீங்கள் மேலான நிலைமைக்கு வந்து கூட முயல்வது வீண் முயற்சி. அது ஒரு போதும் நடக்க மாட்டாது" என்றார். இந்த வசனத்தை ஒவ்வொரு தேசாபிமானியும் மனத்திலே மதித்துக் கொள்ளும்படி விரும்புகிறோம்" இப்படி எழுதுகிறார் 'இந்தியா' பத்திரிகையின் தலையங்கத்தில் பாரதி.

இன்றைய நிலைமை என்னவென்று, குறிப்பாக கிராமப் புறப் பெண்களின் நிலை என்னவென்பதை ஒவ்வொரு தேசபக்தனும் நினைத்துப் பார்க்க இதுவே சரியான நேரம். நகர்ப்புற பெண்டிர் மிகமிக உயர்ந்த பதவிகளில் இருந்து திறம்பட செயல்பட்டு வருகின்றனர். அரசாங்கத்தின் பல துறைகளில் செயலர்களாகவும், ஆட்சித் தலைவர்களாகவும், விஞ்ஞானிகளாகவும், தலைசிறந்த மருத்துவ நிபுணர்களாகவும், காவல்துறை அதிகாரிகளாகவும், ஆண்கள் மட்டுமே பணிபுரிந்து வந்த ரயில் எஞ்சின் ஓட்டுனர்களாகவும், விமான ஓட்டிகளாகவும் இன்னும் பற்பல நிலைகளில் தங்களை ஆணுக்குச் சமானமாக, இல்லை இல்லை, பலவிதங்களில் அவர்களினும் மேம்பட்டவர்களாக நிலை கொண்டிருக்கின்றனர். படிக்கும் காலத்தில் படிப்பில் கவனமின்றி தட்டுத்தடுமாறி தேர்வில் தேறி ஏதோவொரு பணியில் சேர்ந்த இடத்தில் இவர்களது மேலதிகாரிகளாகத் தங்களோடு படித்த பெண்கள் இருப்பதையும் இன்றைய சூழலில் பலர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பெருமைப்படத் தக்க நிலைமை இது. மகாகவி பாரதி இத்தகைய சமூக அந்தஸ்த்தைத்தான் பெண்கள் அடைய வேண்டுமென கனவு கண்டு கொண்டிருந்தான்.

இப்படி ஆக்க பூர்வமான செயல்களை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கையில் எங்கோ ஆயிரத்தில், அல்ல அல்ல, லட்சத்தில் ஒரு பெண் ஒரு ஆணுடன் மோட்டார் பைக்கில் வந்து நடந்து சென்ற ஊனமுற்ற ஒரு பெண்ணின் கழுத்து சங்கிலியைப் பறித்த சம்பவத்தையும் நான் வசிக்கும் பகுதியில் நடந்தது என்பதையும் மன வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த அளவுக்குத் துணிந்துவிட்ட பெண்களின் எண்ணிக்கை இல்லாமல் இருப்பதே சரியான சமூக சூழல் என நினைக்கிறேன்.

நகர்ப்புற பெண்களின் மேம்பாடு குறித்து பெருமைக்குரிய வகையில் நாம் கண்டுகொண்டிருக்கும் அதே நேரத்தில், கிராமபுறத்தில் உழைப்பை மட்டுமே நம்பிக்கொண்டு, நாணயமாகப் பிழைக்க விரும்பும் சில பெண்மணிகள், கிராமப்புற வயல்வெளிகளில் விளையும் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் இவைகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்கிக் கொண்டு, கூடையில் வைத்து மக்கள் கூடுமிடங்களில் கொண்டுவந்து விற்று, அதில் கிடைக்கும் ஐம்பதோ, நூறோ பணத்துக்காக நாள் முழுதும் உழைக்கிறார்களே, அந்தப் பெண்மணிகளுக்கும், நகர்ப்புறங்களில் அதிகார மையங்களிலும், தொழில்நுட்பத் துறைகளிலும் பணியாற்றும் பெண்களுக்குக் கொடுக்கும் அதே மரியாதையை மக்கள் கொடுக்க வேண்டாமா? அவர்களும் உழைப்பவர்கள்தானே! ஒரு ஜனநாயக நாட்டில் உழைக்கும் பெண்கள் அனைவரும் மக்கள் கண்ணோட்டத்தில் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். பட்டணத்துப் பெண்களுக்குக் கார் கதவைத் திறந்து விட நான் முந்தி நீ முந்தி என்று போட்டிபோடும் ஆண் வர்க்கம், கூடைகளைத் தலையிலேந்திக் கொண்டு, வெயில், மழை பாராமல் நம் உணவுத் தேவைகளுக்காக பொருட்களைக் கொண்டு வந்து நாணயமாக வியாபாரம் செய்யும் பெண்களையும் நாம் என்று சமமாக மதிக்கிறோமோ, அன்றுதான் ஒட்டுமொத்த பெண்களும் முன்னேறியாதாக, பாரதியின் பார்வையில் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத மனம் ஆகியவை கொண்டவர்களாகக் கருத முடியும். இந்தியா முழுவதும், நகரங்கள், கிராமங்கள், மலைப்பிரதேசங்கள் இவை அத்தனை இடங்களிலும் பெண்களின் முன்னேற்றம் ஒரே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டியது ஆண்மக்களின் கடமை. பாரதியின் கனவு நிறைவேறிவிட்டதா? இல்லையென்றால் அவை நிறைவேற நம்முடைய பங்களிப்பு என்ன என்பதை இந்த நேரத்தில் சிந்தனை செய்வோம்.தஞ்சாவூரான்

எழுதியவர் : (14-Jan-19, 6:24 pm)
பார்வை : 90

மேலே