கணக்கு 2

கணக்கு

மனக்கணக்கும்
திரு மணக்கணக்கும்
ஒன்றே
இரண்டும் தப்பாகவே
முடிகிறது சிலருக்கு

மனக்கணக்கு
கழுத்தின் கீழே போடப்படுகிறது
மணக்கணக்கு
கழுத்திலேயே போடப்படுகிறது

அங்கே ஒன்றும் ஒன்றும் இரண்டு
இங்கே ஒன்றும் ஒன்றும் மூன்று

வீரப்பன்
மனக் கணக்கு தப்பானால்
வெடிப்பதில்லை புதர் கண்ணி
வீண் அப்பன்
மணக் கணக்கு தப்பானால்
இவள் ஆகிறாள் முதிர்கன்னி

அது மனதில் அறிவோடு போடுவது
இது மனையில் அரிவையோடு
போடுவது

120 கோடி இந்திய குடிமக்களின் மொத்தக் கணக்கு
அதில்
60 கோடி குடிக்கும் மக்களின் கணக்கு

ஆண்டவன் கணக்கை
குறைசொல்பவன்
ஆள் என்பவன்
ஆண்டவன்
கணக்கை குறை சொல்பவன்
ஆள்கின்றவன்

மகாசூல் வேண்டி கணக்கிட்டு
மகசூல் ஏதும் கிடைக்காது
தன் மகசூல் கூட
நடத்த முடியாது தவிப்பவன்
விவசாயி

அன்பு நட்பு கூட்டு
அமைதி திட்டம் வகு
ஆயுதம் பகை கழி
அறிவு புன்னகை பெருக்கு

வயல் கூட்டியது
புயல் கழித்து
அரசு நிதி
அளிக்காமல்
அமைதி வகுத்தது
அது
விவசாயி கண்ணீர்
பெருக்கியது

கால் வயிறு நிறைய
கால்வாய் நிறையுமா
உழவனின் கணக்கு

தொழிற்சாலையில்
உழைப்பு கூட்டப்படுகிறது
உரிமைக் கழிக்கப்படுகிறது
உற்பத்தி பெருக்கப்படுகிறது
ஊதியம் மட்டும் குறைவாய் வகுக்கப்படுகிறது
இதன் ஈவு வறுமை
இதன் மீதி பசி

அரிசி எவ்வளவு போடுவார்
இது கடை மனிதனின்
கணக்கு
அரிசியில் எவ்வளவு போடலாம்
இது ரேஷன் கடை மனிதனின்
கணக்கு

கணக்கு வாத்தியார்
கணக்கு செய்வதால்
தப்பாகிப் போவது
சமூகத்தின் கணக்கு

ஆண் பெண்ணிடம்
போடுவது காதல் கணக்கு
ஏழை போடுவது சாதக் கணக்கு
கோழை போடுவது சாகக் கணக்கு

கொள்கை மறந்து
கொள்ளை அடிக்க
போடும் கணக்கு கூட்டணி
அவனோடு வைக்காதே கூட்டு நீ
நல்லோரை ஒன்றாக கூட்டு நீ
நேர்மையாய் இருக்கச் சொல் அரசியல் வாதியை கூட்டு நீ
பணம் வாங்கி
அவனுக்கு போடாதே ஒட்டு நீ
அவனுக்குப் பிடித்திருக்கும்
பணப்பேயை உன் சுட்டு விரலால் ஒட்டு நீ

வாழ்க்கையில் போடு
கணக்கு
பிறகு உனக்கு
ஏன் வரப்போகிறது
பிணக்கு

கவிஞர் புதுவை குமார்

எழுதியவர் : புதுவை குமார் (29-Jan-19, 9:57 pm)
பார்வை : 113

மேலே