சிறகடித்துப் பறக்கும் வண்ணத்துப் பூச்சிகள் சிறுகதை

முழு வெண்மதி நீள்வீதி நீலவானில் மெல்ல எட்டிப் பார்க்கத் துவங்கியது. தென்றல் மெல்ல வருடும் அந்த இரவுப் பொழுதிலே ஏட்டிலே எதோ தீட்டிய வண்ணம் ஒய்யாரமாய் சாய்ந்திருந்தாள் அல்லி விழி மெல்ல மலரப் புன்னகை அரும்புகளைப் பொழிந்தவண்ணம் பொற்கொடி.
அருகில் வந்து அவளை அள்ளி அணைத்த அன்புத் தங்கைப் பூங்குழலி சோதரி ஏட்டில் எதனைத் தீட்டிக் கொண்டிருக்கிறாய்? அத்தான் பூமிநாதனின் எழிலுருவத்தையா? மெல்லக் கிசுகிசுத்தாள் அவள் காதருகே பூங்குழலி. சீ..போடி... உனக்கு வேறு வேலையில்லை? எப்பொழுதும் அத்தானின் எண்ணத்தில் மிதப்பவள் நீதானடி என்றாள் செல்லமாக.
நாளை நம் கல்லூரியின் ஓவியப்போட்டிக்கான இயற்கை எழிலோவியத்தை தான் தீட்டிக் கொண்டிருக்கிறேன். இதோபார்! தான் தீட்டியிருந்த அந்த ஓவியத்தைக் காட்டியதும் மெல்ல அகன்று விரிந்தது பூங்குழலியின் கண்கள் திகைப்பில்.
அடேயப்பா! உன் கைவண்ணத்தில் இந்த இயற்கை எழில் காட்சி உயிர் பெற்று எழுந்தது போன்றல்லவா உள்ளது? அதோ பார் ஆர்ப்பரித்து ரீங்கரிக்கும் வண்டுகள்! அடேயப்பா! மூடுபனியிலும் இந்த மங்கை எத்தனை அழகான வண்ணக்கோலத்தை வரைந்துகொண்டிருக்கிறாள். அங்கே பார்! அந்த எளிய மலர்க்கொடி தன் பாரம் தாங்காமல் தாம் கீழே விழுந்துவிடுவோம் என்ற எண்ணம் சிறிதும் இன்றி அந்த வானரம் அக்கொடியில் எத்தனை ஒய்யாரமாய் ஊஞ்சலாடுகிறதே! படகு சவாரியில் பயணிக்கத் துவங்கிவிட்டால் வீடாவது வாசலாவது? எத்தனை குதூகலிப்புடன் இயற்கை சாரலைத் தீண்டியவாறே உல்லாசமாய் பவனிவரும் இந்த இளம் ஜோடிகள்! அவள் முகத்தில் தான் எத்தனை வெட்கம்! மறுபுறம் அது என்ன ஒட்டி உலர்ந்த உடம்பில் ஒருமுழம் துண்டு இடுப்பில் தவழ, பாரம் தாங்கா அந்த முதியவரின் தலையில் எத்தனை விறகுச்சுமைகள்? இன்னும்.... இன்னும்... இன்னும்.... சோதரி! நிச்சயம் நாளை வெற்றி உனக்குத்தான் அகமகிழ மொழிந்தாள் பூங்குழலி அக்காளின் ஓவியத்தில் தன்னை மறந்தவளாய்.
போதும்.... போதும்... எப்பொழுதும் உன் புகழாறமே எனக்கு பெருத்த உற்சாகம். பூங்குழலி உண்மையாகவே இது அத்தனை அழகாக உள்ளதா? ஆம் சோதரி! நீ வேண்டுமானல் பாரேன் கின்னஸ் புத்தகத்தில் உன் ஓவியம் முதலிடத்தில் பிரசுரிக்கப் படுவதை நீ பார்க்கத்தான் போகிறாய்.
தாய்முகம் காணா சேயென நடுவரின் போட்டி முடிவிற்காக தவித்த வண்ணம் காத்திருந்தாள் பொற்கொடி. அரங்கமெங்கும் ஒருவித சலசப்பு. ஏதோ மாவட்ட ஆட்சியர் தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர் போல் அனைவரும் ஒருவித தவிப்புடன் தான் காணப்பட்டனர். ஏனென்றால் போட்டி அறிவிப்பு அத்தகையது.
இந்த ஆண்டு வழக்கமான பரிசளிப்பு விழாவுடன், சிறந்த ஓவியம் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும். அதோடு சிறந்த படைப்பிற்காக பத்மபூஷண் விருதும் வழங்க இருக்கிறோம். மேலும் முதல் மூன்று சிறந்த படைப்பாளிகளுக்கு அவர்கள் எதுவரை கல்வி பயில ஆசைப்படுகின்றனரோ, எத்தகைய பாடம் எடுத்துப் பயில விரும்புகின்றனரோ. அவை அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் தகுந்த பணி நியமனமும் வழங்கப்படும். அதோடு பெண் படைப்பாளராயின் அவர்களுக்கு விழாக்குழுவின் சார்பில் அவர்கள் எதிர்கால நலன் கருதி சிறந்த வரனையும் தேர்ந்தெடுத்து மிக விமர்சையாக திருமண வைபவமும் நடத்தி வைக்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு.
கேட்க வேண்டுமா? வறுமையால் வாடும் தன் பெற்றோர்களின் துயர் யாவும் தன்னால் சிறிதளவேனும் குறையாதா? என்ற ஏக்கப் பெருமூச்சே பொற்கொடியை அத்தகைய எழில் மிகு வண்ண ஓவியத்தைச் சித்தரிக்கச் செய்தது.
இதோ அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த போட்டி முடிவுகள். அறிவித்தார் தேர்வாளர். கதிர்வேல் மூன்றாம் இடம்...... முத்தழகி இரண்டாம் இடம்....... வியர்த்துக்கொட்டியது பொற்கொடிக்கு..... அவையெங்கும் ஒரே கரகோஷம் விண்ணை முட்ட ஆ.......ம் பூங்கொடிதான் முதலிடத்தைப் பெற்றிருந்தாள்.
அன்புமுத்தங்களால் அவளை அள்ளிப் பருகினர் அவள் பெற்றோர் செண்பகவடிவும், செந்தாமரைக் கண்ணனும். பூங்குழலியின் மகிழ்ச்சியக் கூறவும் வேண்டுமா?

எழுதியவர் : ஸ்ரீ விஜயலக்‌ஷ்மி (30-Jan-19, 12:07 pm)
பார்வை : 172

மேலே