உனக்கான இரவுகளில்

எப்பொழுதும் போல்
இப்பொழுதெல்லாம் இருப்பதில்லை
என் இரவுகள்

நிலவு
விண்மீன்
சில துண்டு மேகங்கள்
இவைகள் தான் இது வரையில் இரவுகளில்

இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை

படுத்ததும் உறங்கி பழகியவனின்
கண்களில் கலவரம் மட்டுமே இப்பொழுது

இரவு பகலென மாறிடும் நொடியில்
என் தனிமையின் தவிப்புகள்

நிலவு கூட சூரியனாய்
அனல் கூட்டுகிறது தினமும்

விண்மீன்களின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை
இப்பொழுதெல்லாம் ரசிக்க முடிவதே இல்லை

சுகமான தென்றல் கூட
பெரும் புயலாய் மோதி உடைக்கிறது என்னை

இதுவரை இரவினை காரிருளாய் மட்டும் கண்டவன்
இப்பொழுது கலர் கலரான இரவுகளால்
கதிகலங்கி நிற்கிறேன்

முன்பெல்லாம் கனவுகளில்

அம்மா, அப்பா, நண்பன்
கடவுள், பாம்பு, இவை தவிர
இறந்து போன தாத்தா பாட்டி
இவர்களே வந்து போவார்கள்

இப்பொழுதெல்லாம் உன்னை தவிர
யாருமே கனவுகளில் வருவதில்லை
என் முழு இரவுகளையும்
ஆக்கிரமித்து கொண்டவள் நீ
என் கனவுகள் உட்பட

இது வரையில் வெறும் பஞ்சு மூட்டையாய்
இருந்த என் தலயணைகளில்
இப்பொழுதெல்லாம் அவ்வபொழுது
தெரியும் உன் முகம்
வெட்கம் விட்டு சொல்கிறேன்
நீ என நினைத்து தலையணைக்கு
முத்தமிட்டு ஏமாறுவதை தொடரத்தான் செய்கிறேன்

காலை உன்னை காண வேண்டி
விரைந்து எழ அலாரம் வைத்து
விடிய விடிய விழித்திருந்து
அலாரத்தின் நிமிடங்களையும்
ரசித்து கொண்டிருப்பதும்
புது சுகமெனவே படுகிறது இப்பொழுதெல்லாம்

நீ அழைப்பாய் அழைப்பாய் என
யாரும் அழைக்காத கைபேசியை
பொம்மை கடையை விடாமல்
வெரித்து பார்க்கும் குழந்தை போல
பார்த்து கொண்டேதான் இருக்கிறேன்
உன் அழைப்பிற்காய்

வேலை இல்லாதவன்
நோயாளி
இரவு காவலாளி
போன்றோரின் இரவுகள் போலவே
இப்பொழுதெல்லாம் கடினமாகி போகிறது
என் இரவுகள்

உனக்கான இரவுகளில் என
தலைப்பிட்டு என் இரவுகளை
பற்றி எழுதுவதை நினைத்து
நீ சிரிப்பதும் எனக்கு புரியாமல் இல்லை

என்ன செய்ய
முதன் முறை இரவை களவு கொடுத்து நிற்கிறேன்
உன்னிடம்

ஆம் எனக்கு தெரிந்தவரை
இரவு
உரக்கம்
கனவு
என அனைத்தையும் என்னிடமிருந்து
இவ்வளவு சாமார்த்தியமாய்
ஒரே ஒரு புன்னகையிலும்
சிறு சிறு ஓரபார்வைகளாலும்
கொள்ளையடித்து சென்றவள்
யாருமில்லை
உன்னை போல . . .

இப்படித்தான் . . .

ஏக்கத்துடனும்
தவிப்புடனும்
கனவுகளுடனும்
புலம்பல்களுடனும்
விழித்து கொண்டே
வந்து செல்கிறது
எல்லா நாளும்
உனக்கான இரவுகள் . . . .

எழுதியவர் : ந.சத்யா (6-Feb-19, 12:27 pm)
சேர்த்தது : சத்யா
பார்வை : 447

மேலே