வானம் வசப்படும்-----------------நூல் விமர்சனங்கள்
பிரபஞ்சனின் படைப்புகளில் நான் வசித்த முதல் நாவல் வானம் வசப்படும். 1740-50ல் புதுச்சேரி பிரெஞ்ச்சுக்காரர்களின் கையில் இருந்த சமயத்தில் இந்நாவலின் களம் அமைந்துள்ளது. புதுச்சேரியின் கவர்னரான (இவரை குவர்னர் என்றுதான் எழுதுகிறார் பிரபஞ்சன். ஏன் என்று தெரியவில்லை) துய்ப்ளெக்ஸ் மற்றும் அவரின் சட்ட ஆலோசகராகவும், (கிட்டத்தட்ட) அமைச்சராகவும் (இப்பதவியை துபாஷ் என்று நாவலில் எழுத்தாளர் குறிப்பிடுகிறார்) இருக்கும் ஆனந்தரங்கப் பிள்ளை இருவருடைய உறவைப் பற்றி இந்நாவல் விரிவாக பல சம்பவங்களைக் கொண்டு சித்தரிக்கிறது.
நமக்குத் தெரிந்த சரித்திரத்தின் படி துய்ப்ளெக்ஸ் ராபர்ட் கிளைவின் எதிரி என்பதும் புதுச்சேரியில் பிரெஞ்சு அரசை ஸ்தாபிப்பதற்கு முக்கிய காரணமாய் இருந்தவர் என்பதும் தெளிவு. இந்திய சிற்றரசர்களுடன் இவர் கொண்ட நிலையான உறவும், ஹைதர் அலியுடன் ஏற்பட்ட நட்பும் இவரது ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்தியதாகவும் அது பிரித்தானியர்களை கலங்கடித்தாகவும் வரலாற்றில் கூறப்படுகிறது. இந்த ராஜதந்திரங்களுக்கு பின்னே ஆனந்தரங்கப் பிள்ளையின் பெரும்பங்கு இருந்தது என்பதை நிறுவுவதே இப்படைப்பின் முக்கிய குறிக்கோள்.
"துய்ப்ளேக்ஸுக்கும் அவருக்கு பின்னரும் புதுச்சேரி அரசின் துபாஷாக இருந்த தமிழர் ஆனந்தரங்கப் பிள்ளை, குவர்னருக்கு அடுத்த அந்தஸ்த்தில் இருந்த பெரிய அதிகாரி. தமிழ் இலக்கிய நேயர். புலவர்களை ஆதரித்த பிரபு. இது அன்று அவரது பெருமை. தம் காலத்து அரசியல், சமூக நிகழ்ச்சிகளை 'டயரி'யாகச் சுமார் 25 வருஷ காலத்துக்கு எழுதி வைத்துச் சென்றதே அவரது பெருமை. 18ம் நூற்றாண்டு வெளிச்சம் பெற்றது, இந்த ஆனந்தரங்கப் பிள்ளையாலும், அவருக்கு அடுத்த வீரா நாயக்கராலுமே, ஆகும்." என்று முன்னுரையில் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார். இந்த முன்னுரையிலேயே இது ஆனந்த ரங்கரின் கீர்த்தியையும், சாதுரியத்தையும் துதிபாடும் படைப்பாக இருக்கக் கூடும் என்று நம்மால் ஊகிக்க முடிகிறது.
நாவலின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆனந்தரங்கரே அதிகமாகத் தெரிகிறார். கடினமான அரசியல் சிக்கல்களை தன அறிவுத்திறனால் தீர்த்து வைக்கிறார். துபாஷ் என்ற தனது பொறுப்புணர்ந்து, நீதி தவறாமல் நெறி வழுவாமல் குவர்னர் துய்ப்ளெக்ஸ்க்கு பணி புரிகிறார். இந்த ஒற்றை வரியை உணர்த்துவதற்காக பல்வேறு தனிப்பட்ட சம்பவங்கள் நாவலின் பல்வேறு இடங்களில் குறிப்பிடப் படுகிறது. சில இடங்களில் இது அலுப்பு தட்டவும் செய்கிறது. இது அத்தனைக்கும் அடித்தளமாக இருப்பது அவர் எழுதிய டயரிக் குறிப்புகள்.
டயரிக் குறிப்புகள் ஒரு தனி மனிதனின் பார்வையில் எழுதப்பட்டாலும் அது ஒரு வரலாற்று ஆவணமாக ஆவதை நாம் பல முறை கண்டிருக்கிறோம். அதற்கு உதாரணமாக ஆன் பிரான்க், சாமுவேல் பீப்ஸ், சார்லஸ் டார்வின் போன்ற பலரின் குறிப்புகளை கூறலாம். அவ்வகையில் வைக்கப் பட வேண்டிய முக்கிய ஆவணமாக ஆனந்த ரங்கரின் டயரி இருக்கக் கடவது. அக்கால பண்பாட்டு சூழலையும், மக்களின் நடத்தைகளையும் துல்லியமாக விவரணை செய்ததற்காகவே இப்படைப்பை நாம் படிக்கலாம்.
அக்காலத்தில் பிரஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் மதமாற்றம் எந்த அளவு மக்களின் மேல் திணிக்கப் பட்டது என்பதை பல இடங்களில் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்து மதத்தில் ஜாதி பேதங்கள் இருப்பதை காரணம் காட்டி விளிம்பு நிலை மக்களை கிறித்தவத்திற்கு மத மாற்றம் செய்ய விரும்பும் பிரஞ்சு பாதிரிகளையும், ஆனால் அதே போல் மதம் மாறிய உயர் ஜாதிக்காரர்கள் கிறித்தவத்திலும் ஜாதி பேதங்களை கொண்டு வந்ததையும் பல இடங்களில் இப்படைப்பில் காண முடிகிறது. இது ஒரு காலத்தின் போக்காக, வழக்காக நாம் கருத வேண்டும்.
குவர்னரின் மனைவியான ழான் (இதை படித்தாலே எரிச்சல் வருகிறது. அவள் பெயர் ஜ்ஷான் என்ற ரீதியில் சொல்லப் பட வேண்டியது. அனாவசியமான ஒரு "ழ"கரத்தை எப்போதும் நுழைத்து விடுகிறார்கள்) பிள்ளைக்கு எதிராக செயல்படுகிறார். அவள்தான் இந்தக் கதையின் வில்லி என்று பொருள் படுத்துக் கொள்ளலாம். ழானின் கொள்கை கிறித்தவத்தை இந்தியர்களிடம் பரப்புவது. கிறித்தவர்களுக்கு மட்டுமே அரசு ரீதியில் சலுகைகளும், கௌரவங்களும் தரப்பட வேண்டும் என்பது. அதற்காகவே இவள் ஒரு தனி அரசாங்கத்தை நடத்துகிறாள் சில அடிப்பொடிகளைக் கொண்டு.
நாவலின் பல இடங்களில் ழானை எல்லா கதாபாத்திரங்களும் சரமாரியாக ஏசுகிறது. தங்களுக்கு நேரும் துன்பங்கள் அனைத்திற்கும் ழான் தான் காரணம் என்றும் அவளின் பேச்சைக் கேட்டுதான் குவர்னர் ஆடுகிறார் என்றும் மக்கள் அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள். அதுவுமல்லாது எப்போதும் அவளை "முண்டை" என்று எல்லோரும் திட்டிக் கொண்டே இருக்கின்றனர். அந்த அளவிற்கு ஒரு காழ்ப்பு அவள் மேல் இருப்பதாக நாவலில் கூறப் படுகிறது.
இவை அனைத்தும் பிள்ளையின் டயரி குறிப்பிலிருந்து எடுக்கப்பட்டது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனந்த ரங்கர் ஒரு உயர் ஜாதி இந்து. யாதவர்கள் என்று அழைக்கப் படும் வைணவ மரபை சார்ந்தவர். செல்வந்தர். அவர் குடும்பமே செல்வ செழிப்புடன் இருந்த குடும்பம். பரம்பரை பரம்பரையாக அரசாங்க துபாஷ் வேலை செய்து வருபவர்கள். அவ்வகையில் அவரது டயரியில் குறிப்பிட்டுள்ள சம்பவங்களும், அது கூறப்பட்டுள்ள தொனியும் அக்காலத்திய மனிதரின் ஒரு மன நிலை நின்று காண வேண்டும். மத மாற்றத்தின் மேல் அவருக்கு இருந்திருக்கக் கூடிய இயல்பான துவேஷமே அதில் பதிவாகியிருக்க முடியும் என்பது என் துணிபு.
அதேபோல் பெண்கள் வீட்டு வேலை செய்து கொண்டு கணவனுக்கு அனுங்கிப் போவதையே விரும்பும் ஒரு மனிதரால் ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்க விழையும் ஒரு பெண் திமிர் பிடித்தவளாகவும் "முண்டை"யாகவும் தெரியக் கூடும். இதுதான் பிள்ளைக்கு ழானின் மேல் ஏற்படும் ஒரு காழ்ப்புணர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கக் கூடும். செல்வ செழிப்புள்ள ஒரு மனிதர், மேன்மை பொருந்திய தியாகச் செம்மலாக மட்டுமே இருந்திருக்கக் கூடும் என்பதும் ஏற்புடையதாக இல்லை. ஆனந்த ரங்கரின் மறுபக்கம் என்ன என்பது நமக்கு தெரியாமலேயே இருக்கிறது. நாவலும் அவருக்கு நாயகன் அந்தஸ்தை கொடுத்து உயர்த்திக் கொண்டே இருக்கிறது. ஒரே ஒரு இடத்தைத் தவிர. வேதபுரீஸ்வரர் கோவில் இடிக்கப் படும்போது மட்டுமே ஆனந்த ரங்கரின் வைணவ சார்பு பற்றிய கேள்வி எழுகிறது. ஒற்றை வரி மட்டுமே. அதற்கு மேல் அதை பெரிது படுத்தவில்லை எழுத்தாளர்.
வானம் வசப்படும் என்ற படைப்பு ஆனந்த ரங்கப் பிள்ளையின் டயரிக் குறிப்பை நகல் எடுத்தார் போல் அமைந்திருக்கிறது. தனித் தனியாக தொங்கிக் கொண்டிருக்கும் சம்பவங்களும், இடையிடையே புகுத்தப் படும் துணுக்குச் செய்திகள் போன்ற கதைகளும் நமக்கு இதையே மீண்டும் உணர்த்துகிறது. முக்கியமாக எவ்வொரு (பின் நவீனத்துவமல்லாத) நாவலுக்கும் உண்டான ஒரு மையக் கரு இந்நாவலில் இல்லை. சீரான அமைப்பின் மூலம் ஒரு புள்ளியை நோக்கிக் குவியாது எங்கெங்கோ சிதறிக் கொண்டே இருக்கிறது. கூடவே நமது கவனத்தையும் சிதறடிக்கிறது.
நாவலில் குறிப்பிடும் படி எந்த ஒரு உச்ச கட்டமோ, முடிவோ இல்லை. முக்கியமாக ராபர்ட் கிளைவ் வருகின்ற இடங்கள் நாவலின் உச்சமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வந்த வேகத்தில் கிளைவ் மறைந்து போய் வேறொரு சம்பவத்திற்குள் நாம் போய் விடுகிறோம். ஒரு அடிப்படை கதைக் கட்டு கொண்டு அமைந்திருந்தால் இந்த நாவல் படிக்க மேலும் ஏதுவாகவும், ஏன், அதி சுவாரசியமாகவும் இருந்திருக்கும்.
மொழி சார்ந்த எந்த ஒரு அழகோ, நுண்ணுணர்வோ இந்த நாவலில் இல்லை. எந்த ஒரு கதாபாத்திரத்தின் அக உணர்வோ, சிந்தனை ஓட்டமோ நாவலில் சித்தரிக்கப் படவில்லை. ஏட்டில் வெறும் எழுத்துக்களாய் இருக்கிறார்கள். இதுதான் இந்நாவலுக்காக எடுத்துக் கொண்ட பிரத்யேக மொழிபா என்பது தெளிவாக இல்லை. இருப்பினும் எவ்வொரு நுண்ணுணர்வும் காணக் கிடைக்காதது வருத்தத்திற்குரியது. ஆனந்த ரங்கரின் டயரியை அப்படியே நவீனத் தமிழில் மீள் பதிவு செய்தது போல் உள்ளது.
வரலாறும் மாற்று வரலாறும் எவ்வொரு சூழலுக்கும் அதி முக்கியம் என்பது நமக்கு நன்றாக தெரிந்த ஒன்றே. வரலாற்றுக் குறிப்புகளாய் விளங்கக் கூடிய படைப்புகளின் மூலம் ஒரு தொலைந்து போன சமூகத்தின் வாழ்கை முறை, அற நெறிகள், கலாச்சார குறியீடுகள் போன்றவற்றை தெரிந்து கொள்ள முடியும். சமூகத்தில் மனிதர்களாய் நாம் அடைந்திருக்கும் (முழுவதாக அடைந்திருக்கிறோமா என்பது சந்தேகமே) பரிணாம முதிர்ச்சியை வரலாற்றை பின்னோக்கி பார்க்கும்போதே உணர முடிகிறது. அவ்வகையில் வானம் வசப்படும், நாவலுக்கு உண்டான அமைப்போ இலக்கியத்திற்கு உண்டான நுண்ணுணர்வோ இல்லாவிடிலும், நம் வரலாற்றின் ஒரு பக்கத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் முக்கியமான படைப்பாக கருத வேண்டும்.
---------------------------------------------------------------------------------
.ஆறாயிரம் மைல்களைக் கடந்து இங்கு வந்து சேர்ந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலே பிறந்த தமிழனுக்கும் அல்லது இன்னொரு இனத்-தானுக்கும் மனித சுபாவம் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கிறது என்று உடைத்துப் பார்ப்பது எனக்கு சுவாரஸ்யம் தருகிறது. அதிலும் இரண்டு நூற்றாண்டுக்கு முந்தைய மனிதர்கள் எப்படிச் சிந்தித்தார்கள், செயல்பட்டார்கள், அவர்களின் மனித சுபாவம் எப்படிச் சுழித்துக்-கொண்டது என்று பார்ப்பது கூடுதல் சுவாரஸ்ய-மாக எனக்கு இருந்தது.
நடந்ததைத் திரும்பிப் பார்ப்பது மட்டும் வரலாறு அல்லவே. நடந்த நிகழ்ச்சிகளை இயக்கிய மனிதர்கள் என் காலத்து மனிதர்-களிடமும் பேசு-வதற்கு நிறைய வைத்திருக்-கிறார்-கள். அவர்களின் மொழி எனக்குக் கைவந்திருக்-கிறது. ஆகவே இந்தத் தலைமுறைக்கு அதைச் சொல்ல எனக்கு ஏற்பட்ட விருப்பமே இந்தக் கதையாயிற்று.
-------------------------------------------------------------------------