பிரதமன் சிறுகதைத்தொகுப்பு--------------------------நூல், ------முன்னுரை

சிறு தருணங்கள்
[நற்றிணை வெளியிடாக வந்திருக்கும் பிரதமன் சிறுகதைத் தொகுதிக்கான முன்னுரை]

வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணத்திலும் சிறுகதைகள் எழுதுவது எனக்குத் தேவையாக இருக்கிறது. இது அந்தப் பெருமொழிபின் வெளியில் இருந்து அகன்று எனக்கான சிறிய உலகை, நான் வாழும் அன்றாடத்தின் சிறுதருணங்களை உருவாக்கிக்கொள்வதற்காக. இங்கே நான் என் சிறுதூண்டிலில் சிக்கும் சிறிய மீன்களை எடுத்துக்கொள்கிறேன். இவற்றை எழுதிய எல்லா கணங்களும் அரியவை, ஆழத்தில் நலுங்கிய நிறைவின்மை ஒன்றை நிகர்செய்துகொண்டவை.

அதேசமயம் இவையனைத்துமே வெண்முரசுக்கான எதிர்வினைகளும்கூட. அயினிப்புளிக்கறி போல எந்த விதமான பெருமைகளும் தனித்தன்மைகளும் இல்லாத சாதாரணமனிதர்களின் சாதாரணத் தருணங்களின் இனிமையை எழுதும்போது நான் மகாபாரதத்தின் மாமனிதர்களின் பெருந்தருணங்களின் ஓங்கிய துயரையும் இனிமையையும் நிகர்செய்கிறேன். ஆகவே இவை எனக்கு அணுக்கமானவை. வாசகர்களுக்கும் அவ்வாறே இருக்கும் என நினைக்கிறேன்.

இத்தொகுதியை என் உள்ளத்திற்கு இனியவரான வண்ணதாசனுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.

ஜெ

எழுதியவர் : (7-Feb-19, 2:02 am)
பார்வை : 37

மேலே