காண்பதெல்லாம் காதலடி
காதல்
அத்தனை எளிதாய் கிடைப்பதில்லை
எவருக்கும்
அத்தனை எளிதாய் நிலைப்பதில்லை
எவருக்கும்
அத்தனை எளிதாய் திளைப்பதில்லை
எவரும்
காதல்
ஒற்றைச் சொல்லில் ஓர் உலகம்
ஒற்றைச் சொல்லில் ஈருயிர்
ஒற்றைச் சொல்லில் பல நினைவுகள்
காதல்
செய்து தான் பார்ப்போமெனச்
செய்ய முடியாத செயல் அது
செய்ய இயலாத அரியது அது
ஒரு முறையேனும் காதலிக்காமல்
ஒருவரும் இல்லை காதல் மனங்களில்
ஒன்றோடொன்றாய் ஒவ்வொன்றாய்
ஆட்கொள்ளும் ஆட்கொல்லி நோய்
அத்துணை இயல்பாய்
அத்துணை மிருதுவாய்
அத்துணை எளிதாய்
வழியில் சிரிக்கும் குழந்தைக்கு பதிலளிக்க
சிரிப்பதைப் போல
காலைச் சுற்றும் நாய்க்குட்டியின் மீது
எழும் அன்பைப் போல
கண்முன்னே கால் இடறி விழப்போகும்
ஒருவரைப் பார்க்கையில் ஏற்படும்
ஒரு நொடிப் பதற்றம் போல
அன்றலர்ந்த மலரில் இதழைத் தொடுகையில்
ஏற்படும் சிறு பரவசம் போல
நிகழ்ந்து விடுகிறது
அத்தனைப் பெரியதொன்றுமில்லை ஆனால்
அதன் பிரம்மாண்டத்திற்கு முன்
அண்டமே சிறியதாய் தோன்றலாம்
பேருந்தின் சாளர ஓர இருக்கையில் அமர்ந்து
உன் பிரிவை நினைத்து வாடுகையில்
மெலிதாய் இதழ் புன்னகைக்கும்
நீயும் என் பிரிவால் வாடுகிறாய் என நினைத்து
அத்தனை மகிழ்ச்சியிலும் மனம்
உன்னை நினைத்து கண் கலங்க வைக்கும்
உன் அருகாமையை விரும்பி
தூரங்கள் அதிகமாய் இருக்கலாம்
அந்தத் தூரங்களைக் காதல் தான் இணைக்கிறது
காதலை விளக்க முடிவதில்லை சொற்களால்
காதலின் உன்மத்தங்களைச் சொற்கள்
தான் விளக்கும்
காதலுக்கு அடுத்த படி திருமணமில்லை
காதலுக்கு அடுத்த படி பிரிவு தான்
பிரிவு தான் காதலை உணர்த்தும்
பிரிவு தான் வலி கொடுக்கும்
பிரிவு தான் காதலை வளர்க்கும்
பிரிவு தான் கலங்க வைக்கும்
சேர்ந்த காதலைவிடப்
பிரிந்த காதலுக்குத் தான்
ஆயுள் அதிகமென்பார்கள்
காதலுக்கு ஏது வயது
அழிவற்றது அது
முடிவற்றது
காமமில்லாக் காதலில்லை என்பார்கள்
காதலில்லாவிட்டால் காமமே இல்லை
மனங்கள் இணைந்த பின்
மெய்கள் இணைவது அத்தனை அசுவாரசியம்