மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா கவிஞர் இரா இரவி
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி
சி .வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் தந்த தலைப்பு
தமிழ்மொழிப்பற்று கொள்தமிழா !
கவிஞர் இரா. இரவி.
******
தமிழ்மொழி பற்று கொள் உன்னை உயர்த்தும்
தமிழ்மொழிக்கு வாழ்நாளை நீட்டிக்கும் ஆற்றலுண்டு!
எந்த மொழியும் கற்றுக்கொள் தமிழ் மீது பற்றுக்கொள்
எந்த மொழியும் நமது தமிழ்மொழிக்கு ஈடாகாது!
ஒழுக்கம் கற்பிக்கும் உயர் தனிச் செம்மொழி
உயர்ந்த பண்பாடு பயிற்றுவிக்கும் பண்டைத் தமிழ்!
தமிழ்மொழிப்பற்று நெஞ்சத்தில் நீங்காது இருந்தால்
தமிழ்க்கொலையை என்றும் நீ அனுமதிக்க மாட்டாய்!
தமிழா நீ பேசுவது தமிழா? காசி ஆனந்தன் வரிகளை
தமிழா நீ நினைத்துப் பார்த்து நீக்கிடு தமிங்கிலம்!
பிறமொழி கலந்து பேசுவதும் எழுதுவதும் குற்றம்
பைந்தமிழைச் சிதைப்பது முறையோ? தகுமோ?
தமிழை தமிழாகப் பேசிட தமிழருக்குத் தெரியவில்லை
தமிழர் தவிர மற்றவர் தாய்மொழிப் பற்றுடன் உள்ளனர்
மலையாளியும் மலையாயும் மலையாளத்தில் பேசுகின்றான்
மடையன் தமிழன் தான் ஆங்கிலத்தில் பேசுகின்றான்
ஆங்கிலத்தில் பேசுவது பெருமையென்று கருதுகின்றான்
ஆங்கிலத்திற்கும் மூத்த மொழி தமிழ் உணர் மறுக்கிறான்!
உலகமொழி ஆங்கிலம் அல்ல தமிழ் என்பதை உணர்
உலகம் முழுவதும் ஒலிக்கும் மொழி தமிழ் உணர்!
வைரக்கல்லை வெறுங்கல் என்பது சரியா?
வளமான தமிழை மதிக்காமல் இருப்பது முறையா?
கூழாங்கல்லை வைரமென்று உரைப்பது பொய்யே
கூறுகெட்டதனமாக வடமொழியைக் கொண்டாடுவது பிழையே!
ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளுக்கும் சொற்களை
அள்ளி வழங்கிய ஒரே மொழி ஒப்பற்ற தமிழ்!
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சொன்ன ஆய்வை
மொழி ஆய்வாளர்கள் முன்மொழிகின்றனர் முதல்மொழி தமிழ்!
அமெரிக்காவின் ஆய்வாளர் உரைக்கின்றார் சேருங்கள்
அனைத்து மொழிகளுக்கும் முதல்மொழி அன்னைத் தமிழ்மொழி!
அயலவர் உணர்ந்து உள்ளனர் தமிழின் அருமையை
அருமைத்தமிழா! தமிழ்மொழிப் பற்றுகொள் உயர்வாய் நீ!
******